Published:Updated:

சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு பிரச்னை: ஸ்டாலின் அரசின் திட்டம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

குடியிருப்பை மொத்தமாக இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டி, அவற்றில் மக்களை மறுகுடியேற்றம் செய்யும் அளவுக்கு காலமோ, நிதியோ இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம் என இரு அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. சொந்த வீடு வாங்க முடியாத நிலையிலுள்ள ஏழை, எளிய ஆற்றோரங்களில், குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகளைக் கட்டி அவர்களை அதில் அரசு குடியமர்த்திவருகிறது. அப்படி ஏழை மக்களுக்காகக் கட்டப்பட்டதுதான் புளியந்தோப்பிலுள்ள கே.பி.பார்க் குடியிருப்பு வளாகம். 10 மாடிகளில் சுமார் 1,920 வீடுகள் உள்ளன. 100 வீடுகளில் மக்களும் குடியேறிவிட்டனர். இந்த நிலையில், திடீரென குடியிருப்புகளில் விரிசல் விழுந்தது. கையால் தட்டினால்கூட சுவர், ஸ்லாப் எல்லாம் பெயர்ந்து விழுந்தது பெரிய சர்ச்சையானது. உடனே அரசியல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் படையெடுத்தனர்.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன் சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசியபோது, ஐ.ஐ.டி பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெறப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். மேலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் - உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் - பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சென்னை ஐஐடி-யுடன் தொடர்புடைய CUBE (Centre for Urbanization, Building and Environment) என்ற நிறுவனத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கே.பி.பார்க் குடியிருப்பின் கட்டட மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யத் தொடங்கினர். செப்டம்பர் 15-ம் தேதி அன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வு மேம்பாட்டு வாரியத்திடம் முதற்கட்ட ஆய்வறிக்கையை அந்த நிறுவனம் சமர்ப்பித்து நேற்று (அக்டோபர் 4) கே.பி.பார்க் கட்டடத்தின் தரம் பற்றிய முடிவுகள் கொண்ட இறுதி ஆய்வறிக்கையை இன்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவிடம் சமர்ப்பித்திருக்கிறது. இந்தக் குழு அடுக்குமாடிக் கட்டடத்தின் தரம் குறித்து 100 இடங்களில் மாதிரிகள் எடுத்து, தரம் குறித்து 441 பக்கங்கள்கொண்ட அறிக்கையையும், 59 பக்க முன்சுருக்க அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

அறிக்கையில் என்ன இருக்கிறது, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? தி.மு.க மூத்த எம்.எல்.ஏ ஒருவரிடம் பேசினோம். ``இது ஒன்று மட்டுமல்ல, அ.தி.மு.க ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட பல குடியிருப்புகளையும் மொத்தமாக ஆய்வு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. முதலில் இந்த கே.பி.பார்க் குறித்த அறிக்கை பற்றி அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதைப் பொறுத்துதான் உள்ளது. தரமில்லாத கட்டுமானம் என்றுதான் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆற்று மணல் கொண்டு கட்டப்பட வேண்டும் என்று விதிகள் இருக்கையில், சுலபமாகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற போலி எம்-சாண்ட் மணலைக்கொண்டு கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

மேலும், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட சிமென்ட், இரும்புக்கம்பி, செங்கல் என எல்லாமே தரமுள்ளவைதானா என்று கட்டுமானப் பணியின்போது அமைச்சரோ, அதிகாரிகளோ ஆய்வு செய்திருக்க வேண்டும். ஓ.பி.எஸ் கட்சியில் தனது இருப்பை நிலைநாட்டவே போராடவேண்டியதாயிற்று. அதிகாரிகளும் கமிஷனைப் பெற்றுக்கொண்டு பெஞ்ச் தேய்க்கிறார்கள். ஆனது ஆகிவிட்டது, இனி ஒன்றும் செய்ய முடியாது. 1,900 குடியிருப்புகளில் வெறும் 100 குடும்பங்கள் மட்டுமே குடியேறியிருப்பதால், அவர்களையும் காலி செய்ய வைக்கலாமா என்று ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

கே.பி.பார்க்
கே.பி.பார்க்
'புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரம்' - சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள்!

அப்படி வெளியேற்றினால் அவர்களை எங்கே தங்க வைப்பது, குடிசையிலிருந்து மாறி கான்கிரீட் வீட்டுக்கு வந்தவர்களை மீண்டும் குடிசைக்கே அனுப்ப முடியுமா, அப்படியே வெளியே அனுப்பினாலும் எத்தனை வருடங்கள் இருக்க வைப்பது... போன்ற பல கேள்விகள் எழுகின்றன. அதேநேரம், வெளியேற்றிவிட்டு குடியிருப்பை என்ன செய்வது? பல நூறு கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பை இடிப்பதற்கே கோடிகள் செலவாகும். அந்த இடத்தில் மீண்டும் குடியிருப்பு, அதுவும் இதேபோல ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டுவது என்பது சாத்தியமான ஒன்றா என்றுகூடத் தெரியவில்லை. நிதி நிலைமை மோசமாக இருக்கும் இந்த நேரத்தில் இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதற்குப் பல நூறு கோடி ரூபாய் தேவை. நூறு குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம், குடிசை மாற்று வாரியத்தில் இல்லையென்றாலும் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கொடுத்துவிட்டு, இந்தக் கட்டடத்தை அப்படியே விட்டுவைப்பது என்பதுதான் அரசின் முடிவாக இருக்கும் என்று நினைக்கிறோம். இறுதி முடிவு முதல்வர் கைகளில்!” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு