திருச்சி தி.மு.கவில், மேயர் பதவிக்காகக் களம் இறக்கப்படுவது அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளரா அல்லது அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளரா என்கிற போட்டி பரபரக்கிறது.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் மேயராக இருந்த அனைவருமே பெண்கள்தான் என்பது மிக முக்கியமான விஷயம். தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் யாரும் மேயராக இருந்ததில்லை. துணை மேயர் பதவியை மட்டும் மாநகரச் செயலாளர் அன்பழகன் வகித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காங்கிரஸ் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே மேயராக இருந்துள்ளனர். இந்த முறை, பொதுப்பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் இரண்டு அமைச்சர்கள் தரப்பினருக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதிருச்சி தி.மு.க-வைப் பொறுத்தவரை நேரு யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்கள்தான் இதுவரையிலும் மேயர் பதவியிலிருந்துள்ளார்கள். ஆனால், இந்த முறை அன்பில் மகேஷ் தரப்பும் மேயர் பதவியைக் குறிவைத்துக் காய்நகர்த்திவருகிறது.

அந்தவகையில், அன்பில் மகேஷ் தரப்பில் மலைக்கோட்டைப் பகுதிச் செயலாளர் மதிவாணன், திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன் பெயர் முன்னிறுத்தப்படுகிறது. அன்பில் மகேஷின் உதவியாளர் மற்றும் அவரது நண்பரான அருணின் மாமாதான் மதிவாணன். இவர் மகேஷிடம் நெருக்கமாக இருக்கிறார் அவ்வளவுதான். ஆனால், நிர்வாகிகளிடம் பெரிய செல்வாக்கு இல்லை. அப்படிப்பட்டவரை எப்படி மேயராக்குவது என்கிற பேச்சும் அடிபடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அருண் எப்படியாவது தனது மாமாவுக்கு மேயர் பதவி வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் ஒற்றைக்காலில் நிற்கிறார். ஆனால், இவரை நேரு தரப்பினர் கடுமையாக எதிர்க்கிறார்கள். அடுத்தாக, கே.என்.சேகரன் அன்பில் மகேஷுக்காக இரு முறை தொகுதியை விட்டுக்கொடுத்ததோடு அவரின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தவர்.

அவர் எம்.எல்.ஏ-வாக இருந்த காலகட்டம் முதல் இன்று வரை யாரையும் அதிர்ந்துகூடப் பேசாத மனிதர் என்கிற நல்ல பெயர் எடுத்தவர். இவர் மகேஷ் தொகுதிக்குள் வருவதற்கு முன்பு நேருவின் ஆதரவாளராக இருந்தவர்.
மகேஷ், இவருக்குப் பதவி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நேரு பெரிதாக எதிர்க்க மாட்டார். ஆனால் நேருவா... மகேஷா... என்கிற போட்டி வந்தால் கண்டிப்பாக கே.என்.சேகரனுக்கு கல்தாதான் என்கிறார்கள். முன்னாள் துணை மேயரும், மாநகரச் செயலாளருமான அன்பழகனை அமைச்சர் நேரு முன்னிறுத்துகிறார். இவர் நேருவின் வலதுகரம்.

இவர் துணை மேயராக இருந்த காலகட்டத்தில் பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். நிர்வாகிகளை நெருங்க மாட்டார் என்பது இவரது மைனஸ். அதேபோல் நேருவின் மகன் அருணை, மேயர் பதவிக்காகக் களத்தில் இறக்கத் திட்டமிருந்ததாகவும், அவருக்கு எம்.பி சீட் அல்லது ராஜ்யசபா சீட் உறுதியான பிறகு அந்தப் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். இப்போது கே.என்.சேகரனா... அல்லது அன்பழகனா... என்கிற போட்டிதான் நடக்கிறது.
அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடமே இருக்கிறது. அவர் தனது மகன் ஜவஹரை மேயராக்க வேண்டும் எனத் தீவிரமாகக் காயை நகர்த்திவருகிறார்.

இதுதான் இவருக்கு மைனஸ். மற்றொருவர் ஆவின் சேர்மனாக இருக்கும் கார்த்திகேயன். இவர், எடப்பாடி வீட்டின் கிச்சன் கேபினட் வரையிலும் நல்ல பெயர் எடுத்து வைத்திருப்பவர்.
அவரின் தம்பி அரவிந்துக்கு மேயர் பதவி வாங்கிக்கொடுக்கத் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதேபோல, முன்னாள் துணைமேயரான சீனிவாசன், இம்முறை மேயர் கனவில் வலம் வருகிறார். யாருக்காகவாவது உதவி செய்தால் கூட அதில்,தனக்கு என்ன லாபம் இருக்கிறது என்று பார்க்கக்கூடியவர். இப்படித்தான் அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வுக்கு சென்று திரும்பியதும் லாபம் எதிர்பார்த்துத்தான் என்கிறார்கள். ஆவின் கார்த்திகேயனா? அல்லது சீனிவாசனா என்கிற போட்டி தான் கடுமையாக நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் துணைமேயர் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதற்கான காய்நகர்த்தலையும் திமுக அமைச்சர்களிடம் நகர்த்திக்கொண்டிருப்பதாகக் கட்சி உள்விவகாரம் அறிந்தவர்கள் சொல்லத்தொடங்குகிறார்கள்.