Published:Updated:

“எனக்கு அரசாங்கக் கடன் விவரமும், வரவு-செலவு டீடெய்லும் வேணும்!”

‘யோகா’ ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
‘யோகா’ ரமேஷ்

கிறுகிறுக்க வைக்கும் ‘யோகா’ ரமேஷ்

“எனக்கு அரசாங்கக் கடன் விவரமும், வரவு-செலவு டீடெய்லும் வேணும்!”

கிறுகிறுக்க வைக்கும் ‘யோகா’ ரமேஷ்

Published:Updated:
‘யோகா’ ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
‘யோகா’ ரமேஷ்

‘தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63,976 ரூபாய் கடன் இருக்கிறது’ என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட்டுப் பேசியதைத் தொடர்ந்து, “என் தலையை அடமானம்வைத்து, அரசு வாங்கிய அந்தக் கடனை நான் கட்டுகிறேன். ஆனால், அந்தக் கடன் ஆவணங்களை எனக்குத் தர வேண்டும்!” என்று பகீர் கிளப்பினார் ‘யோகா’ ரமேஷ் என்பவர். அத்துடன், தன் பங்கு கடன் தொகையான 2,63,976 ரூபாய்க்கான காசோலையை ஆர்.டி.ஓ-விடம் கொடுத்து, திகிலூட்டவும் செய்தார் ரமேஷ். சீரியஸான விவாதங்களுக்கும், கிண்டலான மீம்ஸ்களுக்கும் காரணமான இந்த ரமேஷ் யார்... என்ன செய்துகொண்டிருக்கிறார்?

நாமக்கல் மாவட்டம், மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த யோகா மாஸ்டரான ரமேஷ், கடந்த 21 ஆண்டுகளாகப் பல நாடுகளுக்கும் சென்று யோகா பயிற்சியளித்துவருகிறார். ‘காந்தியின் கொள்கையை பரப்புகிறேன்’ என்று கடந்த மூன்று ஆண்டுகளாக, காந்திபோலவே சட்டை போடாமல், கதர் வேட்டியைப் போர்த்திக்கொண்டு, தன்னை காந்தியாகவே பாவித்துக்கொண்டு நடமாடிவருகிறார்.

“எனக்கு அரசாங்கக் கடன் விவரமும், வரவு-செலவு டீடெய்லும் வேணும்!”

சம்பவம் 1: கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் தனது ‘அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி’ சார்பில் சுயேச்சையாகப் போட்டி யிட்டார் ரமேஷ். அவருக்கு கிரிக்கெட் வீரர் சின்னம் ஒதுக்கப்பட, காந்தி உடையோடு கிரிக்கெட் பேட், கால்களில் பேடுகள் கட்டிக்கொண்டு, தலையில் ஹெல்மெட் சகிதம் வாக்கு கேட்கப் புறப்பட்டார். அந்தக் கோலத்திலேயே வங்கி ஒன்றுக்குச் சென்றவர், “கொரோனாவால் வாக்காளர்கள் வருமானமில்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை கொடுக்க, 46 கோடி ரூபாய் கடன் வேண்டும்” என்று கேட்க, வங்கி மேலாளர் தலை கிறுகிறுத்துப்போனார்.

சம்பவம் 2: ‘கடந்த 70 ஆண்டுகளில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்களிடம் கைப்பற்றிய பல லட்சம் கோடி ரூபாய் பணம், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்கள், தங்கம், வைரம், வைடூரியம், அண்டா, குண்டா, சோப்பு, சீப்பு போன்ற பொருள்கள் என்ன ஆயின... அவை எங்கு உள்ளன... தேர்தல் ஆணையம் அவற்றை என்ன செய்தது?’ என்று கேள்வி கேட்டு, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பினார் ரமேஷ். அத்துடன், ‘அந்தப் பொருள்களை எனது ‘அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி’க்கு வழங்க வேண்டும். அதைக்கொண்டு, மக்களுக்கு உதவிகளைச் செய்வேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து இப்படி ஏதாவதொரு சம்பவத்தைச் செய்துவரும் ‘யோகா’ ரமேஷைச் சந்தித்து, ``என்னதான் சொல்லவருகிறீர்கள்?’’ என்று கேட்டோம்.

“காந்தியக் கொள்கையைக் கடைப்பிடிக்காததால் தான், இன்று நாடு நாசமாப் போயிட்டிருக்கு. அதனாலதான், நான் காந்தி அவதாரம் எடுத்திருக்கேன். ஒவ்வோர் அரசு ஆட்சிக்கு வரும்போதும், ‘உங்க தலையில இத்தனை லட்சம் கடன் இருக்கு, அத்தனை லட்சம் கடன் இருக்கு’னு மாத்தி மாத்திச் சொல்றாங்க. ஆனா, எதுக்காக வாங்குறாங்க, எதுக்காகச் செலவு செஞ்சாங்கனு பொதுமக்களுக்குச் சொல்ற தில்லை. ஆனா, நம்ம தலையை அடகுவெச்சு கடன் வாங்கும் அரசியல் வாதிகளும் அதிகாரி களும் திடீர் திடீர்னு கோடீஸ்வரர்களாக ஆகிடுறாங்க. நாம... இன்னும் ஏழையாகிட்டே போறோம்.

“எனக்கு அரசாங்கக் கடன் விவரமும், வரவு-செலவு டீடெய்லும் வேணும்!”

தனிப்பட்ட முறையிலும், அரசாங்கம் வாயிலாகவும் நாம கடன்காரங்களா ஆகுறோம். அதனாலதான், அரசு வாங்கிய கடனை அடைக்க என் தலைக்கான தொகையை, நாமக்கல் ஆர்.டி.ஓ-விடம் செக்கா கொடுத்தேன். ‘எனக்கு இதை வாங்கும் அதிகாரம் இல்லை’னு சொல்லி என்னை வெளியே அனுப்பிட்டார். கலெக்டரைப் பார்க்கப் போனேன். ‘மேடம் பிஸி’ன்னாங்க. அடுத்த நாளும் போனேன். பழைய கதையையே சொன்னாங்க. எத்தனை நாள் ஆனாலும் சரி, இந்த செக்கைக் கொடுக்காம ஓயப்போறதில்லை” என்றார்.

“இப்படிச் செய்வதால், என்ன மாற்றம் வந்துடும்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டோம்.

“யார்தான் அதிகாரத்துக்கு மணி கட்டுறது? இப்படி, வித்தியாசமா ஏதாவது பண்ணினாத்தான் மக்களுக்கு விஷயம் ரீச் ஆகுது. என்னைவெச்சு அரசாங்கம் வாங்கிய கடனுக்கான வரவு-செலவு கணக்கை எனக்குக் கொடுக்கணும். அந்தப் பணத்தை எதற்கெல்லாம் செலவு பண்ணியிருக்காங்கங்கிற டீடெய்லும் வேணும்” என்றார் சீரியஸாக!

இப்ப நாம சிரிக்கணுமா... சிந்திக்கணுமா?