Published:Updated:

அதிருப்தி ஒருபக்கம்... புதிய பதவி மறுபக்கம்! - என்னவாகும் மதிமுக எதிர்காலம்?

வைகோ - துரை வைகோ

வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சியிலேயே வாரிசு அரசியல் புகுந்திருப்பதுதான் காலத்தின் கோலம்!

அதிருப்தி ஒருபக்கம்... புதிய பதவி மறுபக்கம்! - என்னவாகும் மதிமுக எதிர்காலம்?

வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சியிலேயே வாரிசு அரசியல் புகுந்திருப்பதுதான் காலத்தின் கோலம்!

Published:Updated:
வைகோ - துரை வைகோ

ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணிச் செயலாளர் பாரத மணி ஆகிய ஐந்து பேர் போர்க்கொடி தூக்கினர். `வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட ஒரு கட்சியிலேயே வாரிசு அரசியல் எழலாமா?’ என்று தலைமைக்கு எதிராகப் பேசி, தனி ஆலோசனைக் கூட்டத்தையும் சிவகங்கையில் நடத்தினார்கள்.

மதிமுக அதிருப்தியாளர்கள் கூட்டம்
மதிமுக அதிருப்தியாளர்கள் கூட்டம்

சில மாதங்களுக்கு முன்பு நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் தலைமை நிலையச் செயலாளராக அமர்த்தப்பட்டார் துரை வைகோ. அப்பொறுப்பை மேலும் மெருகேற்றி, `தலைமைக் கழகச் செயலாளர்’ என்று பெயர்சூட்டி, அந்தப் பொறுப்புக்கு பொதுக்குழு ஒப்புதலும் பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதை எதிர்த்துத்தான் அதிருப்தி மா.செ-க்கள், நிர்வாகிகள் தனிக்கூட்டம் போட்டனர். இந்த திடீர் பிரச்னையால் மார்ச் 28-ம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுக்குழு, மார்ச் 23-ம் தேதி முன்கூட்டியே நடத்தப்பட்டது. அதில், தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோவுக்கும், அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளித்தும் ஒப்புதல் வழங்கப்பட்டது. பொதுக்குழு முடிந்து பேட்டியளித்த வைகோ, அதிருப்தியாளர்களை `துரோகிகள்’ என்று வறுத்தெடுத்தார். ஆனால், இந்நேரம் வரை அவர்களைக் கட்சியைவிட்டு நீக்கவில்லை. இது போன்ற பிரச்னை முதன்முறையாக எழுவதால், வைகோவின் அப்ரோச் இதில் மாறுபட்டுள்ளது என்றே சொல்லலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய பொறுப்பு குறித்தும், அதிருப்தியாளர்கள் குறித்தும், மதிமுக எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் துரை வைகோவிடம் கேட்டோம். “'என்னைத் தேர்வு செய்ததற்கு எதிராக இப்போது குரல் எழுப்பிவரும் ஐந்து பேர், கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்மட்டக்குழுக் கூட்டத்தின்போதே எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான். எதிர்ப்பு தெரிவித்திருக்கும் இந்த ஐந்து பேருக்கும் கட்சியின் சார்பாக நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்கப்படும். அதற்குப் பிறகுதான் என்ன நடவடிக்கை என்பதை கட்சி முடிவு செய்யும். கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஐந்து பேர் மட்டும் தி.மு.க-வுடன் கட்சியை இணைப்பது குறித்து விஷமத்தனமாகப் பேசிவருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது போட்டியிட சீட் கேட்டு கிடைக்கப்பெறாதவர்கள்தான் இவர்கள். சீட் கிடைக்கவில்லை என்றதுமே, 'கம்யூனிஸ்ட் கட்சியைவிடவும் வலிமை வாய்ந்த நமக்கும் ஆறு சீட் தானா... கட்சியை தி.மு.க-வில் அடமானம் வைத்துவிட்டார்கள். எனவே இந்தக் கூட்டணி தேறாது, வெற்றிபெறாது' என்றெல்லாம் சொல்லிக் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தினர்.

துரை வைகோ
துரை வைகோ

அடுத்து, இரண்டு பட்டியலின வேட்பாளர்களைக் கட்சி அறிவித்ததும், 'இரண்டு வேட்பாளர்களைப் பட்டியலின சமுதாயத்துக்கு எப்படி ஒதுக்கலாம்' என்று கேட்டு சாதிரீதியாகவும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயன்றனர். தேர்தலின்போதும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வேலை செய்யாமல் இருந்ததோடு, அவர்களது வெற்றியைத் தடுக்கும் வகையிலும் சதி செய்தனர். இவர்களது பின்னணியில் இரண்டு சூத்ரதாரிகள் இருக்கின்றனர். அவர்கள்தான் மறைந்திருந்து இவர்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது பெயர்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. காலத்தின் போக்கில் அவர்களே வெளிப்பட்டுவிடுவார்கள். கட்சியில் 65 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருசிலர் போவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை!” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்த சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பனிடம் பேசினோம். “வைகோ குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் மொத்தமும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க நான் வற்புறுத்தியதாகச் சொல்கிறார். ஆனால், தி.மு.க-வுடன் சேரலாம், தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்று சொன்னதே நான்தான். எல்லாக் கட்சியிலும் இப்படித்தான் அதிருப்தியாளர்களைக் கையாளுகிறார்கள். பொடா சிறைவாசம் தொட்டு நான் வைகோவோடு பயணித்துவருகிறேன். நேற்று வரை தியாகி, இன்று துரோகியா?

துரை வைகோ- வைகோ
துரை வைகோ- வைகோ

வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, இன்று அவரின் வாரிசு விஷயத்தில் சமரசத்துக்கு உள்ளாகிவிட்டார். குடும்ப நிர்பந்தம், உடல்நிலைக் கோளாறு, இயலாமை இவையெல்லாம்தான் வைகோவை இப்படிச் செயல்படவைத்துள்ளது. எங்களது வாழ்க்கை தற்போது சராசரி வாழ்க்கையைவிட மோசமாகிவிட்டது.

நாங்கள் ஐந்து பேர் என்றே சொல்லிவருகிறார்கள், அப்படியல்ல, கட்சியிலிருக்கும் 12 பேர் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறோம். கட்சியிலிருந்து அவர்களாக நீக்கும் வரை நாங்கள் பொறுமை காப்பதாக முடிவெடுத்திருக்கிறோம்” என்றவரிடம், ``யாரோ இரு சூத்திரதாரிகள் உங்களை பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்று துரை சொல்கிறாரே?” என்று கேட்டோம்.

மதிமுக கூட்டம்
மதிமுக கூட்டம்

அதற்கு பதிலளித்த செவந்தியப்பன், “வாரிசு அரசியல் வேண்டாம், துரை வைகோ வேண்டாம் என வெளிப்படையாக நாங்கள் பேசிவருகிறோம். எங்களை ஏன் இன்னொரு சக்தி இயக்க வேண்டும்? பொய்யாகவும், திசைதிருப்பும் வகையிலும் பேசுகிறார்கள். எல்லோரையும் ஒதுக்கிவிட்டு, துரை அவர் கையில் கட்சியை எடுத்துக்கொள்ள நினைக்கிறார். இப்படிப் பேசுவதைப் பார்த்தால் பெரிய அரசியல்வாதியாக மாறிவிட்டார் துரை என்று சொல்லலாம். ம.தி.மு.க-வின் எதிர்காலம் என்னவாகுமோ தெரியவில்லை” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism