Published:Updated:

ஆம் ஆத்மி 'சுனாமி'... துடைத்தெறியப்பட்ட கட்சிகள்! - எப்படிச் சாத்தியமானது இந்த வெற்றி?

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ( ANI )

பஞ்சாப்பில் அடைந்த அபரிமிதமான வெற்றியால், காலம் காலமாக அம்மாநிலத்தில் கோலோச்சிய அரசியல் கட்சிகளைத் துடைத்தெறிந்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆம் ஆத்மியின் வெற்றி எப்படிச் சாத்தியமானது?

ஆம் ஆத்மி 'சுனாமி'... துடைத்தெறியப்பட்ட கட்சிகள்! - எப்படிச் சாத்தியமானது இந்த வெற்றி?

பஞ்சாப்பில் அடைந்த அபரிமிதமான வெற்றியால், காலம் காலமாக அம்மாநிலத்தில் கோலோச்சிய அரசியல் கட்சிகளைத் துடைத்தெறிந்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆம் ஆத்மியின் வெற்றி எப்படிச் சாத்தியமானது?

Published:Updated:
ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ( ANI )

1966-ல் கிழக்கு பஞ்சாப் மாநிலம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபோது உருவானதுதான் இப்போதிருக்கும் பஞ்சாப் மாநிலம். அப்போது தொடங்கி, கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகளே மாறி மாறி அந்த மாநிலத்தை ஆண்டுவந்துள்ளன. இந்த வழக்கத்தை உடைத்து, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த பக்வந்த் மான் மாநிலத்தின் முதல்வராக அரியணை ஏறவிருக்கிறார். வரும் மார்ச் 16-ம் தேதி பதவியேற்பு விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் இந்த வளர்ச்சி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு பத்து வருடங்களே ஆகியிருக்கும் நிலையில், டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது ஆம் ஆத்மி. குறிப்பாக, பஞ்சாப்பில் அடைந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் சிலவற்றைப் பட்டியலிடுகிறார்கள் வியூக வகுப்பாளர்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்-  பக்வந்த் மான்
அரவிந்த் கெஜ்ரிவால்- பக்வந்த் மான்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வியூக வகுப்பாளர்கள் சிலர், ``பஞ்சாப் மாநிலத்தில் காலம் காலமாக ஆட்சி செய்த காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம் கட்சிகளை அந்த மாநில மக்கள் விரும்பவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. 2017-ல் 77 இடங்களில் வெற்றிபெற்றிருந்த காங்கிரஸ், இந்தத் தேர்தலில் வெறும் 18 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. சிரோன்மணி அகாலிதளம் கட்சி மூன்று இடங்களை வென்றிருக்கிறது. பண்ணையார் மனநிலையிலிருந்த கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கியிருந்தது உண்மைதான். அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் பலர் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினர். அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், பிரசாரத்தில் கவனம் செலுத்தியது ஆம் ஆத்மி கட்சி. சமூக வலைதளங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டது. இது, பிரசாரத்தின் போக்கையே மாற்றியமைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பஞ்சாப்பின் மால்வா பகுதியில், தேரா சச்சா செளதா அமைப்பைப் பின்பற்றுபவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். இந்த அமைப்பின் தலைவரான பாபா ராம் ரஹீம் ஒரு பாலியல் குற்றப் புகாரில் ஹரியானா சிறையில் உள்ளார். தேர்தலுக்குச் சில தினங்களே இருந்த நிலையில், பாபா ராம் ரஹீமை ஜாமீனில் அனுப்பியது ஹரியானாவை ஆளும் பா.ஜ.க அரசு. பஞ்சாப் தேர்தலை மனதில்வைத்து, ஓட்டு அரசியலுக்காக பா.ஜ.க இப்படிக் காய்நகர்த்துவதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், பா.ஜ.க எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. பஞ்சாப்பின் 117 சீட்டுகளில், 69 சீட்டுகள் கொண்ட மால்வா பகுதியில்தான், அதிக எம்.எல்.ஏ-க்களை வென்றிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. பா.ஜ.க-வின் பிளவுபடுத்தும் யுக்திகள் உடைந்து போய்விட்டன. அதேபோல, தேரா பியாஸ் என்கிற அமைப்பினர் பஞ்சாப் சீக்கியர்கள் மத்தியில் மிகப் பிரபலம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை தன் இல்லத்தில் சந்தித்தார் பிரதமர் மோடி. இதுவும் வாக்கு அரசியலுக்குப் பயன்படவில்லை.

