Published:Updated:

சசிகலா உறவினர் ராவணன்: ஜெயலலிதா குட்புக்கில் இடம்; அதிமுக-வின் அதிகாரப்புள்ளி - யார் இவர்?!

ராவணன்

சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்த சமயத்தில் முதல் ஆளாக நடவடிக்கைக்கு உள்ளானவர் ராவணன்.

சசிகலா உறவினர் ராவணன்: ஜெயலலிதா குட்புக்கில் இடம்; அதிமுக-வின் அதிகாரப்புள்ளி - யார் இவர்?!

சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்த சமயத்தில் முதல் ஆளாக நடவடிக்கைக்கு உள்ளானவர் ராவணன்.

Published:Updated:
ராவணன்

சசிகலா உறவினரான ராவணன், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொங்கு மண்டலத்தில் கோலோச்சியதுடன், அதிகாரமிக்கவராகவும் வலம்வந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நடவடிக்கைக்கு ஆளான பிறகு அரசியல் நிகழ்வுகளில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தவர். இந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு நேற்று ராவணன் உயிரிழந்தது சசிகலா உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சசிகலா
சசிகலா

சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மகள் மாதவி. சசிகலாவுக்கு தங்கை முறை உடையவர். மாதவியின் கணவர் ராவணன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசித்துவந்தார். தன் மகனின் மருத்துவ உயர் படிப்புக்காக திருச்சியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து அவரது உடல் மன்னார்குடி அருகேயுள்ள ராதா நரசிம்மபுரம் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் தம்பி திவாகரன் இறுதிச் சடங்குக்கான ஏற்பாட்டைச் செய்துவருகிறார்.

ராவணன்
ராவணன்

இது குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம். ``கோவையில் சசிகலா தரப்பினர் நடத்திவருவதாகச் சொல்லப்படும் ஆயில் நிறுவனத்தில் ராவணன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அதேபோல் சசிகலாவின் மிடாஸ் மதுபான ஆலையிலும் பொறுப்பில் இருந்து கவனித்துவந்தார். கொடுக்கும் வேலையை ராவணன் துல்லியமாகச் செய்வதை கவனித்த ஜெயலலிதா அரசியல் தொடர்பான ஆலோசனைகள், மூவ்கள் எனப் பல முக்கியப் பணிகளை முக்கியத்துவம் கொடுத்து ராவணனிடம் கொடுக்கத் தொடங்கினார்.

அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஒவ்வொன்றையும் கச்சிதமாகச் செய்து கொடுத்து ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக மாறினார். பின்னர் போயஸ் கார்டன் முதல் கொடநாடு பங்களா வரை அனைத்திலும் அதிகாரம் செலுத்தக்கூடிய உச்சம் பெற்றவராக மாறினார் ராவணன். அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் கொங்கு மண்டலத்தையும் தாண்டி, மாநிலம் முழுவதும் கோலோச்சினார். தன்னை நாடி வந்த பலரை அமைச்சராக்கியவர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட பலரை உருவாக்கியவர்.

திவாகரன் உடன் ராவணன்
திவாகரன் உடன் ராவணன்

அரசு முதல் அதிகாரிகள் வரை தன் கண்ணசைவில் ஆட்டுவித்தவர். அ.தி.மு.க புள்ளிகள் வரை அதிகாரிகள் வரை பலரும் ராவணன் என்ற ஒற்றைப் பெயரையே உச்சரிக்க, சசிகலாவின் தம்பி திவகாரன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தாரே எரிச்சலடைந்தனர். எந்த வேலையாக இருந்தாலும் ராவணன் மூலமாகவே செய்கிற நிலைக்கு திவாகரனே ஆளானார். பணம் வாங்கிக்கொண்டு கட்சிப் பதவிக்குச் சிபாரிசு செய்கிறார் உட்பட ராவணன்மீது பல புகார்கள் செல்ல கோபமடைந்தார் ஜெயலலிதா.

அதன் பிறகு அவரை ஓரங்கட்டினார். சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தபோது முதல் ஆளாக நடவடிக்கைக்கு உள்ளானவர் ராவணன். அந்த அளவுக்கு ஆடிவிட்டார் என அவரது சொந்தங்களே அப்போது பேசினர். சசிகலா கணவர் ம.நடராசன், ராவணன், திவாகரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளினார் ஜெயலலிதா. அந்த மூன்று பேரில் அதிகம் பாதிக்கப்பட்டவர் ராவணன்தான்.

ராவணன்
ராவணன்

அதன் பிறகு எந்த ஆடம்பரமும் இல்லாமல், இருப்பதே வெளியே தெரியாத வகையில் அமைதியானார் ராவணன். மகனின் மருத்துவ உயர் படிப்பு மற்றும் தொழிலில் தன் கவனத்தைச் செலுத்திவந்தார். அ.தி.மு.க ஒற்றைத் தலைமை பிரச்னை ஏற்பட்டபோதுகூட ராவணனிடம் ஒருவர் கருத்து கூற, `கட்சியைவிட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன். இப்ப நமக்கு எதுக்கு அந்த விஷயம்... வேற பேசலாம்’ எனச் சொல்லிட்டு கடந்துவிட்டாராம். ஆனாலும் ராவணனால் உருவாக்கப்பட்ட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் அவருடன் நட்பில் இருப்பதாகச் சொல்லப்பட்டுகிறது” என்றனர். மன்னார்குடியில் உள்ள ராவணன் உடலுக்கு சசிகலா தொடங்கி முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.