Election bannerElection banner
Published:Updated:

என்ன செய்கிறார் சசிகலா?

சசிகலா
சசிகலா

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தமிழகத்துக்குள் நுழைந்தது முதல் 14 நாள்கள் (பிப்ரவரி 22 வரை) சசிகலா தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, மருத்துவர்களின் அட்வைஸ் என்று சொல்கிறார்கள்.

சசிகலாவின் எண்ண ஒட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது `நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் கட்டுரை வெளியாகிவருகிறது. அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் சமீபத்தில வெளியான ஒரு கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியது.

அதில், ``கழகம் எனும் கோயிலில் மூலவரே முதன்மையானவர். உற்சவர் வெளியேறும் வேளை வந்துவிட்டது...” என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. இதில், மூலவர் - சசிகலா என்றும், உற்சவர் - எடப்பாடி பழனிச்சாமி என்கிற பொருள்படும் வகையிலும் எழுதப்பட்டிருந்தது.

சசிகலாவிடம் எடப்பாடி கோஷ்டியினர் சரணடைய வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தவண்ணம் இருக்கிறார்கள். ஆனால், கட்சிப் பிரமுகர்கள் யாருக்கும் சசிகலா இதுவரை அப்பாயயின்ட்மென்ட் தரவில்லை. எப்போது சந்திப்புகளை நிகழ்த்துவார் என்றும் தெரியவில்லை.

தனிமையில் சசிகலா

சசிகலா
சசிகலா

சசிகலாவைப் பொறுத்தவரை, கடந்த 11 நாள்களாக சென்னை தி.நகர் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார். ஏற்கெனவே அவரிடம் வேலை பார்த்த பி.ஏ-க்கள் நான்கு பேர் மீண்டும் தற்போது வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தமிழகத்துக்குள் நுழைந்தது முதல் 14 நாள்கள் (பிப்ரவரி 22 வரை) சசிகலா தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, மருத்துவர்களின் அட்வைஸ் என்று சொல்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு, சசிகலாவின் அண்ணி இளவரசியின் பிறந்தநாள் வந்தது. அன்று, தனது குடும்பத்தினர் சகிதம் சசிகலாவை மரியாதையின் நிமித்தம் சந்தித்துவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.

ராஜம் அம்மாளின் வருத்தம்!

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, சிவகங்கையைச் சேர்ந்த ராஜம் அம்மாள் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தார். வயதானவர். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த உணவை சமைத்துக் கொடுப்பார். பல வருடங்களாக ராஜம்மாள் சமையல் பணி மேற்பார்வையாளராக இருந்துவந்தார். ஜெயலலிதா இறந்ததும், அடுத்து என்ன செய்வது என்று குழம்பிப்போனார். உடனே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராஜம் அம்மாளுக்கு கீழ்ப்பாக்கம் அரசுக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு தந்து உதவினார். அவருக்கு வேண்டிய செலவுகளையும் செய்தார்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

முதல்வர் எடப்பாடியும் தன் பங்குக்கு ராஜம் அம்மாளுக்கு உதவினாராம். இந்தநிலையில், சசிகலா சென்னை வருவதைக் கேள்விப்பட்டு, அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார். சசிகலாவும் மரியாதையின் நிமித்தம் பேசி அனுப்பிவிட்டாராம். தன்னை மீண்டும் சமையல் பணி மேற்பார்வையாளராக சசிகலா ஆக்குவார் என்று எதிர்பார்த்துத்தான் சென்றாராம். ஆனால், சசிகலா ஏதும் சொல்லாமல் அனுப்பிவிட்டதில் ராஜம் அம்மாள் வருத்தததில் இருக்கிறாராம். சசிகலாவை ராஜம் அம்மாள் சந்தித்துவிட்டு வந்த விஷயம் கேள்விப்பட்டு கடும் கோபத்தில் இருக்கிறார்களாம் எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும்!

சசிகலா பெயரைத் தவிர்க்கிறாரா... எடப்பாடியின் எதிர்ப்பு அரசியல் எப்படிப்பட்டது?

பூங்குன்றன் எங்கே?

ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, ஆன்மிக வழியில் பல்வேறு கோயில்களுக்குப் போய்வருகிறார். எந்தெந்தக் கோயிலுக்குச் சென்றாலும், அங்கே அவர் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ட்விட்டர் பக்கங்களில் பதிவது அவர் வழக்கம். அப்படி ஒரு பதிவில்,``விசுவாசம் என்னுடைய தந்தையிடமிருந்து வந்தது. இன்றைக்குச் சிலர் எனக்குப் பாடம் எடுக்க நினைப்பதுதான் வேதனை! எனக்குப் பதவி, பணம்மீது ஆசை இல்லை. கழகத்தின் மீதுகொண்ட காதல், தொண்டர்கள்மீது கொண்ட பாசம்... இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு போராடுகிறேன்... தவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் ஏதோ மன வருத்தத்தில் இருப்பதாக அ.தி.மு.க முக்கியப் பிரமுகர்கள் பேசிக்கொள்கின்றனர்.

ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்
ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்

இன்னொரு பதிவில், ``ஒருமுறை நரசிம்மர் கோயிலுக்குப் போயிருந்தபோது, அங்கிருந்த பட்டர் உங்களிடம், `இணைந்து நின்றால்தான் தி.மு.க-வை வீழ்த்த முடியும் என்பது பதவி இல்லாத தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது' என்று சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் படித்த சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் சிலர் பூங்குன்றனைத் தேடினர். ட்விட்டரில் தலைகாட்டும் பூங்குன்றனை நிஜத்தில் சந்தித்துவிட முயன்றனர். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை. காசிக்குச் சென்று பிராத்தனை செய்யப்போயிருப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. காசியிலிருந்து திரும்பாமல் அங்கேயே முகாமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அவர் ஏன் தமிழகம் வரவில்லை என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.

மொத்தத்தில் சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு வதந்திகளும் யூகங்களும் உலவிவரும் வேளையில், அவரே முடிவெடுத்துப் பேசினால் ஒழிய எதுவும் வெளிச்சத்துக்கு வரப்போவதில்லை.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு