Published:Updated:

காலியான 3 ராஜ்ய சபா எம்.பி பதவிகள்... டெல்லி செல்லும் கில்லிகள் யார்?

டெல்லி செல்லும் கில்லிகள் யார்?
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்லி செல்லும் கில்லிகள் யார்?

ஒரு ராஜ்ய சபா எம்.பி-யைத் தேர்வு செய்ய ஒரு மாநிலக் கட்சிக்குக் குறைந்தது 34 எம்.எல்.ஏ-க்கள் தேவை. தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை விசித்திரமானது.

அ.தி.மு.க தமிழகத்தில் ஆட்சியை இழந்தது மட்டுமன்றி, டெல்லியிலும் எம்.பி-க்களை இழந்திருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் அந்தக் கட்சியில் எம்.எல்.ஏ-க்களாக வெற்றிபெற்ற கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்திருப்பதாலும், ஏற்கெனவே முகமது ஜான் காலமாகிவிட்டதாலும் அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி-க்களின் எண்ணிக்கை எட்டிலிருந்து ஐந்தாகக் குறைந்திருக்கிறது. இதனால், அதிக எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட கட்சியான தி.மு.க அந்த மூன்று எம்.பி பதவிகளையும் கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முகமது ஜான்
முகமது ஜான்
வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி-க்கள் மக்களவையிலும் (லோக் சபா), மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் எம்.பி-க்கள் மாநிலங்களவையிலும் (ராஜ்ய சபா) இடம்பெறுவார்கள். லோக் சபா எம்.பி-க்களுக்கு ஐந்தாண்டுகள் பதவி என்றால், ராஜ்ய சபா எம்.பி-க்களுக்கு ஆறாண்டுகள் பதவி. லோக் சபாவில் 543 உறுப்பினர்கள் வரையிலும், ராஜ்ய சபாவில் 245 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பலம் குறைந்த அ.தி.மு.க

ராஜ்ய சபாவில் தற்போது பா.ஜ.க-வுக்கு 94 எம்.பி-க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 35 எம்.பி-க்களும், திரிணாமுல் காங்கிரஸுக்கு 11 எம்.பி-க்களும் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வுக்கு எட்டு பேரும், தி.மு.க-வுக்கு ஏழு பேரும் உள்ளனர். அ.தி.மு.க-வில் முகமது ஜான் மறைந்ததால், ஏற்கெனவே அந்தக் கட்சிக்கு ஒரு எம்.பி பதவி குறைந்துவிட்டது. தற்போது கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதால், ராஜ்ய சபாவில் அ.தி.மு.க-வின் பலம் ஐந்தாகச் சுருங்கிவிட்டது.

“மூன்று ராஜ்ய சபா எம்.பி-க்களுக்கான தேர்தல் எப்போது, எப்படி நடக்கும்?” என்று முன்னாள் சீனியர் எம்.பி ஒருவரிடம் கேட்டோம். “வைத்திலிங்கம் 2016-லும், முகமது ஜான் 2019-லும், கே.பி.முனுசாமி 2020-லும் ராஜ்ய சபாவுக்குத் தேர்வானார்கள். ஒரு ராஜ்ய சபா எம்.பி-யைத் தேர்வு செய்ய ஒரு மாநிலக் கட்சிக்குக் குறைந்தது 34 எம்.எல்.ஏ-க்கள் தேவை. தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை விசித்திரமானது. வெவ்வேறு காலகட்டங்களில் தேர்வான மூன்று எம்.பி-க்களின் பதவிகள் காலியானது தமிழக வரலாற்றில் இதுவே முதன்முறை.

மொத்தமாக ஆறு ராஜ்யசபா எம்.பி பதவிகள் ஒரே நேரத்தில் காலியானால்தான் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும். தற்போது பதவி காலியான மூன்று பேரும், வெவ்வேறு வருடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால், தேர்தல் ஆணையம் மூன்று தனித்தனி நோட்டிஃபிகேஷன்களை வெளியிட்டு, மூன்று தனித்தனித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க-வில் பாக்கியிருக்கும் எம்.பி-க்களில் தம்பிதுரைக்கு 2026 வரையிலும், சந்திரசேகரனுக்கு 2025 வரையிலும் பதவிக்காலம் இருக்க, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் 2022-ல் முடியவிருக்கிறது. இதனால், காலியாகவுள்ள பதவிகளுக்குத் தற்போதே தேர்தல் நடத்தப்படுமா அல்லது அடுத்த ஆண்டு சேர்த்து நடத்தப்படுமா என்பதைத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்” என்றார்.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்
கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

பா.ஜ.க-வுக்கு சிக்கலா?

“அ.தி.மு.க-வுக்கு எம்.பி-க்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதால், அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு சிக்கல் ஏற்படுமா?” என்று அவரிடமே கேட்டோம். “ராஜ்ய சபாவில் அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெற்று சில சட்டங்களை பா.ஜ.க நிறைவேற்றியிருக்கிறது. உதாரணமாக, குடியுரிமை திருத்தச் சட்டம் அ.தி.மு.க மற்றும் பா.ம.க துணை இல்லாமல் ராஜ்ய சபாவில் நிறைவேறியிருக்காது. தற்போது அப்படியான நிலைமை இல்லை. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து பா.ஜ.க-வுக்குத் தேவையான ராஜ்ய சபா உறுப்பினர்கள் கிடைத்து, அந்தக் கட்சி ராஜ்ய சபாவில் வலுவாகவே இருக்கிறது. தவிர, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் ராஜ்ய சபாவில் எம்.பி-க்கள் இருப்பதால் பா.ஜ.க-வுக்கு பிரச்னை இல்லை. எந்தச் சட்டம் இயற்ற வேண்டுமென்றாலும், அவையில் அப்போது இடம்பெற்றிருக்கக்கூடிய உறுப்பினர்களில் பாதி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதுமானது என்பதால் பா.ஜ.க-வுக்கு சிக்கல் இல்லை” என்று முடித்தார்.

தி.மு.க-வுக்கு லாபம்!

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று ராஜ்ய சபா எம்.பி-க்கள் பதவி காலியாகியிருப்பது தி.மு.க-வுக்கு சாதகமாகியிருக்கிறது. மேற்கண்ட பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் வேலுமணிக்கு டஃப் ஃபைட் கொடுத்த கார்த்திகேய சிவசேனாபதிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிலி ஏற்படுத்திய தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்கலாம் என்கிற பேச்சு அடிபடுகிறது. இவர்களைத் தவிர மூன்றாவதாக இருக்கும் ஒரு எம்.பி பதவிக்கு கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது.

தி.மு.க மாநிலங்களவை எம்.பி-யும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் எம்.பி பதவி வாய்ப்பு பற்றி கேட்டோம். “மூன்று எம்.பி பதவிகளுக்கும் தனித்தனித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதால், இதில் குறைந்தபட்சம் 34 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் போதும் என்கிற விதி அமலாகாது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கு அதிக எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களோ, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே மூன்று எம்.பி பதவிகளும் கிடைக்கும். அந்தவகையில், மூன்று எம்.பி பதவிகளும் தி.மு.க-வுக்கே கிடைக்கும். ஆனால், கட்சியில் அந்தப் பதவி யாருக்கு என்கிற இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலின்தான் அறிவிப்பார்” என்றார்.

ஜாக்பாட் யாருக்கோ!