Published:Updated:

ராஜ்ய சபா எம்.பி பதவி: திமுக-வில் கிடுகிடு ரேஸ் ஆரம்பம்; காங்கிரஸ் மூத்த தலைவருக்கு வாய்ப்பா?!

திமுக- அண்ணா அறிவாலயம்
திமுக- அண்ணா அறிவாலயம்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி இருவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டதால், தங்களது ராஜ்ய சபா எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முகமது ஜான், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் ராஜ்ய சபா எம்.பி-க்களாக இருந்தனர். முகமது ஜான் காலமானதால் அவர் வகித்த பதவி காலியானது. அதேபோல், வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி) இருவரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.

எம்.எம்.அப்துல்லா, முகமது ஜான்
எம்.எம்.அப்துல்லா, முகமது ஜான்

முகமது ஜானின் பதவி முன்னரே காலியானதால், அதற்கு மட்டும் தனியாகத் தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். செப்டம்பர் 13-ம் தேதி இன்றுதான் தேர்தல் நடக்கவிருந்தது. குறைந்தபட்சம் ஒரு ராஜ்ய சபா எம்.பி-யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ-க்கள் வாக்குகள் தேவை. அ.தி.மு.க-வும் இதில் போட்டியிட்டிருக்கலாம், ஆனால் அந்தக் கட்சியைவிட தி.மு.க-வில் அதிக எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால் போட்டியிட்டாலும் தி.மு.க-தான் வெற்றிபெறும் என்பதால் அ.தி.மு.க வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், தேர்தல் நடக்காமலேயே போட்டியின்றி தி.மு.க வேட்பாளர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். அ.தி.மு.க-வில் ஒரு முஸ்லிம் காலமானதால் காலியான பதவி என்பதால், அதே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அப்துல்லாவை எம்.பி ஆக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தற்போது காலியாக இருக்கும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி வகித்த ராஜ்ய சபா எம்.பி பதவிக்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்பதால், அ.தி.மு.க-வின் 66, பா.ஜ.க-வின் 4 மற்றும் பா.ம.க-வின் 5 என 75 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தபோதும், தி.மு.க கூட்டணி சார்பில் 159 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதால் எளிதில் வென்றுவிட முடியும். இதனால், இந்தப் பதவிகளுக்கும் அ.தி.மு.க வேட்பாளர்களை நிறுத்தாது எனத் தெரிகிறது. இதன்படி தி.மு.க-வுக்குத்தான் இரண்டு எம்.பி பதவிகளும் கிடைக்கும் என்பதால் இப்போதே அதற்கான ரேஸ் கிடுகிடுவென தி.மு.க-வில் தொடங்கிவிட்டது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இது குறித்து அறிவாலய முக்கியப் புள்ளி ஒருவரிடம் பேசினோம். ``ஏற்கெனவே முஸ்லிம் சமுதாயத்துக்கு இரு அமைச்சர்களும், ஒரு எம்.பி-யும் கொடுத்துவிட்டதால் இனி அந்தச் சமூகத்துக்கு வாய்ப்பில்லை. கிறிஸ்தவர்களுக்கு அமைச்சரவையில் உரிய இடமிருப்பதால் அதற்கும் வாய்ப்பில்லை.

கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் கிழக்கு மா.செ திமுக
கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நாமக்கல் கிழக்கு மா.செ திமுக

தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் (கவுண்டர் சமுதாயம்) எப்படியாவது எம்.பி பதவியைப் பிடித்துவிட பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறார். `கிச்சன் கேபினட்’, ராஜேஷ்குமாருக்கு நல்ல பழக்கம் என்பதால் அவர் மூலம் காய்நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.

பொள்ளாச்சி உமாபதி, சுப.வீ
பொள்ளாச்சி உமாபதி, சுப.வீ

அதேநேரம், முதல்வரும் கட்சியின் தலைவருமான ஸ்டாலின் திராவிடக் கொள்கை சார்ந்த நபர்களை டெல்லிக்கு அனுப்புவதில்தான் குறியாக இருக்கிறார். நாமக்கல் ராஜேஷ்குமார் ஏற்கெனவே அப்துல்லாவுடன் எம்.பி பதவிக்கு ரேஸில் இருந்தவர்தான். எனினும், முஸ்லிமாக இருந்தபோதும் திராவிடக் கொள்கையை உரக்கப்பேசுபவர் என்பதால்தான் அப்துல்லாவைத் தேர்வு செய்தார் ஸ்டாலின்.

அந்த வகையில் கொள்கை சார்ந்து பயணிக்கக்கூடியவர்கள் இருவர் இந்த ரேஸில் இணைந்துள்ளனர். ஒருவர் தி.மு.க கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளர் பொள்ளாச்சி உமாபதி (பிள்ளைமார் சமுதாயம்). இன்னொருவர் தி.மு.க-வில் உறுப்பினராக இல்லாதபோதும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையை நடத்திக்கொண்டு தி.மு.க-வுக்கு ஆதரவாகவே முழங்கிவரும் சுப.வீ என்றழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் (செட்டியார்). கட்சியில் இல்லாதவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம் எனத் தோன்றலாம். ஆனால், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஏற்கெனவே தி.மு.க சீட் கொடுத்து எம்.பி-யாக்கி இருக்கிறது.

`எடப்பாடி பக்கம் திரும்பும்`வாளையார்' மனோஜ் முதல் சசிகலாவின் சமாதான முயற்சி வரை'- கழுகார் அப்டேட்ஸ்!
மாலை ராஜா, திமுக
மாலை ராஜா, திமுக

முகமது ஜான் இருந்த இடத்துக்கு அதே முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அப்துல்லாவை தி.மு.க அமர்த்தியதுபோல, வைத்திலிங்கம் இருந்த அந்த இடத்துக்கு அதே தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை நிறுத்தும் எண்ணமும் தலைமைக்கு இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் அதைப் பிடிப்பதற்கு நெல்லையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மாலை ராஜா தயாராக இருக்கிறார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ஒரே சமயத்தில் இரண்டு எம்.பி பதவிகளுக்கும் தேர்தல் நடப்பதால், ஒன்றைத் தங்களுக்குக் கொடுங்கள் என காங்கிரஸ் கேட்டுவருகிறது. இரு மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ராஜ்ய சபா எம்.பி பதவியைத் தனக்குக் கொடுக்குமாறு கோரிக்கைவைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு எம்.பி பதவியை விட்டுக்கொடுக்கும் முடிவில் ஸ்டாலின் இருந்தால், அது ப.சிதம்பரத்துக்குச் செல்லும் எனத் தெரிகிறது. அதேவேளையில், காங்கிரஸில் உள்ள மற்ற கோஷ்டிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வது என்று ஸ்டாலின் நினைத்தால் இரண்டையும் தி.மு.க-வே எடுத்துக்கொள்ளும். இந்த வாரத்தில் எப்படியும் இதற்கான விடை கிடைத்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு