Published:Updated:

எம்.எல்.ஏ கே.பி.சங்கரின் பதவியைப் பறித்த திமுக தலைமை! - திடீர் நடவடிக்கையின் பலே பின்னணி!

கே.பி.சங்கர் - திமுக

தி.மு.க திருவொற்றியூர் மேற்குப் பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.எல்.ஏ கே.பி.சங்கர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தலைமையின் இந்த திடீர் நடவடிக்கைக்குக் காரணம் என்ன..?

எம்.எல்.ஏ கே.பி.சங்கரின் பதவியைப் பறித்த திமுக தலைமை! - திடீர் நடவடிக்கையின் பலே பின்னணி!

தி.மு.க திருவொற்றியூர் மேற்குப் பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.எல்.ஏ கே.பி.சங்கர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தலைமையின் இந்த திடீர் நடவடிக்கைக்குக் காரணம் என்ன..?

Published:Updated:
கே.பி.சங்கர் - திமுக

மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரரான கே.பி.சங்கர் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாகவும், திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளராகவும் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், நேற்று காலை சங்கர் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக திடீரென தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளானது.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

கட்சித் தலைமையின் இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணி குறித்து கே.பி.சங்கர் தரப்பில் விசாரித்தோம். ``திருவொற்றியூர் நடராஜன் சாலையில், சென்னை மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்தது. புதன்கிழமையன்று தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் அதை ஆய்வுசெய்யச் சென்றார் சங்கர். ஏற்கெனவே இருக்கும் சாலையை எந்திரம் கொண்டு வாரி எடுத்துவிட்டு, அதன்மீது புதிய சாலை அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அதிகாரிகள் அதன்படி செய்யாமல் பழைய சாலை மீதே புதிய சாலையை அமைக்கத் தொடங்கினர். இதைத் தட்டிக் கேட்டார் சங்கர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது, அதிகாரிகளுக்கும் சங்கர் ஆட்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைத் திரித்து அரசு அதிகாரியை சங்கர் அடித்துவிட்டதாகக் கதைகட்டிவிட்டார்கள். இது தலைமை வரை சென்று, அவர்களும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் கட்சிப் பதவியைப் பறித்துவிட்டனர். இதன் பின்னே உள்ள உண்மைத்தன்மையை முதல்வர் ஸ்டாலினிடம் சங்கர் நேரடியாக எடுத்துக் கூறியிருக்கிறார். மீண்டும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எம்.எல்.ஏ சங்கர் மீதான இந்த நடவடிக்கை குறித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், `சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரின் ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர். 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது!' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சங்கர் மீதான நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அறிவாலய முக்கியப்புள்ளி ஒருவர் நம்மிடம் விளக்கினார். ``கே.பி.சங்கர் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கே.பி.சாமிக்காகத்தான் சங்கருக்கு இந்த வாய்ப்பை வழங்கினார் ஸ்டாலின். தலைநகர் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும் கட்சியில் பகுதிச் செயலாளர் பதவியில்தான் இருந்தார்.

தி.மு.க-அண்ணா அறிவாலயம்
தி.மு.க-அண்ணா அறிவாலயம்

தொகுதிக்குள் நடக்கும் கட்டடப் பணி, சாலைப் பணி என பலவற்றிலும் எம்.எல்.ஏ-வை கவனித்துவிடுவார்கள். ஆனால், சில முறை மாவட்டச் செயலாளரை ஒப்பந்ததாரர்கள் நேரடியாக கவனித்துவிடுவதால், அவருக்குக் கீழே இருக்கும் பகுதிச் செயலாளர்களை கவனிக்க மாட்டார்கள்.

சாலைப் பணி
சாலைப் பணி

சம்பவம் நடந்த அன்றுகூட தன்னை கவனிக்கவில்லை என்று மாநகராட்சி செயற்பொறியாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் எகிறியிருக்கிறார் சங்கர். அவர்களோ, `மாவட்டச் செயலாளர்களை கவனித்துவிட்டோம்' என்று சொல்ல, 'நான்தான் தொகுதி எம்.எல்.ஏ. என்னையும் கவனிக்க வேண்டும்' என்று சங்கரும், அவர் ஆட்களும் வாக்குவாதம் செய்து சண்டையிட்டிருக்கின்றனர். வாய்த்தகராறு கைகலப்பானதால், பொறியாளரை சங்கர் தாக்கியதாகச் சொல்கிறார்கள்.

கே.பி.சங்கர்
கே.பி.சங்கர்

இன்னொரு தகவலும் ஓடுகிறது, அதாவது தலைநகர் எம்.எல்.ஏ-க்களின் அட்ராசிட்டி குறித்து ஜூ.வி-யில் ஒரு செய்தி வெளியிட்டீர்கள். அதில் அந்த ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் மீது சொல்லப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் சங்கருக்கும் பொருந்தும். தொகுதியில் கட்டப்பட்டுவரும் கட்டடங்களில் கிச்சனுக்கு இவ்வளவு எனக் கேட்டிருக்கிறார். தொழிலதிபர்களிடமும், தொகுதியிலுள்ள தொழிற்சாலைகளிலும்கூட கமிஷன் கேட்டதாகப் புகார் வந்துள்ளது. நேரம் பார்த்துக்கொண்டிருந்த தலைமைக்கு சங்கரே நேரத்தையும் காரணத்தையும் கொடுத்துவிட்டார். உடனடியாக கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கான ஓர் எச்சரிக்கை மணி என்றுதான் சொல்ல வேண்டும்" என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism