Election bannerElection banner
Published:Updated:

`5 முனைப் போட்டியில் 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட ம.நீ.ம!’ - கமல் சறுக்கியது எங்கே?!

கமல்
கமல்

முதல்வர் வேட்பாளர் என்கிற இமேஜிலிருந்து காணாமல்போய் கோவை தெற்கு வேட்பாளராக மட்டுமே கமல் சுருங்கியதும் பெரிய சறுக்கல்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்கள் நீதி மய்யத்தாருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. ஐந்து முனைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ள கட்சியாக கருதப்பட்ட ம.நீ.ம, 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ம.நீ.ம பின்னடைவை சந்தித்ததுக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை கூறி வருகிறார்கள். கமலும் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

கமல் ஏமாந்துபோனதற்கும், மக்கள் நீதி மய்யம் சறுக்கியதற்குமான காரணங்கள் குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் விசாரித்தோம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

“தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வுக்கு தான்தான் மாற்று சக்தி என்று அறிவித்துதான் அரசியலில் களமிறங்கினார் கமல். ஆனால், தேர்தல் வியூகம் அமைத்துக்கொடுக்க வந்த பிரசாந்த் கிஷோர், வந்த வேகத்திலேயே பின் வாங்கினார். அதனால் கட்சி நிதியில் ‘சங்கையா சொல்யூஷன்ஸ்’ என்கிற வியூக நிறுவனத்தைத் தனியாக உருவாக்கி, அதன் கன்ட்ரோலில் கட்சியை செல்லவிட்டது கமலின் மிகப்பெரிய சறுக்கல் என்கிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவர்களில் கமலும் ஒருவர். வரவில்லை என்பது உறுதியானதும் தனக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகவே வலியுறுத்தினார் கமல். ஆனால், ரஜினி சட்டைசெய்யவில்லை என்பதால் ஏமாந்தார்.

டாக்டர் மகேந்திரன் தவிர்த்து கட்சிக்கு நிதி அளிக்கக்கூடிய சோர்ஸ் யாருமே இல்லாமல் தேர்தலை சந்தித்ததிலும் ஏமாற்றம்.

கமல் , மகேந்திரன்
கமல் , மகேந்திரன்

இதுமட்டுமின்றி, சில விஷயங்களில் கமல் கோட்டைவிட்டதும் தோல்விக்குக் காரணம். அதாவது, தன்னை ஒரு நேர்மையின் சிகரமாகவே காட்டிக்கொண்டு, திராவிடக் கட்சிகளை ஊழல்வாதிகள் என சொல்லிக்கொண்டு, தன் கட்சியின் பொருளாளர் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடந்து பெயர் கெட்டபோதுகூட அவரை நீக்காதது கமலின் நேர்மை மீது விழுந்த பெரிய அடி.

கட்சியின் கொள்கைகள் மக்களிடம் முழுமையாகப் போய்ச்சேர்க்காததும், மக்கள் புரியும்படி பேசாததும் கட்சித் தலைவர் என்கிற நிலையில் சறுக்குவதற்குக் காரணம். நானும் கூட்டணி அமைக்கிறேன்என்று, தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் 4 தொகுதிகள் கூட கொடுக்க முடியாது என விரட்டிய பாரிவேந்தரின் ஐ.ஜே.கே மற்றும் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகியற்றுக்கு தலா 40 தொகுதிகளை அள்ளிக்கொடுத்தது சறுக்கலின் உச்சம்.

பொதுக்குழுவில் கட்சியினர் கமலை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர். ஆனால், முதல்வர் வேட்பாளர் என்கிற இமேஜிலிருந்து காணாமல்போய் கோவை தெற்கு வேட்பாளராக மட்டுமே கமல் சுருங்கியதும் பெரிய சறுக்கல். இத்தகைய காரணங்களால்தான் கமல் ஐந்துமுனைப் போட்டியில் ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு