Published:Updated:

சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா; முடக்கியதன் பின்னணி இதுதான்!

சசிகலா - பையனூர் பங்களா
சசிகலா - பையனூர் பங்களா

சசிகலாவுக்குத் தொடர்புடைய பையனூர் பங்களா வாசலில் நோட்டீஸ் ஒட்டி சொத்தை முடக்கியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

எப்போதெல்லாம் சசிகலா அரசியலில் குதிக்கத் தயாராகிறாரோ, அப்போதெல்லாம் வருமான வரித்துறையின் ரெய்டில் சிக்கிய ஆவணங்களில் ஒன்றை எடுத்துவிடுவார்கள். சொத்தை முடக்கியதாகச் செய்திகள் வரும். அப்படித்தான், தற்போது சசிகலா, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு வருவார். எடப்பாடி பழனிசாமி மீது அவர் பகிரங்க சந்தேகத்தைக் கிளப்பப்போகிறார் என்று சசிகலா தரப்பினர் சொல்ல ஆரம்பித்தனர். இன்று (செப்டம்பர் 8) மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சசிகலா தொடர்புடையய பையனூர் பங்களா வாசலில் நோட்டீஸ் ஒட்டி சொத்தை முடக்கியிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிலம், தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்டதாக பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டு சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பையனூர் பங்களா
பையனூர் பங்களா

அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், சுமார் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கினர். சென்னை போயஸ் கார்டனிலுள்ள 10 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட ரூ. 300 கோடி ரூபாய் சொத்துகளைக் கண்டறிந்து பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கினர். அடுத்தகட்டமாக, இன்று ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களாவை முடக்கியிருக்கிறார்கள். இதுவரை 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடக்கிறது. விசாரணை முடிவின் அடிப்படையில், முடக்கப்பட்ட சொத்துகள் உரிமையாளரிடம் திருப்பித் தரப்படும் அல்லது அரசு ஏலம் விடும்.

Vikatan

இது பற்றி சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் கேட்டபோது, ``அது வெறும் தகவல் அறிவிப்பு நோட்டீஸ்தான். தற்காலிக முடக்கம்தான். பங்களாவைப் பயன்படுத்தலாம். ஆனால், விற்கவோ, அடகுவைக்கவோ முடியாது. அவ்வளவுதான். 1994-ல் வாங்கப்பட்ட இடம் அது. அப்போது 23 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சொத்தை இப்போது திடீரென்று 100 கோடி ரூபாய் அளவுக்குச் சொல்வதே தவறு. அதாவது, 27 வருடங்கள் கழித்து இப்போது பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததாகச் சொல்கிறது வருமான வரித்துறை. ஆனால், பினாமி தடுப்புச் சட்டத் திருத்தம் வந்ததே 2016-ம் ஆண்டில்தான். பின்னோக்கிப் பல ஆண்டுகள் போய் இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள. பையனூர் பங்களா பற்றி நீதிபதி குன்ஹா தீர்ப்பிலோ, உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ அதை முடக்கும்படி குறிப்பிடப்படவில்லை. இருந்தும், வருமான வரித்துறையினர் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். முறைப்படி இதற்கு நாங்கள் பதில் தருவோம்'' என்றார்

அடுத்த கட்டுரைக்கு