Published:Updated:

சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, முருகேஷ் நிராணி - கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முருகேஷ் நிராணி, எடியூரப்பா, சிடி.ரவி
முருகேஷ் நிராணி, எடியூரப்பா, சிடி.ரவி

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, `கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?' என்ற விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. கர்நாடக முதல்வர் ரேஸில் இருப்பவர்கள் யார் யார்..?

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக அரசியலில் முக்கியமானவருமான பி.எஸ்.எடியூரப்பா இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 78 வயதாகும் எடியூரப்பா நான்கு முறை கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார். நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று, ஆட்சிக்கு வந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் எடியூரப்பா.

எடியூரப்பா முதல்வராக இருந்த நான்கு முறையிலும், முழுமையாக ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், சுப்பிரமணியன் சாமி ஆதரவு... தப்பிப்பாரா கர்நாடக முதல்வர் எடியூரப்பா?

லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகியிருப்பது அந்தச் சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. `லிங்காயத் அல்லாத ஒருவரை முதல்வராக நியமிக்கவே எடியூரப்பா பதவியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்' என்பது போன்ற தகவல்கள் வெளிவந்தன வண்ணம் உள்ளன. இதனால் பா.ஜ.க-வுக்கு இனிமேல் லிங்காயத் சமுதாயத்தினர் வாக்களிக்கமாட்டார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், `எடியூரப்பாவுக்குப் பதிலாக இன்னொரு லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த தலைவரைத்தான் பா.ஜ.க மேலிடம் முதல்வராக்கவுள்ளது' என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் ரேஸில் யார் யார் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை இங்கே காணலாம்...

முருகேஷ் நிராணி

எடியூரப்பா அமைச்சரவையில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் அமைச்சராக இருந்து வருகிறார் முருகேஷ் நிராணி. எடியூரப்பா ராஜினாமா செய்வதற்கு ஒரு நாள் முன்பாக (ஜூலை 25) டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்திருக்கிறார் நிராணி. இதனால் நிராணி முதல்வர் ரேஸில் முக்கியமானவராகப் பார்க்கப்படுகிறார்.நிராணி குழுமத்தின் தலைவரான முருகேஷ் நிராணியும் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகலாத் ஜோஷி
பிரகலாத் ஜோஷி
பிரகலாத் ஜோஷி

மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைகளின் அமைச்சராக இருந்து வருகிறார் பிரகலாத் ஜோஷி. இவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருவேளை ஜோஷி முதல்வராக்கப்பட்டால், 1988 க்குப் பிறகு கர்நாடகா சந்திக்கும் பிராமண சமூக முதல்வராக இருப்பார் இவர். முதல்வர் ரேஸில் இவரது பெயர் அடிபட்ட நிலையில் கடந்த ஜூலை 24 அன்று, ``முதல்வர் பதவி குறித்து என்னிடம் இதுவரை யாரும் பேசவில்லை. ஊடகங்கள்தான் என் பெயரை வைத்து விவாதங்கள் செய்து கொண்டிருக்கின்றன'' என்று கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சி.டி.ரவி

பா.ஜ.க-வின் தேசியப் பொதுச் செயலாளரான சி.டி.ரவி நான்கு முறை சிக்மக்லூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுப்பட்டவர். தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக கர்நாடக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் ரவி. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் மேலிட பொறுப்பாளராகவும் இருந்தவர் இவரே.

 சி.டி.ரவி
சி.டி.ரவி
பசவராஜ் பொம்மை

கர்நாடகாவின் உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன். `கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?' என்கிற ரேஸில் பொம்மைக்கும் முக்கியம் இடமிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பி.எல்.சந்தோஷ்

பா.ஜ.க-வின் தேசியப் பொதுச் செயலாளர்களுள் ஒருவர் பி.எல்.சந்தோஷ். தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பாக எட்டு ஆண்டுகள் கர்நாடக மாநில பா.ஜ.க-வின் பொதுச் செயலாளராக செயலாற்றியிருப்பதால், இவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அரவிந்த் பெல்லாட்

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த அரவிந்த் பெல்லாட்டும் முதல்வர் ரேஸில் முந்தி நிற்கிறார். இரண்டு முறை எம்.எல்.ஏ-வான இவர், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவராக இருந்த சந்திரகாந்த் பெல்லாட்டின் மகன். கர்நாடகாவில் பொறியியல் பட்டமும், பிரான்ஸில் தொழில் மேலாண்மையும் படித்திருப்பது இவருக்கு கூடுதல் ப்ளஸ்!

அரவிந்த் பெல்லாட்
அரவிந்த் பெல்லாட்
twitter
`மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி!’ - கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா
ஜெகதீஷ் சேட்டர்

கர்நாடகாவின் நடுத்தர, பெரு நிறுவனங்கள் துறையின் அமைச்சராக இருந்து வரும் ஜெகதீஷ் சேட்டர், 2012 முதல் 2013 வரை கர்நாடகாவின் முதல்வராகவும் செயலாற்றியிருக்கிறார். ஏற்கெனவே முதல்வராக அனுபவம் பெற்றிருப்பதாலும், எடியூரப்பாவைப் போலவே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும் ஜெகதீஷ் சேட்டருக்கு முதல்வர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

மற்றும் சிலர்...

கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகர் விஸ்வேஷ்வர ஹெக்டே, கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயண், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான பசன்கவுடா பாட்டீல் ஆகியோரின் பெயர்களும் முதல்வர் ரேஸில் இடம்பெற்றிருக்கின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு