Published:Updated:

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வெற்றியை நிர்ணயிக்கப்போகும் 5% வாக்குகள்!- ஜெயிக்கப்போவது யார்?

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என்பது அடுத்து வரவுள்ள பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதப்படுகிறது. அதனால், இந்தத் தொகுதிகளில் வெற்றியைக் கைப்பற்ற வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியினர் தீவிரம் காட்டினார்கள்.

Nanguneri board
Nanguneri board

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 21-ம் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜநாராயணன், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹரிநாடார் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதனால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

Electronic Voting Machine
Electronic Voting Machine

நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,56,414. ஆனால் வாக்குப்பதிவு தினத்தில், ஆண்களில் 80,500 பேரும் பெண்களில் 90,122 பேரும் இதர பிரிவைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 1,70,624 வாக்காளர்கள் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

பொதுவாக இடைத்தேர்தலில் அதிகமாக வாக்குப்பதிவு இருக்கும். ஆனால், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்தத் தொகுதியில் 71 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 5 சதவிகிதம் குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தன.

நாங்குநேரி இடைத்தேர்தல்... கடும் போட்டியில் அ.தி.மு.க., காங்கிரஸ்!
பள்ளர், காலாடி உள்ளிட்ட ஏழு சமூகங்களை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும்
பட்டியல் சமூகத்தினர் கோரிக்கை

ஆதி திராவிடர் பட்டியலில் உள்ள தங்களை அதிலிருந்து வெளியேற்றி தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்பது அந்தச் சமூக மக்களின் கோரிக்கை. இதை அரசு நிறைவேற்றாததால் அந்தச் சமூகத்தினர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தார்கள். அதன் காரணமாகவே வாக்குப் பதிவு சதவிகிதம் கணிசமாகக் குறைந்தது.

பட்டியல் சமூகத்தினரில் பெரும்பான்மையினர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக் கூடியவர்கள். ஆனால், அவர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்ததால் காங்கிரஸ் வாக்கு வங்கியில் பங்கம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. அத்துடன், பனங்காட்டுப்படை கட்சியைச் சேர்ந்த ஹரிநாடாருக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் கை சின்னத்துக்கு வாக்களிக்கக் கூடியவர்கள்.

Ruby Manoharan
Ruby Manoharan

இந்த இடைத்தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடாததால் அந்தக் கட்சியினர் இந்தமுறை கை சின்னத்துக்கு வாக்களித்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து ராஜகண்ணப்பன் மேற்கொண்ட பிரசாரம் அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளைக் காங்கிரஸ் பக்கம் திருப்பியிருக்கிறது.

அ.தி.மு.க வேட்பாளரான நாராயணன் ஆரம்பத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், தொடர்ந்து தொகுதியில் முகாமிட்டிருந்த அமைச்சர்களின் பிரசாரம் அவருக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் பல கிராமங்களில் அ.தி.மு.க-வுக்கு ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தார்கள்.

Narayanan
Narayanan

காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வினர் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். சில கிராமங்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்த அமைச்சர்கள், தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கூடுதலாக ரூ.500 முதல் ரூ.1000 வரை விநியோகம் செய்திருப்பது அ.தி.மு.க வேட்பாளரான நாராயணனுக்கான வாக்குகளை அதிகரிக்க உதவியிருக்கிறது.

நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (24-ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

police force in counting center
police force in counting center

நாங்குநேரி தொகுதியில் பணம் தண்ணீராகப் பாய்ந்த நிலையில், இந்த இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இரு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதால் இழுபறியுடனேயே வாக்கு எண்ணிக்கை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த இந்தத் தொகுதியில் பணம் வெற்றியைத் தீர்மானிக்குமானால், அ.தி.மு.க-வின் நாராயணன் வாகைசூடுவார்.

விக்கிரவாண்டி நிலவரம்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏவான தி.மு.கவைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜுன் மாதம் உயிரிழந்ததால் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி. அ.தி.மு.க சார்பில் காணை ஒன்றியத்தின் செயலாளர் ஆர்.முத்தமிழ்ச்செல்வனும், தி.மு.க சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தியும் வேட்பாளராகக் களமிறங்கினார்கள். கையிலிருக்கும் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தி.மு.கவும், அதைக் கைப்பற்ற அ.தி.மு.கவும் கடுமையாகப் போராடிய இந்தத் தேர்தல் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குமான பலப்பரீட்சையாகவே பார்க்கப்பட்டது.

முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரே தொகுதியைக் குறி வைத்துப் பிரசாரம் மேற்கொள்ளும்போது அங்கு பதிவாகும் வாக்குகளின் சதவிகிதம் அதிகரிப்பது வாடிக்கையான நிகழ்வு. இந்தத் தேர்தலில் மொத்தம் பதிவான 1,88,659 வாக்குகளில் பெண்கள் அதிகளவில் வாக்களித்திருந்தனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி இறுதி நிலவரப்படி 84.36 சதவிகிதம் பதிவாகியிருந்தது. இது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட (81%) 3.36 சதவிகிதம் அதிகம். அதேபோல நாடாளுமன்றத் தேர்தலைவிட (79.36%) 5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களின் தொடர் பிரசாரம், வைட்டமின் ‘ப’ மற்றும் வேட்டி, புடவைகள் விநியோகத்தால் அதிகரித்த இந்த வாக்குகள் தங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று கணக்கு போடுகிறது அ.தி.மு.க தரப்பு. அதேசமயம் தி.மு.க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் குறிப்பாக உதயநிதி பிரசாரத்திற்குக் கூடிய கூட்டம், வாக்குக்கு ரூ.1,000 வீதம் 80% பிசிறில்லாமல் விநியோகித்ததால் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று தி.மு.க தரப்பு நினைக்கிறது.

புகழேந்தி
புகழேந்தி

தற்போது அதிகரித்திருக்கும் 5 சதவிகித வாக்குகளை அ.தி.மு.கவும், தி.மு.கவும் பங்கு போட்டுக்கொள்ளுமா அல்லது ஒரு தரப்புக்குச் சாதகமாக இருக்குமா என்பதை இன்னும் 24 மணி நேரத்தில் கூற இருக்கிறது தேர்தல் ஆணையம்.