Published:Updated:

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் - யார் இந்த அர்ஜுனமூர்த்தி?

ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி
ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி

கட்சி தொடங்குவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு பத்திரிகையாளர்களைச் சந்திக்கையில் ரஜினி, தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியை அறிவித்தார்.

கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரஜினி, இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது உடனிருந்த அர்ஜுனமூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அர்ஜுனமூர்த்தி, ``இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு, இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தலைவருக்கு நன்றி. கோடானு கோடி ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அமைப்பில் எங்களுக்கெல்லாம் உதவிகரமாக, தமிழருவி மணியன் இருப்பது மிகவும் சந்தோஷம். நான் இங்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.

அர்ஜுனமூர்த்தி
அர்ஜுனமூர்த்தி

இங்கு மாற்று அரசியல் கொண்டுவருவதற்கான எல்லா ஆயத்தங்களையும் நாங்கள் தயார்படுத்தியிருக்கிறோம். நீங்கள் அந்த மாற்றத்தையும், நல்ல அரசு அமைவதையும் வெகுவிரைவில் சந்திக்கப்போகிறீர்கள். அதற்கான உழைப்பையும் சிந்தனையையும் நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் முழுமையாக மக்களை மட்டுமே நம்பியிருக்கிறோம் என்பதால் உங்களின் ஆதரவை என்றைக்குமே எங்களுக்குக் கொடுக்க வேண்டும்" என்று பேசினார்.

`இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல; ஜனவரியில் கட்சி தொடக்கம்!’ - ரஜினி அறிவிப்பு

யார் இந்த அர்ஜுனமூர்த்தி?

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி நீண்டகாலமாக முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்துவந்தார். அவரின் நெருங்கிய நட்பு வட்டத்திலும் இருந்துவந்திருக்கிறார். முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர், தி.மு.க-விலிருந்து விலகிய இவர், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மீது அதிக பற்றுக்கொண்ட இவர், முதலில் பா.ஜ.க-வின் வர்த்தகப் பிரிவில் பதவி வகித்துவந்தவர்.

அர்ஜுனமூர்த்தியின் ட்விட்டர் பக்கம்
அர்ஜுனமூர்த்தியின் ட்விட்டர் பக்கம்

பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தார். இவரின் மகளை தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் மாமா மகனுக்குத் திருமணம் செய்துகொடுத்திருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கு விவாகரத்து ஆனது. தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் ட்விட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுனமூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது. பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தலைவராகப் பதவியேற்றதன் 100-வது நாள் விழாவைக் கடந்த நவம்பர் 11-ம் தேதிதான் கொண்டாடியிருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. இவரின் மனைவி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளித் தோழி. டெல்லி, தமிழக பா.ஜ.க தலைமையுடன் நெருக்கமாக இருந்த இவர், பல்வேறு தொழில்களையும் நடத்திவருகிறார்.

இந்தநிலையில், ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜுனமூர்த்தி, பா.ஜ.க-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்திருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்திருக்கிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அர்ஜுனமூர்த்தி நீக்கப்படுவதாகவும் பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு