Published:Updated:

அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் பின்னணி... யாருக்கு வைக்கப்பட்ட செக்?

அன்வர் ராஜா
News
அன்வர் ராஜா

`கட்சித் தலைமைக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் கட்டம்கட்டப்படுவார்கள்' என்பதை ஆணித்தரமாகச் சொல்லிவிட்டது அ.தி.மு.க தலைமை.

அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார் அன்வர் ராஜா. இதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு பெரிதாக எந்தச் சச்சரவும் இல்லாமல் சுமுகமாக நடந்து முடிந்திருக்கிறது. 'ஏன் நீக்கப்பட்டார் அன்வர் ராஜா, இது யாருக்கு வைக்கப்பட்ட செக்?' என்பதுதான் தமிழக அரசியல் அரங்கில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க  கூட்டம்
அ.தி.மு.க கூட்டம்

அ.தி.மு.க-வின் சிறுபான்மை நலப்பிரிவுச் செயலாளராகவும், மூத்த உறுப்பினராகவுமிருந்த அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் பின்னணியில் வடமாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் அழுத்தம் இருந்ததாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர், ``உள்ளாட்சித் தேர்தல் பணி குறித்து விவாதிப்பதற்காக நவம்பர் 24-ம் தேதி கூடிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அன்வர் ராஜாவுக்கும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் இடையே பிரச்னை வெடித்து, கைகலப்பாகும் சூழல் ஏற்பட்டது. அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் இருவருமே அர்ச்சித்துக்கொண்டனர்.

இதில் யாரும் எதிர்பாராதவிதமாக, 'கழக வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்; அந்தக் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும்' என்கிற கோரிக்கையை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்வைத்தார். அவரை அவைத்தலைவராக்க வேண்டுமென்கிற கோரிக்கையையும் சிலர் சூசகமாக முன்வைத்தனர். இப்படி ஏக களேபரங்களுடன் நடந்து முடிந்த அந்தக் கூட்டத்தில், முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில்தான், 'டிசம்பர் 1-ம் தேதி கட்சியின் செயற்குழு கூடும்' என்கிற அறிவிப்பு வெளியானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னதாகவே, அன்வர் ராஜாவை அ.தி.மு.க-விலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் முன்வைத்தனர். இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடமும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். இதே கருத்தை வலியுறுத்திய சில வடமாவட்டச் செயலாளர்களும், 'செயற்குழுவுக்கு அன்வர் ராஜா வந்தால் ஏக களேபரம் ஆகிவிடும். தேவையில்லாத பிரச்னையை நாமே உருவாக்கிவிடக் கூடாது. தலைமைமீது ஒரு பயம் இருந்தால்தான், மற்றவர்களும் தலைமைக்கு எதிராகப் பேசுவதற்கு யோசிப்பார்கள். அன்வர் ராஜாவை உடனே நீக்குங்கள்' என்றனர். ஏற்கெனவே, வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு செங்கோட்டையன் அழுத்தம் கொடுத்ததால், அவர்மீது வருத்தத்தில் இருந்தார் எடப்பாடி. அன்வர் ராஜாவை நீக்கச் சொல்லி கட்சிக்காரர்கள் அழுத்தம் கொடுத்ததால், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, செங்கோட்டையனுக்கும் சேர்த்து 'செக்' வைக்க திட்டமிட்டார் அவர். உடனடியாக, அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான அறிவிப்பு, நவம்பர் 30-ம் தேதி இரவு வெளியானது.

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்

மதுசூதனன் மறைவுக்குப் பிறகு அவைத்தலைவர் பதவி நீண்ட நாள்களாக காலியாகவே இருந்தது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கியதால், அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கு பிரதிநிதித்துவம் அளித்தால் சச்சரவுகள் ஏற்படாது என்று கணக்கு போட்டார் எடப்பாடி. உடனடியாக, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளரான தமிழ்மகன் உசேனுக்கு அவைத்தலைவர் பொறுப்பை அளிக்கத் தீர்மானமானது. இதன் மூலமாக, அவைத்தலைவர் பொறுப்புக்கு காய்நகர்த்திய செங்கோட்டையனுக்கு 'செக்' வைத்துவிட்டார் எடப்பாடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் விதியும் மாற்றப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டுக்குப் பிறகு, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அவர்கள்தான் ஒருங்கிணைப்பாளர் தேர்வில் வாக்களிக்க முடியும். இனி, 'எம்.ஜி.ஆர் உருவாக்கிவைத்த கட்சி விதியை மதிக்கவில்லை' என்று சசிகலா தரப்பு உட்பட யாரும் எதிர்கோஷம் போட முடியாது. இந்தச் செயற்குழு அளித்திருக்கும் தீர்மானப் பரிந்துரைகளை பொதுக்குழு ஏற்க வேண்டும். அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுக்குழு கூட திட்டமிடப்பட்டிருக்கிறது. அப்போது, இந்தத் தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்படும்" என்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அன்வர் ராஜாவை நீக்கியதன் மூலமாக, 'கட்சித் தலைமைக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் கட்டம்கட்டப்படுவார்கள்' என்பதை ஆணித்தரமாகச் சொல்லிவிட்டது அ.தி.மு.க தலைமை. அவைத்தலைவர் பதவிக்கான சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதால், இனி உள்ளாட்சித் தேர்தல் பணிகள் அ.தி.மு.க-வில் சூடுபறக்கும் என்கிறார்கள் அந்தக் கட்சி வட்டாரத்தினர்.