Published:Updated:

கோப சோனியா, கொந்தளித்த ராகுல்... கட்சிக்குள் எதிர்ப்பு ஏன்?

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

`காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டும், எளிதாக அணுகக்கூடிய ஒருவர் தலைவராக வர வேண்டும்’ என்று சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் சிலர் எழுதிய கடிதம், நேற்று (ஆக. 23) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புயலைக் கிளப்பியது.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 25-ம் தேதி தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல் காந்தி. அதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி பெறுப்பேற்றார். முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக சோனியா காந்தியால் கட்சிப் பணிகளில் முழுமையாகச் செயல்பட இயலவில்லை. இந்தநிலையில், `மீண்டும் தலைவராக ராகுல் காந்தியே பொறுப்பேற்க வேண்டும்’ என்ற குரல்கள் கட்சிக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாட்டை அவரின் சகோதரி பிரியங்கா காந்தியும் ஆமோதிக்கிறார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இத்தகைய சூழலில்தான், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் சோனியா காந்திக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக ஒரு கடிதம் எழுதினர். அனைவராலும் எளிமையாகத் தொடர்புகொள்ளக்கூடிய வகையிலான ஒருவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வருவது; காரிய கமிட்டி உட்பட கட்சியின் அனைத்து மட்டங்களிலும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவது; அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம் கட்சியில் தேவையான முக்கிய சீர்திருத்தங்களைச் செய்வது; 1970-களில் இருந்த முக்கிய நாடாளுமன்ற குழுக்களை அமைப்பது; மாநில கமிட்டிகளுக்கு அதிகாரங்கள் அளிப்பது... போன்ற பல விஷயங்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், வீரப்ப மொய்லி, சசிதரூர், பூபிந்தர்சிங் ஹூடா, பிரித்விராஜ் சவான், முகுல் வாஸ்னிக், மணீஷ் திவாரி, மிலிந்த் தியோரா, ஜிதின் பிரசாதா, ராஜ் பப்பார், சந்தீப் தீட்சித் உள்ளிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்தக் கடிதம், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புயலைக் கிளப்பியது.

பல கோரிக்கைகள் அந்தக் கடிதத்தில் முன்வைக்கப் பட்டிருந்தாலும், ’காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை சோனியா காந்தியின் மனதை வேதனைப்படுத்தியது. நேற்று நடைபெற்ற காரிய கமிட்டிக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, `தற்காலிகத் தலைவர் பதவியிலிருந்து என்னை விடுவியுங்கள்’ என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இந்தக் கடிதத்தை எழுதிய தலைவர்கள்மீது ராகுல் காந்தி கோபத்துடன் பாய்ந்தார். `பா.ஜ.க-வுடன் சேர்ந்துகொண்டு செயல்படுகிறீர்கள்’ என்று கடிதம் எழுதியவர்களைப் பார்த்து ராகுல் காந்தி கொந்தளித்தார். இதனால், காரிய கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கபில் சிபல்
கபில் சிபல்

பா.ஜ.க-வுடன் சேர்ந்துகொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதால், கடிதம் எழுதிய கபில் சிபல், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வருத்தமடைந்தனர். குலாம்நபி ஆசாத் தம் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ``நாங்கள் பா.ஜ.க-வுடன் சேர்ந்துகொண்டு செயல்படுவதாக ராகுல் கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றேன். மணிப்பூரில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு பா.ஜ.க-வை பதவியிலிருந்து இறக்கினேன். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்னையிலும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக நான் கருத்து சென்னதில்லை” என்று கபில் சிபல் தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டார். ஆனாலும், சற்று நேரத்தில் சமாதானப்படலம் நடந்து முடிந்தது.

`சோனியா காந்தி தலைவராக இருக்கக் கூடாது’ என்று ஒரு தரப்பு கூறினாலும், நேரு குடும்பத்துக்கு ஆதரவாகப் பலர் களமிறங்கியுள்ளனர். `தலைமையில் மாற்றம் வேண்டும்’ என்று கடிதம் எழுதியதை மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் விமர்சித்தனர். `நெருக்கடியான சூழலில் கட்சி இருக்கும் நேரத்தில், இப்படியொரு கடிதம் எழுதப்பட்டிருக்கக் கூடாது’ என்று கட்சியின் மூத்த தலைவர்களான கமல்நாத், அமரீந்தர் சிங், அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட தலைவர்கள் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த பலரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ``காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர வேண்டும். கோடிக்கணக்கான இந்திய மக்களும் செயல் வீரர்களும், சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் பின்பற்றுகிறார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். விருதுநகர் தொகுதி எம்.பி-யான மாணிக்கம் தாகூர், ``நேரு குடும்பம் என்பது தியாகத்தின் குறியீடு. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தின் முடிவு என்பது காங்கிரஸ் கட்சியின் 1,100 மூத்த நிர்வாகிகள், பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் 8,800 உறுப்பினர்கள், ஐந்து கோடி தொண்டர்கள், 12 கோடி ஆதரவாளர்கள் ஆகியோரின் முடிவை எதிரொலிப்பதாகும். இவர்கள் எல்லோரும் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், `ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும்’ என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்.

கலைக்கப்படப் போகிறதா டி.என்.பி.எஸ்.சி... `One Nation One Test' திட்டத்தின் நோக்கம் என்ன?

அதே நேரத்தில், `நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக வர வேண்டும்’ என்று ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உறுதிபடக் கூறிவரும் நிலையில், `அடுத்த தலைவர் யார்?’ என்ற கேள்வியும் எழுகிறது. ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட், 16-வது நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. `காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று கட்சிக்குள் இப்போது கலகக்குரல் எழுப்புபவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சதித்திட்டத்தில் சிக்கியிருக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர்களில் சிலர் முன்வைக்கிறார்கள்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பேசியபோது, ``சோனியா காந்திக்கு வயதாகிவிட்டது. அவருக்கு உடல்நலப் பிரச்னையும் இருக்கிறது. அவரால் நீண்டகாலத்துக்கு தலைவர் பதவியில் இருக்க முடியாது. இன்னொருபுறம், `தலைவர் பதவி வேண்டாம்’ என்று ராகுல் காந்தி சொல்லிவருகிறார். பிரியங்கா காந்தியும் அதே கருத்தில் இருக்கிறார். இந்தச் சூழலில், கட்சிக்கான எந்த வேலையும் செய்யாத, கட்சியால் பலன்களை மட்டுமே அனுபவித்த சிலர் உள்ளே புகுந்து பிரச்னை செய்யப் பார்க்கிறார்கள். அவர்கள்தான், சோனியா காந்திக்கு அந்தக் கடிதத்தை எழுதியவர்கள். அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் குலாம்நபி ஆசாத் உட்பட மூன்று பேர் மட்டுமே காரிய கமிட்டி உறுப்பினர்கள். அந்த மூன்று பேரைத் தவிர ஒட்டுமொத்த காரிய கமிட்டியும் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் ஆதரவாக இருக்கிறது. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவர். அவர் மறுத்தாலும், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் அவரைத் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தும். அவர்தான் மீண்டும் தலைவராவார். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு