Election bannerElection banner
Published:Updated:

மேற்கு வங்கம்: மம்தாதான் டார்கெட்; யார் முதல்வர் வேட்பாளர்? - மோடி நடத்திய அவசர ஆலோசனை

மோடி - மம்தா
மோடி - மம்தா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம், பவானிபூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறார். இதில் பவானிபூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட மத்திய அமைச்சர் ஒருவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனக் கட்சிகள் பரபரப்பாக வேலைகளைத் தொடங்கிவிட்ட நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்த, பா.ஜ.க சார்பில் யாரை எதிர்வேட்பாளராகக் களமிறக்கலாம் எனத் தீவிர ஆலோசனையில் பா.ஜ.க தலைமை ஈடுபட்டுவருகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இந்தியத் தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை அறிவித்தது. இந்தநிலையில், மேற்கு வங்க தேர்தல் குறித்தான பா.ஜ.க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு வரை நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றார் . திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம், பவானிபூர் தொகுதிகளில் போட்டியிடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். இதில் பவானிபூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்துப் போட்டியிட மத்திய அமைச்சர் ஒருவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய மம்தாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த, சுவேந்து அதிகாரியை களமிறக்க பா.ஜ.க ஆலோசித்துவருகிறது. டெல்லியிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திக் காட்டுவேன் என்று பா.ஜ.க தலைவர்களிடம் சுவேந்து அதிகாரி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், முக்கியமான 15 தொகுதிகளில் யாரைக் களமிறக்குவது என்பது குறித்து பா.ஜ.க தலைவர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். 30 ஆண்டுக்கால கம்யூனிஸ்ட் ஆட்சியை தூக்கியெறியச் செய்ததில் நந்திகிராமில் நடந்த விவசாயிகள் போராட்டம் மிக முக்கியமானது. அன்றைய காலகட்டத்தில் அந்தப் போராட்டங்களை முன்னெடுத்தவர் சுவெந்து அதிகாரி. அதே தொகுதியில் தனக்கு என உறுதியான வாக்குவங்கியையும் அவர் உருவாக்கிவைத்திருக்கிறார்.

மும்முனைப் போட்டி; பரபரக்கும் தேர்தல் களம் - மக்கள் யார் பக்கம்? மேற்கு வங்க ரிப்போர்ட்!

பவானிபூர் தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற மம்தா, இந்த முறை பவானிபூர், நந்திகிராம் இரண்டு தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டிருக்கிறார். `நந்திகிராம் எனக்கு அதிர்ஷ்டமான இடம், நந்திகிராம் எனக்கு அக்கா என்றால், பவானிபூர் தங்கை’ என்று குறிப்பிட்டிருக்கும் மம்தா, `வாய்ப்பிருந்தால் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவேன், இல்லையென்றால் பாவனிபூரில் வேறு யாராவது போட்டியிடுவார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பா.ஜ.க நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்கத்தின் நிலவரம் குறித்து திலீப் கோஷ், சுவேந்து அதிகாரி, ராஜிபி பானர்ஜி ஆகியோரிடம் கேட்டறிந்திருக்கிறா மோடி. மம்தாவுக்கு எதிராக யார் களமிறக்கலாம் என்ற இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் என்பதால், பா.ஜ.க-வினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு