Published:Updated:

கொரோனா வராமலிருந்திருந்தால்... அரசியலில் இந்த 7 விஷயங்கள் நடந்திருக்கும்!

ரஜினி அலை?
News
ரஜினி அலை?

கொரோனா வந்திருக்கவில்லை என்றால் என்னென்ன அரசியல் மாற்றங்களைத் தமிழகம் சந்தித்திருக்கும்?

கொரோனா தனிநபர் வாழ்க்கையை மட்டுமல்ல; அரசியல் சமூக நிகழ்வுகளிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மதுரை மக்களின் மாபெரும் கொண்டாட்டமான சித்திரைத் திருவிழா நடக்காது என்று அறிவித்துவிட்டது அரசு. ஊட்டி தாவரவியல் பூங்காவில் ரசிப்பதற்கு ஆளின்றி லட்சம் மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. இவையெல்லாம் வரலாறு காணாத மாற்றங்கள்... ஆனால், கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் பல அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கும். இவையெல்லாம் எப்போது நடக்கும் அல்லது அதிலும் மாற்றங்கள் வருமா...

வாங்க... ரூம் போடாமலே யோசிப்போம்!

ரஜினி அரசியல்
ரஜினி அரசியல்

1. ரஜினியின் அரசியல் என்ட்ரி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழகம் எதிர்பார்த்திருந்த அரசியல் சுனாமியான ரஜினியின் புதிய கட்சி தொடக்கமும் கொரோனா பாதிப்பால் கானல் நீராகியிருக்கிறது. யாராலும் நம்ப முடியாத ஒரு நிஜம்... தமிழ் வருடப் பிறப்பான ஏப்ரல் 14-ம் தேதி புதிய கட்சியை தொடங்குவதற்கு உண்டான வேலைகளையெல்லாம் அவர் ரசிகர் மன்றத்தினர் செய்துவந்தனர். கிட்டத்தட்ட 57,000 பூத் கமிட்டிகளும் தயார் நிலையில் இருந்தன. ஏப்ரலில் கட்சி, ஆகஸ்ட்டில் மாநாடு எனச் சூடுபறந்த ராகவேந்திர மண்டபம், கொரோனா எஃபெக்ட்டில் காற்றாடிப் போனது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியும் என்றாலும், அடுத்த ஒருமாதத்துக்கு 144 தடை உத்தரவை தமிழகத்தில் நீட்டிப்பது என்கிற ஐடியாவில்தான் தமிழக அரசு உள்ளது. இதனால் ஐந்து பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அரசு அனுமதிக்காது. ஜூன்/ஜூலையில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி, திட்டமிட்டது போல ஆகஸ்ட் மாதம் ரஜினியால் மாநாட்டை நடத்திட முடியுமா? கொரோனா எஃபெக்டால் மக்களின் மனநிலை என்ன மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது என்பதெல்லாம் கேள்விக்குறி.

ஆனாலும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் களத்தில் சூறாவளியாக மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறார்கள். தினமும் மாவட்டம் வாரியாக வழங்கப்படும் பொருள்களின் விவரம், புகைப்படங்கள் ரஜினிக்கு அனுப்பப்படுகின்றன. அவரும் மன்றத்தினரை உற்சாகப்படுத்துகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒருவருடமே மீதமிருக்கும் நிலையில், ரஜினி என்ன வியூகம் வகுக்கப்போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. தி.மு.க-வின் சிறுதெய்வ வழிபாடு

