Published:Updated:

தமிழக பா.ஜ.க தலைவர் ரேஸ்: அண்ணாமலையா... நயினாரா? யாருக்கு வாய்ப்பு?!

அண்ணாமலையா, நயினாரா?
அண்ணாமலையா, நயினாரா?

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு அண்ணாமலை Vs உதயநிதி என்றொரு டிரெண்டை உருவாக்கும் வகையில்தான் பா.ஜ.க மூவ்கள் இருக்கும்.

`ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்’ என்பார்கள். அப்படித்தான் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தோற்றுப்போனாலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்துக்குள் அனுப்பிவைத்ததற்காக, எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அதனால், முருகன் தற்போது வகித்துவரும் தமிழக பா.ஜ.க தலைவர் பதவியிலிருந்து அவர் விலக்கப்படுவாரா, தொடர்வாரா... விலக்கப்படுவார் என்றால் அடுத்த தலைவர் யார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவரிடம் பேசினோம். ``முருகனுக்கு ஜாக்பாட் அடித்ததே பெரிய கதை. முருகனின் சமூகத்தைக் காரணம் காட்டி பல தலைவர்கள் முருகனுடன் முரண்பட்டிருந்தனர் . எப்படியாவது முருகனை வெளியேற்ற நினைத்தவர்கள், ஒரு ’விவகாரமான’ விஷயத்தை வைத்து, பத்திரிகை மூலம் ஊதிப் பெரிதாக்கினர். இதையெல்லாம் கணக்கிட்ட டெல்லி பா.ஜ.க தலைமை, `அவர்மீது நடவடிக்கை எடுத்தால் அந்தச் சமூக மக்களிடம் கெட்ட பெயர் கிடைக்கும் என்பதால், அவரை மத்திய அமைச்சராக உயர்த்தி, கட்சிப் பதவியிலிருந்து விலக்கிவிட்டுவிடலாம்’ என்றொரு முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்படிதான் முருகனுக்குப் பதவி கிடைத்தது" என்றார் அவர்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
ஒளிபரப்புத் திருத்தச் சட்டம்: விமர்சனங்களை ஏற்கணும்;வரைமுறையோடு விமர்சிக்கணும்; ஆதரவும் எதிர்ப்பும்!

மேலும் , இது பற்றிப் பேசிய அவர் , ``இது மோடி, அமித் ஷா கூட்டணிக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே இதே பாணியில்தான் வெங்கைய நாயுடு உள்ளிட்டோரை ஒதுக்கிவைத்தனர். தற்போது மத்திய இணை அமைச்சர் ஆகிவிட்டதால், கட்சிப் பணிகளை கவனிக்க நேரமிருக்காது. அதனால், கண்டிப்பாகத் தலைவர் பதவியில் மாற்றம் இருக்கும். அந்த மாற்றத்தைப் பூர்த்தி செய்யக்கூடியவர் அண்ணாமலையா, நயினார் நாகேந்திரனா என்பதுதான் கேள்வியே! நயினார் நாகேந்திரனைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-விலிருந்து வந்தவர். முன்னாள் அமைச்சராக, ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவர். அவரது அரசியல் அனுபவத்தின் காரணமாக 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது பா.ஜ.க தலைமை. வெற்றி பெற்ற நால்வரில் அரசியலில் சீனியர் என்ற கேட்டகிரியில் சட்டமன்றகுழுத் தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது. தென் தமிழகத்தில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரைத் தலைவராக்கினால் தெற்கில் கொஞ்சம் பா.ஜ.க வளரும் எனச் சிலர் எடுத்துரைத்துள்ளனர்.

அதேநேரம் பா.ஜ.க டெல்லி தலைமை போடும் கணக்கோ வேறு. இப்போதே பல விஷயங்களில் தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும்தான் மோதல் இருந்துவருகிறது. அ.தி.மு.க சீனிலேயே இல்லை. இதே ஸ்டேட்டஸ் மெயின்டெயின் ஆக வேண்டும் என்பதுதான் டெல்லியின் விருப்பம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க Vs பா.ஜ.க என்கிற நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணாமலை Vs உதயநிதி என்றொரு காம்பினேஷனைக் கொண்டு வர வேண்டும். இவைதான் டெல்லியின் திட்டம் என்று நினைக்கிறோம். அதனால், அண்ணாமலையை இப்போதிலிருந்தே வளர்த்துவிட டெல்லி நினைக்கும்பட்சத்தில், அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராகலாம்.

அண்ணாமலை
அண்ணாமலை
நா.ராஜமுருகன்

அதுமட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கட்சித் தலைவராக்கியதால்தான், கொங்குப் பகுதியில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுகள் பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்தது என நினைக்கிறது கட்சித் தலைமை. இன்னும் சொல்லப்போனால் பா.ஜ.க-வால்தான் அ.தி.மு.க-வே கொங்கு மண்டலத்தில் ஜெயித்தது. அதுபோலவே கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் சமூக மக்களையும் தங்களுக்குச் சாதகமாக திசை திருப்பி, 2026 தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும் கவுண்டர் வாக்குகளை பா.ஜ.க-வுக்கு மடை மாற்றி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுப்பதே டெல்லியின் தொலைநோக்குத் திட்டம். அதற்கு அண்ணாமலை கருவியாக இருப்பார் என்பதால், அவரைத் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளது. சீனியர்கள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது என்னவோ உண்மைதான். சீனியாரிட்டியையும் டெல்லி தலைமை கணக்கில் எடுத்துக்கொள்ளுமானால், இருவரும் இல்லாமல் வேறொருவர் மாநிலத் தலைவராக்கப்படலாம்!” என்பதோடு முடித்தார். கட்சி உள்விவகாரங்கள் இப்படி இருப்பதாகச் சொல்லப்படும் வேளையில், என்ன நடக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு