Published:Updated:

`முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான இருவருக்குள் நடக்கும் ரேஸ்..!’ - தஞ்சாவூர் மாநகர மேயர் யார்?

தஞ்சாவூர் மாநகர மேயர் ரேஸ்

திருச்சியில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த நேருவின் ஆதரவாளரான ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படும் நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயரை அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திமுக தலைமை தராது என்கின்றனர்.

`முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான இருவருக்குள் நடக்கும் ரேஸ்..!’ - தஞ்சாவூர் மாநகர மேயர் யார்?

திருச்சியில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த நேருவின் ஆதரவாளரான ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படும் நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயரை அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திமுக தலைமை தராது என்கின்றனர்.

Published:Updated:
தஞ்சாவூர் மாநகர மேயர் ரேஸ்

தஞ்சாவூர், பழைமையான நகரம் என்ற பட்டியலில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அரசியலில் விழிப்புணர்வுகொண்ட பகுதியாகவும் இருந்துவருகிறது. 156 ஆண்டுகள் பழைமையான தஞ்சாவூர் நகராட்சி, 2014-ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போதைய தேர்தல் முடிவுக்குப் பிறகு மாநகராட்சி மேயர் சீட்டைப் பிடிப்பதற்கு திமுக-வினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. மேயர் ரேஸில் இருப்பவர்கள் கட்சியில் ஆளுக்கொரு ஆளுமையைப் பிடித்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர். ஸ்டாலின் யாரை `டிக்’ செய்வார் என்பது தெரியாததால், மேயர் ஆசையில் இருப்பவர்களின் படபடப்பு எகிறியிருக்கிறது.

தஞ்சாவூர்
மாநகராட்சி மேயர் ரேஸில் இருக்கும் சண்.இராமநாதன்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ரேஸில் இருக்கும் சண்.இராமநாதன்

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 37 வார்டுகளிலும், திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நான்கு வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். முன்னர் திமுக-வின் கோட்டையாகத் திகழ்ந்த தஞ்சாவூர், பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ., நகராட்சி என அனைத்தையும் அதிமுக கைப்பற்றிக்கொண்டது. கடந்த முறை அதிமுக வசமிருந்த மாநகராட்சியில் சாவித்திரி கோபால் மேயராகப் பதவியேற்றுக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர், எம்.பி., ம் எம்.எல்.ஏ என இரண்டையும் பிடித்து மீண்டும் தஞ்சையைக் கோட்டையாக மாற்றியிருக்கும் திமுக, தற்போது மாநகராட்சியையும் பிடித்துள்ளது. திமுக பெரும்பான்மையாக வெற்றிபெற்றிருப்பதால் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராக பதவியேற்கவிருக்கிறார். மாநகராட்சியில் பவர்ஃபுல்லான மேயர் நாற்காலியைப் பிடிக்க, கடும் போட்டா போட்டி நிலவிவருகிறது. வெற்றி வேட்பாளர்களைப்போலவே தஞ்சாவூர் மக்களும் அடுத்த மேயர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.

வெற்றிச் சான்றிதழைப் பெறும் டாக்டர் அஞ்சுகம் பூபதி
வெற்றிச் சான்றிதழைப் பெறும் டாக்டர் அஞ்சுகம் பூபதி

யார் யார் ரேஸில் இருக்கிறார்கள்... நாற்காலியை எட்டிப் பிடிக்க அதன் எல்லை வரை செல்லவிருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து உள் விவரங்கள் அறிந்த திமுக புள்ளிகள் சிலரிடம் பேசினோம். ``நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே, மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான சண்.இராமநாதன், மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரான டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் மாவட்டப் பொருளாளரும், தொழிலதிபருமான மேத்தா, மாநகர துணைச் செயலாளர் நீலகண்டன் ஆகியோரின் பெயர்கள் பலமாக அடிபட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது டி.ஆர்.பாலுவின் ஆதரவாளரான மேத்தா, அவர் மூலமாக கட்சியில் சீனியர் என்பதைவைத்தே காய்களை நகர்த்திவருகிறார். தஞ்சாவூர் எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம் தன் ஆதரவாளரான நீலகண்டனுக்கு மேயர் சீட் வாங்கி விட வேண்டும் என ஸ்டாலினிடம் பேசிவருகிறார். இதற்காக நீலகண்டன் சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் சண்.இராமநாதன், டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகிய இரண்டு பேருடைய பெயர்கள் மட்டுமே பலமாக அடிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

புண்ணியமூர்த்தி
புண்ணியமூர்த்தி

சண்.இராமநாதன், ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். ஸ்டாலின் தொடங்கி உதயநிதி வரை சண்.இராமநாதனை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அறிமுகமானவர். ஆனால் அதை எந்த இடத்திலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். கோஷ்டி அரசியலுக்குள் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். தலைமை நினைப்பதைக் கச்சிதமாகச் செய்து முடிப்பார். தலைமையின் நேரடித் தொடர்பில் இருப்பவர். அதனாலேயே சிலருக்கு இவரைப் பிடிக்காது.

இளைஞரணியில் இருப்பதால் உதயநிதி தனக்குச் செய்வார் ’என்ற நம்பிக்கையில் இருக்கிறார். உதயநிதியும் பெயரிலேயே `சண் இருக்குது. இளைஞரணிக்கும் முக்கியத்துவம் கொடுத்த மாதிரி இருக்கும் என சண்.இராமநாதன் பெயரை `டிக்’ செய்து ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு முறை கவுன்சிலராக இருந்தவர், தற்போது ஹாட்ரிக் அடித்துள்ளார். மாநகராட்சி குறித்த நிலவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் அனுபவக்காரர். சாதிக்க வேண்டும் என்ற வேகமும் அவரிடம் இருக்கிறது. சீனியாரிட்டியிலும் பாஸாகிவிடுகிறார். மத்திய மாவட்டப் பொறுப்பாளர் சந்திரசேகரன் ஆதரவும் இருப்பதால் ஈஸியாக அமைச்சர் நேருவின் ஆசியும் கிடைத்துவிடும் எனக் கணக்கு போட்டு மேயர் சீட்டில் உட்கார்ந்தே தீர வேண்டும் என வேகம் காட்டி காட்டிவருகிறார்.

மேத்தா
மேத்தா

டாக்டர் அஞ்சுகம் பூபதியின் அப்பா மறைந்த பூபதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர். அப்போது ஏற்பட்ட ஸ்டாலினின் குடும்பத்துடனான உறவு தற்போது வரை தொடர்கிறது. கர்ப்பிணியாக இருந்த அஞ்சுகத்துக்கு தலைமை சீட் வழங்கிய நிலையில் ஆண் குழந்தையும் பிறந்தது. அதை அதிர்ஷ்டமாக நினைக்கும் அஞ்சுகம், தனக்கு மேயர் சீட் கிடைக்கும் என நம்புகிறார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசு மருத்துவர் பதவியை உதறியவர். முதன்முறை போட்டியிட்டபோது வாக்கு பதிவுக்கு முதல் நாள் தேர்தல் நின்றுபோனது இவரின் துரதிர்ஷ்டம்.

அடுத்து நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டதே தோல்விக்குக் காரணமாக சொல்லப்பட்டது. அதுவே தற்போது வரை தொடர்வது இவரின் பலவீனம். துர்கா ஸ்டாலின், செல்வி உள்ளிட்ட முதலமைச்சரின் கிச்சன் கேபினட்டுகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதால் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர். எம்.எல்.ஏ தேர்தலில் சீட் கேட்டபோதே மேயருக்கு பாத்துக்கலாம் என ஸ்டாலின் சொன்னதை நம்பிக்கொண்டிருக்கிறார்.

டாக்டர் அஞ்சுகம் பூபதி
டாக்டர் அஞ்சுகம் பூபதி

கடந்த 24-ம் தேதி ஸ்டாலின் வெற்றிபெற்றவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகாததால் அஞ்சுகத்தால் செல்ல முடியவில்லை. தன் கணவர் வெற்றியை அனுப்பிவைத்தார். அஞ்சுகத்தை மேயர் ஆக்குவதற்கு ஸ்டாலின் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க. குழந்தை பிறந்திருப்பதால் உடல்நிலை உள்ளிட்டவை அவரை யோசிக்க வைக்குது. ஏற்கெனவே 11 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூரிலும் பெண்ணுக்கு மேயர் ஒதுக்கப்படுவதை கட்சியினர் பலரும் விரும்பவில்லை. ஆனாலும் அஞ்சுகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்பது ஸ்டாலினின் எண்ணமாக உள்ளது. என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்கின்றனர்.

துணை மேயர் ரேஸில் சீனியரான புண்ணியமூர்த்தி, சுமதி இளங்கோவன்,செந்தமிழ்ச் செல்வன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மயிலாடுதுறை தொகுதி திமுக எம்.பி-யான ராமலிங்கத்தின் சொந்த மைத்துனர் புண்ணியமூர்த்தி. அமைதியானவர், ஆடம்பரம் இல்லாதவர் எனப் பெயரெடுத்தவர். கோஷ்டிக்குக்குள் சிக்காதவர். ஒவ்வொரு முறையும் மேயர் ரேஸில் இவரின் பெயர் அடிபடும். இந்த முறை மேயர் இல்லையெறால் துணை மேயராவது வாங்கிட வேண்டும் என ராமலிங்கத்தின் மூலமாக மெனக்கெடுகிறார்.

சண்.ராமநாதன்
சண்.ராமநாதன்

உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் தஞ்சை மாவட்டத் தலைவராக இருப்பவர் உதயநிதி என்பவர். இவருடைய அம்மா சுமதி இளங்கோவன். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் ஆசி இவருக்கு உள்ளது. தஞ்சையில் பெரும்பாலான கிராமங்களில் உதயநிதி மன்றத்தைக் கொண்டு சேர்த்தவர் என்பதால் உதயநிதிக்குமே இவர்மீது தனிப் பாசம் உள்ளது. அதைவைத்து துணை மேயர் பதவி பெறுவதற்காகத் தீவிரமாக முயல்கிறார்.

துரை.சந்திரசேகரன் ஆதரவாளராக வலம்வரும் செந்தமிழ்ச் செல்வன் பசையான பார்ட்டி. சந்திரசேகரனுக்கு எல்லாமுமாக இருக்கிறார். அவ்வப்போது அவரது செலவையும் கவனித்துவருகிறார். தன் ஆதரவாளர் ஒருவர் இருந்தால் தனக்கு நல்லது என நினைப்பதால் டி.ஆர்.பாலுவிடம் சொல்லி துணை மேயரை செந்தமிழ்ச் செல்வனுக்கு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என சந்திரசேகரன் நினைக்கிறார்.

நீலகண்டன்
நீலகண்டன்

திருச்சியில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த நேருவின் ஆதரவாளரான ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படும் நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியிலும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தர மாட்டார்கள் என்கிறார்கள். மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவருக்கே கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அஞ்சுகம் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது மைனஸ். சண்.இராமநாதன் மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ப்ளஸ்ஸாகி அவரே உதயமாவதற்கு வாய்ப்புள்ளதாக உள் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism