Published:Updated:

ராஜஸ்தான்: `என்னைப் பதவியில் இருந்து நீக்க அசோக் கெலாட் யார்?’ - ஓயாத உள்கட்சி மோதல்

முகேஷ்
முகேஷ்

``ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான விசுவாசியாக இருப்பது என்பது அசோக் கெலாட்டுக்கு அடிமையாக இருப்பதே. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.’’

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் மோதல்தான் அரசியல் வட்டாரங்களில் இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த பல நாள்களாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே நடந்து வந்த பனிப்போர் மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதையடுத்து, இருவரும் தங்களது பலத்தை நிரூபிக்க தங்களது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தனர்.

இதனால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இருவருக்கும் இடையிலான பிரச்னையை பா.ஜ.க தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துக்கொள்ள முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, இருவருக்கும் இடையிலான பிரச்னைகளை சரிசெய்ய காங்கிரஸ் தலைமை நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இந்த நிலையில், திடீரென சச்சின் பைலட் அவரின் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள பயோவிலும் சச்சின் மாற்றம் செய்துள்ளார். ``சத்தியத்தைத் தொந்தரவு செய்யலாம். ஆனால், தோற்கடிக்க முடியாது” என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால், அவர் அடுத்து எடுக்கப்போகும் முடிவுகள் குறித்த விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போது சிக்கல்கள் எழுந்துள்ளன எனலாம். அவ்வகையில், மாநில இளைஞர் காங்கிரஸின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினரும் சச்சின் பைலட்டின் ஆதரவாளருமான முகேஷ் பாக்கர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மாநில இளைஞர் காங்கிரஸின் தலைவராக கணேஷ் கோகரா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகுதான் மாநில இளைஞர் காங்கிரஸின் தலைவராக ஆனேன். என்னை இந்தப் பதவியில் இருந்து நீக்க அசோக் கெலாட் யார்?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன்னதாக அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில், ``ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான விசுவாசியாக இருப்பது என்பது அசோக் கெலாட்டுக்கு அடிமையாக இருப்பதே. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என ட்வீட் செய்திருந்தார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினரும் தற்போது கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் பதற்றத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

ராஜஸ்தான்: சச்சின் பைலட் பதவிப் பறிப்பு; ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமா? - என்ன நடந்தது?

சச்சின் பைலட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ.க உறுப்பினர்களும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவ்வகையில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைஜெயந்த் ஜெய் பாண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், ``விமானப் பயணத்தின்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலோ, மோசமான வானிலை மாற்றங்கள் நிகழ்ந்தாலோ விமானங்கள் வேறு பாதையில் செல்லும் அல்லது வேறு விமான நிலையத்தில் தரையிறங்கும் திட்டத்தை விமானிகள் வைத்திருப்பார்கள். அனுபவம் வாய்ந்த ஒவ்வொரு பைலட்டும் இதனை அறிந்திருப்பார்கள்” என்று சூசகமாகப் பதிவிட்டுள்ளார்.

சச்சின் பைலட் டெல்லி சென்றதாகத் தகவல்கள் வெளியான சமயத்தில் இருந்தே அவர் பா.ஜ.க-வில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. எனினும், இதை அவர் மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்வர் அசோக் கெலாட், ஆரம்பம் முதலே இந்தப் பிரச்னை தொடர்பாக பா.ஜ.க-வின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார். அவரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும்விதமாக பா.ஜ.க தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அன்புள்ள அசோக் கெலாட், கண்களை மூடுவதால் சூரியன் மறையாது. உங்களது வீட்டின் கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. ஆனால், நீங்கள் பா.ஜ.க-வின் தலைமையை குற்றம் சாட்டுகிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். ராஜஸ்தானின் காங்கிரஸ் உட்கட்சி பிரச்னை ஒருபுறம் தீவிரமாகச் சென்றுகொண்டிருக்க, மறுபுறம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு இடையிலும் இந்தப் பிரச்னை கடுமையாகி வருகிறது.

ராஜஸ்தான்:`காங்கிரஸில் வலுக்கும் மோதல்!’ - டெல்லியில் முகாமிட்ட சச்சின் பைலட்
அடுத்த கட்டுரைக்கு