2021 தேர்தலுக்காக கிராமக் கோயில் சிறுதெய்வங்களை வழிபடும் வியூகத்தை தி.மு.க வகுத்திருந்தது. `இந்துக்களின் எதிரி தி.மு.க’ எனப் பி.ஜே.பி-யினர் செய்துவரும் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே இவ்வியூகத்தை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வகுத்துக்கொடுத்தார். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் அதிகளவில் தி.மு.க-வினர் பங்கேற்பது, ஆடு, கோழிகளை பலிகொடுத்து வேண்டுதலில் ஈடுபடுவது, அப்படியே தி.மு.க-வுக்கும் பிரசாரம் செய்வது எனப் பெரிய வியூகமே அறிவாலயத்தில் தயாரானது. அனைத்தையும் கொரோனா ஊதிவிட்டுவிட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தில் பெரும்பாலான கிராமக் கோயில் திருவிழாக்கள் பங்குனி, சித்திரை மாதங்களில்தான் நடைபெறும். இந்த டைமிங் மிஸ் ஆகிவிட்டதால், இனிமேல் சிறுதெய்வ வழிபாடு வியூகத்தை தி.மு.க கையில் எடுப்பது சந்தேகம்தான். இந்துக்களின் வாக்குகளை வளைக்க அடுத்து என்ன அஸ்திரத்தை ஸ்டாலின் கையில் பிரசாந்த் கிஷோர் கொடுக்கப்போகிறாரோ தெரியவில்லை.

3. மத்திய அமைச்சரவை மாற்றம்

மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படப்போவதாக கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து தகவல் பரவுகிறது. அமைச்சரவை மாற்றத்துக்கு ஒவ்வொரு முறை பிரதமர் அலுவலகம் தயாராகும்போதும், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி என ஏதாவது ஒரு பிரச்னை வெடித்துவிடுவதால் மாற்றம் தாமதமாகிறது. இம்முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் அமைச்சரவையை மாற்றிவிடலாம் எனப் பிரதமர் திட்டமிட்டு இருந்தாராம். அதற்குள் கொரோனா வந்து மீண்டும் தாமதப்படுத்திவிட்டது.

மோடியுடன் ரவீந்திரநாத் குமார்
மோடியுடன் ரவீந்திரநாத் குமார்

மாற்றியமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் தன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை எப்படியாவது அமைச்சராக்கிவிட வேண்டுமென்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் காய் நகர்த்தினார். மாநிலங்களவை எம்.பி-யாகியுள்ள ஜி.கே.வாசனுக்கும் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பிருப்பதாகப் பேச்சு கிளம்பியது. கொரோனாவால் இந்தப் பேச்சுகள் சற்று ஓய்ந்திருக்கின்றன. கொரோனா ஊரடங்குக்கு முன்பே சரிவில் இருந்த இந்தியப் பொருளாதாரம் இப்போது அதலபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கான எந்தத் திட்டத்தையும் உருவாக்கவில்லை என்பதால் மத்திய அமைச்சரவையிலிருந்து நிர்மலா சீதாராமன் மாற்றப்படலாம் என்ற பேச்சும் நின்று போயிருக்கிறது.

4. கவர்னர் ஆட்சி

எடப்பாடியின் வீட்டு வாசலில் `இந்த ஆட்சி இப்போது கவிழ்ந்துவிடும்’ என்று எதிர்க்கட்சிகள் கோடங்கி அடிக்க ஆரம்பித்து மூன்று வருடமாகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க-வில் மட்டுமல்லாமல், ஆட்சியிலும் தன்னை எடப்பாடி நிலைநிறுத்திவிட்டார். புது ஆருடமாக, ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் வரும் ஜூன் மாதம் கவர்னர் ஆட்சி வந்துவிடும் என்றனர். அந்தத் திட்டத்தில் கொரோனா வெந்நீரை ஊற்றிவிட்டது. மிச்சமிருக்கும் ஒருவருட காலத்தையும் நிறைவு செய்துவிட்டுதான் கோட்டையில் இருந்து கிளம்புவார் எடப்பாடி என்று அவருடைய ஆதரவாளர்கள் மிதப்பில் இருக்கின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
படம்: எம். விஜயகுமார் / விகடன்

ஆனால், கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் பொருளாதார பாதிப்புகள் கடுமையாகிக்கொண்டிருக்கின்றன. கீழ்த்தட்டு மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு தலா 1,000 ரூபாய் கொடுத்தது, யானைப்பசிக்கு சோளப்பொரிபோலக் கரைந்துவிட்டது. ஆனாலும் மத்திய அரசின் உதவிக்கரம் நீளவில்லை. அந்த வகையில் மத்திய அரசிடம் இந்த அரசு அடிமையாக இருக்கிறது என்ற வாதங்கள் வலுப்பெற்று வருகின்றன.

5. அ.தி.மு.க-விலும் அதிரடி மாற்றம்!

ஒரு சில அமைச்சர்களின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் எடப்பாடிக்கும் கட்சிக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. அதனால் ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜு, நிலோபர் கபில் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்ற பேச்சு, பல மாதங்களாக நீடித்து வந்தது. அதேபோல, செயல்படாத அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு, தன் விசுவாசிகளை மாவட்டச் செயலாளர்களாக்கும் முடிவை எடப்பாடி எடுத்திருந்தார். கட்சியில் தன் ஆளுமையை நிலைநிறுத்தவும் தேர்தல் நேரத்தில் தலைமை கொடுக்கும் வைட்டமின் `ப’ சத்துகளை வாக்காளர்களிடம் ஒழுங்காகக் கொண்டு சேர்க்கவும் இந்த மாற்றம் பயன்படும் எனத் திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டம் இப்போது கொரோனாவால் தள்ளிப் போயிருக்கிறது.

6. சசிகலா விடுதலை!

தமிழக அரசியலில் எல்லோரும் எதிர்பார்த்த இன்னொரு விவகாரம், சசிகலாவின் விடுதலை. ஏற்கெனவே அடைந்த தண்டனைக் காலத்தையும், நன்னடத்தைக்கான தண்டனைக் குறைப்பையும் சேர்த்து இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சசிகலா விடுதலையாகிவிடுவார் என்ற பேச்சு வலுத்துவந்தது. ஆனால், கொரோனா விவகாரம் அதையும் தள்ளிப்போட்டிருக்கிறது. ஊரடங்கி இருக்கும் நிலையில் சிறைக்குள் அவரைச் சென்று சந்திப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதனால் அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக வேறு எந்தத் தகவல்களும் வெளியாவதில்லை.

சசிகலா
சசிகலா

இதற்கிடையில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் உள்ளிட்ட இரண்டு முக்கியப் பதவிகளில் சசிகலாவுக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்ததில் எடப்பாடி தரப்பு சசிகலாவுடன் இன்னும் இணக்கமாக இருப்பதாக மீண்டும் தகவல்கள் பரவியுள்ளன. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை சசிகலாவின் தலைமையில்தான் அ.தி.மு.க சந்திக்குமென்ற பேச்சு மீண்டும் துளிர் விட்டிருக்கிறது.

7. உறங்கிய ஊழல் வழக்குகள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் மீதும், அவர்களின் துறைகளின் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமானவரித்துறை, சி.பி.ஐ விசாரணைகள் நடந்துகொண்டிருந்தன. இவையெல்லாம் வேகமெடுக்குமென்றும் சிலர் மீது மத்திய அரசின் துறைகள் அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புண்டு என்றும் பல தரப்பிலும் தகவல்கள் பரவின. அ.தி.மு.க அரசின் ஊழல்களுக்கு பா.ஜ.க அரசும் பின்னணியாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தரும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருக்குமென்றும் எதிர்பார்க்கப்பட்டது. எதுவுமே நடக்கவில்லை. கொரோனா வந்து பலருடைய எதிர்பார்ப்புகளிலும் கனவுகளிலும் மண்ணைப் போட்டிருக்கிறது.

தமிழக அரசியல் சூழலை கொரோனா கடுமையாகப் பதம் பார்த்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது... அதுவரை என்னென்ன செய்யப்போகிறதோ கொரோனா?