Published:Updated:

`முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து!’ - எதிர்பார்ப்பில் தமிழகம்!

கையெழுத்திடும் ஸ்டாலின்
கையெழுத்திடும் ஸ்டாலின்

முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும் என்ற விவாதம் தற்போது தொடங்கி இருக்கிறது.

மே மாதம் 7-ம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல் கையெழுத்து எதற்கானதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புக் கூடியிருக்கிறது.

ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசியபோது, “ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னரும், புதிதாக பதவியேற்கும் முதல்வர் முதலில் எந்த திட்டத்திற்குக் கையெழுத்திடப் போகிறார்.. என்பதில் எதிர்பார்ப்பு கூடும். 2011-ல் வெற்றி பெற்ற ஜெயலலிதா வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் இலவசம், 500 டாஸ்மாக் கடைகள் மூடல் என பிரசாரத்தில் சொன்னதை தட்டாமல், முதல் கையெழுத்தாக இட்டுக்காட்டினார். அதேபோல், 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘பூரண மதுவிலக்குதான் தனது முதல் கையெழுத்து’ என்றார். ஆனால், அவர் ஜெயிக்கவில்லை என்பது வேறு.

ஐபேக் - ஸ்டாலின்
ஐபேக் - ஸ்டாலின்

2021 தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு உத்திகளைக் கையாண்ட ஸ்டாலின், இறுதியாக ஐபேக்கின் வியூகப்படி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்தார். மாவட்டந்தோறும் சென்று புகார் பெட்டியை வைத்து, புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கு மக்கள் கண் எதிரிலேயே பூட்டுப்போட்டு சீல் வைத்தார் ஸ்டாலின். எல்லா பெட்டிகளும் அண்ணா அறிவாலயத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு, ஆட்சியமைந்ததும் முதலில் இந்தப் புகார்களை எடுத்து, 100 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் ஸ்டாலின். இதன்படி, முதல் கையெழுத்து புகார்களை வெளியில் எடுத்து விசாரிக்க தனி துறை ஒதுக்குவது குறித்தோ, புகார் மனுக்களை அந்தந்தத் துறைகளுக்கு அனுப்பி தீர்வுகாண வேண்டும் என்பதற்கான சிறப்புத் திட்டம் தொடங்குவது குறித்தோ இருக்கலாம்.

மேலும், கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் நிவாரணத் தொகை குறித்தோ, இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி கொடுப்பது குறித்தோ, ரேஷன் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்புக் கொடுப்பது குறித்தோ கூட முதல் கையெழுத்து இருக்கலாம். எப்படியிருந்தாலும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்துதான் முதல் கையெழுத்தைப் போடுவார் ஸ்டாலின்” என்றனர்.

முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து எதற்கானதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

அடுத்த கட்டுரைக்கு