Published:Updated:

`குவாலியர் சமஸ்தான அரசர்; நோ கட்சி பதவி!'- காங்கிரஸில் புயலைக் கிளப்பிய ஜோதிர்ஆதித்யா சிந்தியா யார்?

ஜோதிர் சிந்தியா
ஜோதிர் சிந்தியா

18 வருடங்களாக மத்தியப் பிரதேச காங்கிரஸிலிருந்து பல தலைவர்களை வெற்றிபெற வைத்துள்ள ஜோதிர் சிந்தியா 2019-ம் ஆண்டு குணா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடந்த அதிரடி அரசியல் திருப்பங்களை அடுத்து தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதே அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அங்கு மொத்தம் உள்ள 228 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும் பா.ஜ.க 107 இடங்களிலும் வெற்றிபெற்றன. இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட சமபலத்துடன் இருந்ததால், பிற கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து கமல்நாத் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

சிந்தியா - கமல்நாத்
சிந்தியா - கமல்நாத்

ஆரம்பம் முதலே மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்வதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வந்தது. ஆனால், காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டைப் பா.ஜ.க மறுத்து வந்தது. இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் அங்கு முக்கிய தலைவர்களாக இருக்கும் கமல்நாத்துக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கும் இடையே அடிக்கடி பதவி மோதல் நீடித்து வந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலின்போதும் இந்த இரு தலைவர்களும் முதல்வர் பதவிக்குப் போட்டிபோட்டுள்ளனர். ஆனால், கமல்நாத் காங்கிரஸ் தலைமையின் ஆதரவுடன் முதல்வரானார்.

முதல்வர் மட்டுமல்லாது மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் கமல்நாத் உள்ளார். பலமுறை மாநிலத் தலைமை மாற்றம் குறித்து ஜோதிர் ஆதித்யா சிந்தியா வலியுறுத்தியும் அவரது கோரிக்கைக்கு கமல்நாத் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை தேர்தலைப் பயன்படுத்தி சிந்தியா கேம் ஆடுவதாகக் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. முன்னதாக சில எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, கமல்நாத் மீது அதிருப்தி, எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா போன்ற அனைத்து விஷயங்களும் இவரையொட்டியே நடந்ததாகக் கூறப்படுகிறது.

சிந்தியா - கமல்நாத்
சிந்தியா - கமல்நாத்

சிந்தியாவுக்குக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆகிய இரண்டையும் வழங்கி தங்கள் கட்சியிலேயே தக்க வைக்க காங்கிரஸ் தலைமை முயன்றது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்றால் கொடுக்கலாம். ஆனால் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என கமல்நாத் கூறியதால், மத்தியப் பிரதேசத்தில் அரசியல் குழப்பம் வெடித்து காங்கிரஸின் ஆட்சிக்கே ஆபத்தாக முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று முதல் சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலர் தனியாக ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் சிந்தியா. மேலும், காங்கிரஸிலிருந்து தான் விலகுவதாக சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.

Vikatan

அதில், 18 வருடங்கள் கட்சிக்காக உழைத்ததாகவும் இது விலகுவதற்கான நேரம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் அரசியலுக்கு வந்ததற்கான நோக்கம் மக்களுக்குச் சேவை செய்யத்தான். காங்கிரஸ் கட்சியிலிருந்துகொண்டு அதைச் செய்வது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சிந்தியா வழங்கிய நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ராஜினாமா செய்துள்ளவர்கள்
ராஜினாமா செய்துள்ளவர்கள்

ஜோதிர் சிந்தியா காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த 19 மத்தியப் பிரதேச எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் ஆறு மாநில அமைச்சர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிந்தியா விரைவில் பா.ஜ.க-வில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸிலிருந்த இளம் வயது தலைவர் ஒருவரை நம்பி ஆறு அமைச்சர்கள் தங்கள் பதவிகளைத் துறந்துள்ளனர். தனி ஒரு மனிதரான சிந்தியாவால் ஒரு மாநிலத்தின் ஆட்சியே மாறும் சூழல் உருவாகியுள்ளது.

யார் இந்த ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா?

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ஜோதிர் ஆதித்யா சிந்தியா. இந்தியா சுதந்திரம் பெற்றபோது குவாலியர் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் தற்போது குவாலியர் சமஸ்தானத்தின் அரசராக இருந்திருப்பார் ஜோதிர் ஆதித்யா.

குவாலியர் சமஸ்தானம்
குவாலியர் சமஸ்தானம்

சிந்தியா வம்சத்தில் 1971-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் ஜோதிர் ஆதித்யா. இவரின் தந்தை மாதவராவ் சிந்தியா மற்றும் தாய் மாதவி ராஜ சிந்தியா. டேராடூனில் பள்ளிப் படிப்பும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டமும் பெற்றுள்ளார் ஜோதிர். மேலும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை முடித்துள்ளார். 2001-ம் ஆண்டு ஜோதிரின் தந்தை மாதவராவ் சிந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பிறகு, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த குணா தொகுதி காலியானது. மாதவராவ் 1980-ம் ஆண்டு முதல் காங்கிரஸில் இருந்தார். அதனால் தன் தந்தை வழியைப் பின்பற்றி 2002-ம் ஆண்டு ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும் தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.

`17 ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாயம்.. `ஸ்விட்ச்-ஆஃப்' சிந்தியா!'- சிக்கலில் கமல்நாத் அரசு

தன் தந்தை காங்கிரஸில் இருந்தபோதே பல்வேறு கட்சி கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் ஜோதிரும் கலந்துகொண்டு காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துள்ளார். பின்னர் காங்கிரஸில் இணைத்துக்கொண்டு தன் தந்தை உறுப்பினராக இருந்த தொகுதியில் போட்டியிட்டு அதே 2002-ம் ஆண்டில் குணா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2004-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியிலிருந்து வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றார். தொடர்ந்து, 2007-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சராக முன்னேறினார்.

ராகுல் - சிந்தியா
ராகுல் - சிந்தியா

2009-ல் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவிவகித்தார். 2012-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரத்துறைக்கு தனிப்பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த பணக்கார அமைச்சர்களில் சிந்தியாவும் ஒருவராக இருந்தார். இவருக்கு 16 கோடி சொத்து மதிப்பு, 5 கோடி டாலர் வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவை உள்ளன. மறைந்த தன் தந்தையின் ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு ஒரே வாரிசாகத் தன்னை சட்டபூர்வமாக அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இருந்தும் இவரின் அத்தைகளும் சொத்தில் பங்கு கேட்பதால் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

சுமார் 18 வருடங்களாக மத்தியப் பிரதேச காங்கிரஸில் பல தலைவர்களை வெற்றிபெற வைத்துள்ளார் ஜோதிர் சிந்தியா. 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன் ஆஸ்தான குணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், 2019-ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க-வின் கிருஷ்ணா பால்சிங் யாதவிடம் தோல்வியடைந்தார். ஜோதிர் ஆதித்யா சிந்தியா தற்போதுவரை குவாலியர் கௌரவ அரச பட்டத்துடன் உள்ளார். இருந்தும் கட்சியில் பொறுப்பு வேண்டும் என நீண்ட காலமாகப் போராடி வருகிறார். இந்த பதவிக்காகத்தான் தற்போது பெரும் யுத்தம் நடத்தி இன்று காங்கிரஸிலிருந்து வெளியேறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு