Published:Updated:

`ஹத்ராஸை யாரும் பாகிஸ்தானுடன் ஒப்பிடவில்லையே, ஏன்?!’ - கங்கனா, பா.ஜ.க-வை விளாசிய சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

`ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு ஆதரவு கிடைக்காததற்குக் காரணம், அவர் கங்கனாவைப்போல் சினிமா நட்சத்திரமோ, பிரபலமோ அல்ல. ஒரு குடிசையில் வாழ்ந்த சாதாரண படியலினப் பெண்’ என்கிறார் சஞ்சய் ராவத்.

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில், பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதேயான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ``ஹத்ராஸ் இளம்பெண், கங்கனாவைப்போல் சினிமா நட்சத்திரமில்லை. குடிசையில் வாழ்ந்தவர். அவரும் சட்ட விரோதமாகக் கட்டடம் கட்டியிருந்தால் ஆதரவுக் குரல் பெருகியிருக்கும்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து, சர்ச்சைகளைக் கிளப்பிவரும் நடிகை கங்கனா ரணாவத், சமீபத்தில் மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் மாறியிருப்பதாக ட்விட்டரில் வெளியிட்ட கருத்து, பெரும் சர்ச்சையாக உருமாற, சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

இதையடுத்து, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா ஆகியோரிடையே மோதல் அதிகரித்தது. இந்தநிலையில் மும்பை பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கனாவின் அலுவலகம் சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். `கட்டடம் இடிக்கப்பட்டதுபோல் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் ஆணவமும் இடிக்கப்படும்’ என்று தெரிவித்த கங்கனா, மும்பை உயர் நீதிமன்றத்தில் ரூபாய் 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாநகராட்சி அதிகாரிகள் மேல் வழக்கு தொடர்ந்தார்.

இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாற்று சாதி இளைஞர்கள் நான்கு பேர் அந்தப் பெண்ணை, அருகிலிருந்த வீட்டில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கடுமையாகத் தாக்கவும் செய்தனர். இதனால் மயக்கமடைந்த அந்தப் பெண்ணை சாலையோரம் போட்டுவிட்டுச் சென்றனர்.

போராட்டம்
போராட்டம்
Rajanish Kakade

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளம்பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் சடலத்தை இரவோடு இரவாக ஹத்ராஸ் கொண்டுவந்த போலீஸார், அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே தகனம் செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளான `சாம்னா’வில், கருத்து தெரிவித்திருக்கும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அந்தக் கட்டுரையில் சஞ்சய் ராவத், `மும்பையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கங்கனாவின் அலுவலகத்தை இடித்த பிறகு பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் அட்டூழியங்கள் அதிகரித்திருக்கிறது என்று குரல் கொடுத்தவர்கள், ஏன் ஹத்ராஸ் இளம்பெண் சட்டவிரோதமாக தகனம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு அமைதியாக இருக்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

`ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு ஆதரவு கிடைக்காததற்குக் காரணம், அவர் கங்கனாவைப்போல் சினிமா நட்சத்திரமோ, பிரபலமோ அல்ல. ஒரு குடிசையில் வாழ்ந்த சாதாரண பட்டியலினப் பெண். அந்த இளம்பெண் சட்டவிரோத கட்டடங்களைக் கட்டியிருந்தால் ஒருவேளை ஆதரவுக் குரல் கொடுத்திருப்பார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஜந்தர் மந்தர் போராட்டம்
ஜந்தர் மந்தர் போராட்டம்

மேலும், `பாகிஸ்தானில் இந்துப் பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களுக்குப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அநீதிகள் இழைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அதே போன்ற சம்பவம் தற்போது ஹத்ராஸில் நடந்திருக்கிறது. ஆனால், யாரும் ஹத்ராஸை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசவில்லை’ என்று, `கடந்த மாதம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ எனறு கங்கனா கூறியதை மேற்கோள் காட்டினார்.

`இது போன்ற சம்பவம், மகாராஷ்டிராவில் நடந்திருந்தால் ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்திருப்போம்’ என்று உத்தரப்பிரதேச ஆளும் பா.ஜ.க அரசைத் தன் எழுத்தில் கடுமையாகச் சாடியிருக்கிறார் சஞ்சய் ராவத்.

அடுத்த கட்டுரைக்கு