Published:Updated:

ராஜஸ்தான்: `எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?' - கொதிக்கும் சச்சின் பைலட் ஆதரவாளர்கள்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ( PTI )

``எங்களுக்கு எதிராக அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையிலேயே அவர் ஒரு மெஜிசியன் என்பதைக் காட்டுகின்றன. மெஜிசியன்களால்தான் அனைத்து வகையான மாயைகளையும் மக்கள் மத்தியில் பரப்ப முடியும்.”

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும்கட்சியான காங்கிரஸில் மிகப்பெரிய குழப்பங்கள் நிலவிவருகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு பா.ஜ.க-தான் காரணம் எனவும் ஆட்சி கவிழும் நிலை இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வந்தன. இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே நிலவி வந்த மோதல்கள்தான். மோதல் தீவிரமானதைத் தொடர்ந்து சச்சின் பைலட் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் உட்பட இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்த வண்ணம் உள்ளனர். இடையே, பா.ஜ.க-வும் விமர்சனங்களை வைத்து வருகிறது.

ரமேஷ் மீனா
ரமேஷ் மீனா
ANI

மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சுமார் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவியையும் அசோக் கெலாட் வழங்கினார். இவர்களில் சிலர் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாகத் தற்போது செயல்பட்டு வருவது அசோக் கெலாட் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியுடன் சேர்த்து அவரின் ஆதரவாளர்களான ரமேஷ் மீனா மற்றும் விஸ்வேந்திர சிங் ஆகியோரின் அமைச்சர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. ரமேஷ் மீனா, தற்போதைய சூழலில் சச்சின் பைலட்டுக்கு மிகவும் பக்கபலமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான்:`அழகும் ஆங்கிலமும் மட்டும் போதாது!’ - சச்சின் பைலட்டை விமர்சித்த அசோக் கெலாட்

அசோக் கெலாட் அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ரமேஷ் மீனா கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து பேசுகையில், ``தற்போது நிலவும் அரசியல் பிரச்னைகள் தொடர்பாகக் கோடிக்கணக்கில் கொடுக்கல், வாங்கல் நிகழ்ந்ததாக அசோக் கெலாட் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். நான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். `நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸில் சேர்ந்தபோது எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?’ உண்மையைச் சொல்லுங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரமேஷ் மீனாவின் இந்தக் கேள்வி காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு முறை அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக ரமேஷ் மீனா குறிப்பிட்டார். ``முதல்வர் அசோக் கெலாட்டின் உத்தரவின் அடிப்படையில் அவரது இதற்கு முந்தைய பதவிக்காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டாவது அவர் பதவியேற்றபோது ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸில் இணைந்தனர்” என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான விமர்சனத்தையும் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
ANI

சச்சின் பைலட்டின் ஆதரவாளரும் மற்றொரு சட்டமன்ற உறுப்பினருமான முராரி லால் மீனா, ``எங்களுக்கு எதிராக அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையிலேயே அவர் ஒரு மெஜிசியன் என்பதைக் காட்டுகின்றன. மெஜிசியனால்தான் அனைத்து வகையான மாயைகளையும் மக்கள் மத்தியில் பரப்ப முடியும். எங்களுக்கு எதிராக இன்று ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். உண்மையிலேயே எங்களை அது காயப்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தபோது அவரிடமிருந்து நாங்கள் எவ்வளவு பணம் வாங்கினோம்? நாங்கள் நேர்மையாக இருந்ததைப் பற்றி பேசிய அவர் தற்போது எங்களை ஊழல்வாதி என்று கூறுகிறார்” என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான்: `நான் பா.ஜ.க-வில் சேரப்போவதில்லை!’ - சச்சின் பைலட் திட்டவட்டம்
அடுத்த கட்டுரைக்கு