பஞ்சாப் தேர்தலைச் சந்தித்த தலைவர்கள்
பஞ்சாப் தேர்தலைச் சந்தித்த தலைவர்கள்

வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஒரு வருடத்துக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். ஐந்து மாநிலத் தேர்தல் நெருங்கியதால், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. இந்த வெற்றி, பஞ்சாப்பிலுள்ள சராசரி மக்களுக்கு ஒருவித உத்வேகத்தை அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். 'மாற்றம் வேண்டும்' என்கிற மனநிலைக்கு மக்கள் தயாராகினர். அதை ஆம் ஆத்மி கச்சிதமாகத் தன் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது. 2.82 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது பஞ்சாப். இருந்தும், 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது ஆம் ஆத்மி கட்சி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, போதைப்பொருள் மாஃபியா ஒழிக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளும் வாக்காளர்களை ஈர்த்தன. இவையெல்லாம் சேர்ந்துதான், பஞ்சாப் மாநில வரலாற்றிலேயே எந்தக் கட்சிக்கும் கிடைக்காத வகையில், 92 எம்.எல்.ஏ-க்கள் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ளனர்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வெற்றியால் குஷியாக இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். 'டெல்லி மாடல் வளர்ச்சி' என்று அவர் முன்வைத்த பிரசாரம், பஞ்சாப்பில் 42 சதவிகித வாக்குகளையும், கோவாவில் 6.77 சதவிகித வாக்குகளையும் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த வெற்றி மூலம், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி-க்கள் அமரவுள்ளனர். வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லியின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ``இதையெல்லாம், தன்னுடைய பிரதமர் கனவுப் பாதைக்கான அடித்தளமாகவே பார்க்கிறார் கெஜ்ரிவால். தேசிய அளவில், பா.ஜ.க-வுக்கு மாற்றான கட்சியாகத் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதால், காங்கிரஸ் கட்சிக்குச் செல்லக்கூடிய வாக்குகளை விழுங்குகிறது ஆம் ஆத்மி. பஞ்சாப், கோவா தேர்தல்களில் அதுதான் நடந்தது. இனி மற்ற மாநிலங்களிலும் கவனம் செலுத்தவுள்ளனர். மார்ச் 12 முதல் 15 வரை குஜராத்தில் திரங்க யாத்திரையைத் தொடங்கவிருக்கிறது ஆம் ஆத்மி. ஹிமாச்சலப் பிரதேசத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு மாற்றான ஒரு கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்றார்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஏற்கெனவே, பிரதமர் கனவில் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், சந்திரசேகர ராவ், உத்தவ் தாக்கரே, நிதிஷ் குமார் என தலைவர்கள் வரிசைகட்டும் நிலையில், அந்த லிஸ்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலும் இடம்பிடித்திருக்கிறார். அதேசமயம், பஞ்சாப் வெற்றி கெஜ்ரிவாலுக்குப் புது புத்துணர்ச்சியைத் தந்திருப்பதில் மறுப்பதற்கில்லை. "நகர்ப்புற மக்களுக்கான கட்சிதான் ஆம் ஆத்மி" என்கிற பிம்பத்தை உடைத்து, 'பஞ்சாப் விவசாயிகளும் ஏற்றுக்கொண்ட கட்சிதான் ஆம் ஆத்மி' என்று சொல்ல வைத்திருக்கிறார் கெஜ்ரிவால். முன்னாள், இந்நாள் முதல்வர்கள் பலரும் அந்தக் கட்சியிடம் தோற்றுப் போயிருப்பது, தேசிய அளவில் கெஜ்ரிவாலின் இமேஜை உயர்த்தியிருக்கிறது. தேசிய அரசியலுக்கு இந்த பிம்பம் கைகொடுக்குமா என்பதெல்லாம் போகப் போகத் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism