Published:Updated:

ஆளுநர் - தலைமைச் செயலாளர் சந்திப்பு... பின்னணி என்ன?! - லாக்டௌனுக்கு வாய்ப்புள்ளதா?

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஏப்ரல் 28-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசியது, லாக்டௌனா... என்ற பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.

ஆளுநர் - தலைமைச் செயலாளர் சந்திப்பு... பின்னணி என்ன?! - லாக்டௌனுக்கு வாய்ப்புள்ளதா?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஏப்ரல் 28-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசியது, லாக்டௌனா... என்ற பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.

Published:Updated:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தார். அன்றைய தினம் முதல், மே 2-ம் தேதி முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை தேர்தல் ஆணையத்தின் கன்ட்ரோலில்தான் ஐந்து மாநிலங்களும் இருக்கும். முதல்வர், எந்த ஓர் உத்தரவும் பிறப்பிக்க முடியாதபடி காபந்து முதல்வராகவே செயல்பட்டுவருகிறார். இதனால், ஒட்டுமொத்த நிர்வாகமும் தற்போது அதிகாரிகளிடம்தான் இருக்கிறது. மாநிலத்தில் உச்ச அந்தஸ்தில் இருப்பவர் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் என்றால் மிகையாகாது.

இந்தநேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பரவிவருவதால், ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, உத்தரவுகளைப் பிறப்பிப்பது என எல்லாமே தலைமைச் செயலாளர் கைகளில்தான் இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அனைத்து மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, கொரோனா நிலவரம் குறித்த அறிக்கையைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, தமிழக நிலைமையை அறிந்துகொள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனை நேரில் அழைத்தார்.

ராஜீவ் ரஞ்சன்
ராஜீவ் ரஞ்சன்

அழைப்பின் பேரில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி திரிபாதி ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறித்தும், அதை அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பது குறித்தும், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மருந்துகளின் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் ராஜீவ் ரஞ்சனும், ராதாகிருஷ்ணனும் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர். இரவு மற்றும் ஞாயிறுதோறும் அமலில் இருக்கும் ஒரு நாள் லாக்டௌனில் போலீஸாரின் பாதுகாப்புப் பணிகள் குறித்து திரிபாதி எடுத்துரைத்தார்.

பேச்சின் ஊடே முதற்கட்டமாக 15 நாள் லாக்டௌன் அமல்படுத்துவது சாத்தியப்படுமா? கடந்த ஆண்டுபோல தொடர்ச்சியாக அதை நீட்டிக்கச் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, வாழ்வாதாரத்துக்கு என்ன வழி செய்ய முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தை முடிந்து அதிகாரிகள் சென்ற பின்னர் மாலையில் ஆளுநர் மாளிகையிலிருந்து பத்திரிகைச் செய்தி வெளியானது.

அதில், “அதிகாரிகள் ஆளுநருக்கு நிலைமையை எடுத்துரைத்தார்கள். மருத்துவர்கள், காவல்துறையினர், அதிகாரிகள், முன்களப் பணியாளர்கள் என அனைவரையும் ஆளுநர் பாராட்டினார். கொரோனாவுக்கான மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சுகாதாரத்துறை தொடர்ச்சியாக இதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதால், அதற்கான ஏற்பாடுகளையும், சிறப்பு முகாம்களையும் அரசு ஏற்படுத்திட வேண்டும் என்றார். கொரோனா பரிசோதனைகளைத் துரிதப்படுத்தவும், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் பெட் (சிகிச்சை) கிடைப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கொரோனா தடுப்புப் பணிகளுக்கு முன்னாள் ராணுவ வீரர்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அரசைக் கேட்டுக்கொண்டார். மேலும், மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டுமென்றும், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, சானிடைஸரைப் பயன்படுத்துவது போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை முறையாகப் பேணிட வேண்டுமென்றும் ஆளுநர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

பெயர் சொல்ல விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, ``மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று ஊரடங்கு தளர்த்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், நீதிமன்றம் வைத்த குட்டால் அதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அரசிடம் தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. மேலும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு ‘நெகடிவ்’ சான்றிதழ்களோடு வரும் ஏஜென்ட்டுகளும், வேட்பாளர்களுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. இந்தச் சூழலில், மே 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மே 15-ம் தேதி வரை முதற்கட்டமாக முழு லாக்டௌனை அமல்படுத்தலாமா என அதிகாரிகள் பரிசீலித்துவருகிறார்கள். அதேநேரம், மே 2 வாக்கு எண்ணிக்கை அன்று மாலையே முடிவுகள் வந்து, புதிய அரசு குறித்த செய்தியும் வந்துவிடும். அதனால், புதிய அரசு அமைந்ததும் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடலாம் என்றும் சில அதிகாரிகள் கருத்துச சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் மே 2-ம் தேதி தெரிந்துவிடும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism