Election bannerElection banner
Published:Updated:

“வட மாவட்டங்களுக்கு குறி... அ.ம.மு.க வாய்ப்பு”  - தே.மு.தி.க திரும்பிய காரணம் என்ன? 

தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா
தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா

தே.மு.தி.க வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அ.தி.மு.க தரப்பு ஏற்றுக்கொள்வதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொகையை அ.தி.மு.க தரப்பே நேரடியாக கையாளும் என்றும்,  தே.மு.தி.க வேட்பாளர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது

“ வடமாவட்டங்களில அதிக தொகுதிகளை கேட்டதும், தேர்தல் செலவுக்கான கரன்சிகள் விவகாரமுமே அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க வெளியேற காரணம் என்று தே.மு.தி.க தரப்பில் சொல்கிறார்கள்.

தே.மு.தி.க. 
தே.மு.தி.க. 

தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அ.தி.மு.க தரப்பிடம் தே.மு.தி.க தரப்பு 25 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் கேட்டதாகவும் முதலில் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியபோது தொகுதிகளின் எண்ணிக்கையை, பாதியாகக் குறைத்துவிட்டார்கள். அதிலும் ராஜ்யசபா சீட் குறித்து எந்த உறுதியையும் அ.தி.மு.க தரவில்லை. பாமக-வை மையமாக வைத்தே தே.மு.தி.க-விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குறிப்பாக 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க வெற்றி பெற்ற தொகுதிகள் பெரும்பாலானவை வட மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகள். அந்தத் தொகுதிகளை இந்த முறை பா.ம.க-வுக்குக் கொடுக்க அ.தி.மு.க தரப்பு முடிவெடுத்துள்ளது. தே.மு.தி.க-வுக்கு தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் தொகுதிகளை ஒதுக்கமுடியும் என்கிற திட்டத்தையும் சொல்லியுள்ளது. இறுதியாக எண்ணிக்கை குறித்த பேச்சுவரும் போதும் 12 தொகுதிகள் தரமுடியும் என்று அ.தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இருபத்தி ஐந்து இடங்களைக் கேட்டால் 12 இடங்களை தருகிறார்களே என்று கடுப்பாகியிருக்கிறது தே.மு.தி.க.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

இதன்பிறகு மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதி எண்ணிக்கையில் கிட்டதட்ட இறுதி நிலையும் வந்துள்ளது. குறிப்பாக 13 முதல் 15 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க தரப்பு சம்பதம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தே.மு.தி.க-வும் வந்தது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு ஒரு இடமும் வழங்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், கரன்சி விசயத்தில் அ.தி.மு.க தரப்பு காட்டிய கறார்தான் தே.மு.தி.க-வின் உச்சக்கட்ட கோபத்திற்குக் காரணம் என்கிறார்கள். தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அ.தி.மு.க தரப்பு ஏற்றுக்கொள்வதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொகையை அ.தி.மு.க தரப்பே நேரடியாக கையாளும் என்றும், தே.மு.தி.க வேட்பாளர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தே.மு.தி.க தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. சீட்டு முக்கியமா நோட்டு முக்கியமா என்கிற நெருக்கடியை அ.தி.மு.க தரப்பு தே.மு.தி.க-வுக்கு ஏற்படுத்தியது.

இதனால் கூட்டணியில் தொடரமுடியாது என்கிற நிலைக்கு கடந்த திங்கள் கிழமை அன்றே வந்துவிட்டது தே.மு.தி.க. அ.தி.மு.கவுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்கு திரும்பிய சுதீஷ் உடனடியாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரனைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அ.தி.மு.கவுடன் கூட்டணிச் சிக்கலை பற்றியும் சொல்லியிருக்கிறார். உடனே தினகரன் எங்கள் அணிக்கு வாருங்கள் வட மாவட்டங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை அளிக்கிறோம் என்று உறுதி கொடுத்துள்ளார். அதன்பிறகு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுத்துச் சொல்வதாக சுதீஷ் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக தே.மு.தி.க முடிவெடுத்துள்ளது. அ.ம.மு.க தரப்புடன் பேச்சுவார்த்தையைத் தொடர தே.மு.தி.க தரப்பு முடிவெடுத்துள்ளது.

தே.மு.தி.க சுதீஷ்
தே.மு.தி.க சுதீஷ்

மற்றொருபுறம் சுதீஷ் அளித்த பேட்டியில், ``பா.ம.க-வின் ஸ்லீப்பர் செல்லாக முனுசாமி இருக்கிறார்” என்று குற்றம்சாட்டியதற்கு காரணம், வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் தொகுதிகள் தே.மு.தி.க வசம் சென்றுவிடக்கூடாது என்று தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தும், தே.மு.தி.க கேட்ட தொகுதிகளை பா.ம.க-வுக்கு மடைமாற்றும் வேலையை செய்தார் என்று தே.மு.தி.க தரப்பு நினைக்கிறது. இதை மனதில் வைத்தே அந்த கருத்தை சுதீஷ் சொல்லியுள்ளார் என்கிறார்கள் தே.மு.தி.க தரப்பினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு