Published:Updated:

“இது வேண்டாம்ப்பா, வாடாமல்லி கலர் சால்வையை எடுங்க” - பன்னீரின் அறிவிப்பும் எடப்பாடியின் மரியாதையும்!

அ.தி.மு.க-வில் நடந்துவந்த கோஷ்டிகானம் ஒருவழியாக ஒரு தீர்வுக்கு வந்திருக்கிறது. இது முடிவா, அல்லது மற்றொரு பிரச்னைக்கு தொடக்கமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க-வுக்குள் கனன்று வந்த ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ என்கிற நெருப்பை முதல் ஆளாக ஊதி எரியவிட்டவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆகஸ்ட் 10-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய செல்லூரார், “முதல்வர் யார் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தாங்கள்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக் கொண்டு தேர்தலைச் சந்திக்கவில்லை” என்று கொளுத்திப் போட்டார். அடுத்தநாளே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து ரியாக்‌ஷன் வந்தது.

ராஜேந்திர பாலாஜி - செல்லூர் ராஜூ
ராஜேந்திர பாலாஜி - செல்லூர் ராஜூ

“எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தைச் சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே!” என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றவைக்கவும், ஓ.பன்னீர்செல்வம் முகாம் உஷ்ணமானது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதினத்தன்று காலையில், ‘ஓ.பி.எஸ் தான் நிரந்தர முதல்வர்’ என்று தேனி முழுவதும் போஸ்டர்கள் முளைத்தன. சுதந்திர தினவிழாவில் இந்த விவகாரம் எடப்பாடி - பன்னீருக்கு இடையே நேரடி மோதலாகவும் வெடித்தது. அன்று இருவரின் வீட்டுக்கும் அமைச்சர்கள் சமாதான ஓட்டப்பந்தயம் நடத்தினர். ஆனால், தீர்வு எட்டப்படவில்லை. செப்டம்பர் 28-ம் தேதி நடந்த கட்சி செயற்குழுவிலும் ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ விவகாரம் வெடித்து ப்ரளயத்தை ஏற்படுத்தியது.

``தப்புத் தப்பா பேசினா என்ன வரும் தெரியுமா..!''- செல்லூர் ராஜு

ஒருவழியாக அந்தப் பிரச்னையை பேசித்தீர்த்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியுள்ளனர். அதேபோல, பன்னீர் தரப்பின் ‘டிமாண்ட்’டான, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் அக்டோபர் 6-ம் இரவே, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் சி.வி.சண்முகம், அங்கேயிருந்து 11 பேர் வழிகாட்டுதல் குழு பட்டியலை இறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், காலை ஏழு மணியில் இருந்தே கட்சித் தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் அணிதிரளத் தொடங்கினர். செயற்குழுவின்போது, காவிரி காப்பாளரே... சாமானிய முதல்வரே... போன்ற பதாகைகள், போஸ்டர்கள் எல்லாம் ஏரியாவை கலங்கடித்தன. இம்முறை அதுபோன்ற பதாகைகளை பெரியளவில் பார்க்கமுடியவில்லை. இருதலைவர்களையும் வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
விகடன்

ஒன்பது மணியிலிருந்து அமைச்சர்கள் வரத் தொடங்கினர். 9:40 மணிக்கு பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அடுத்தடுத்து வந்துவிட, தலைமைக் கழகத்தின் முதல் தளத்தில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் முடியும் தருவாயில்தான் அவைத்தலைவர் மதுசூதனன் வந்துசேர்ந்தார். கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முதல் ஆளாகப் பேசினார். “அம்மா வழியில் நடக்கும் இந்தக் கட்சி, அவர் வகுத்துக் கொடுத்த ராணுவக் கட்டுப்பாட்டை மீறாமல், கழகத்தைக் கட்டிக் காக்க வேண்டும். வெளியே ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள். ஆனால், நமக்குள் மனமாச்சரியங்கள் ஏதுமில்லாமல், ஒற்றுமையுடன் இருந்தால் நம்மை எவராலும் அசைக்க முடியாது” என்றார்.

‘தண்ணி’ காட்டும் பன்னீர் - எகிறி அடிக்கும் எடப்பாடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாகப் பேசிய எடப்பாடி, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்து, உறுப்பினர்களின் பெயர்களையும் வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து பன்னீர் பேசினார். “கழகத்தின் 2021 சட்டமன்றத் தேர்தல் முதல்வர் வேட்பாளராக எல்லோருடைய ஒப்புதலுடன் அண்ணன் எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கிறேன்” என்று பன்னீர் பேசிமுடிக்கவும் கரகோஷத்தால் முதல்தளமே அதிர்ந்தது. பன்னீருக்கு பூங்கொத்து அளித்த எடப்பாடி, சால்வையை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் ‘பிங்க்’ நிற சால்வையை நீட்டினர். “இது வேண்டாம்ப்பா. வாடாமல்லி கலர் சால்வையை எடுங்க” என்று கேட்டு வாங்கி, அந்த சால்வையை பன்னீருக்குப் போர்த்தினார்.

அ.தி.மு.க கூட்டம்
அ.தி.மு.க கூட்டம்

வழிகாட்டுதல் குழுவில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வன்னியர் சமூதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம், மீனவர் பிரதிநிதியாக ஜெயக்குமார் என ஆறு பேர் எடப்பாடியின் சிபாரிசில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். கிறிஸ்தவ வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஜே.சி.டி பிரபாகர், கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், பிள்ளைமார் சமூதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா.மோகன், தேவேந்திரகுல வேளாளர் சமூதாயத்தைச் சேர்ந்த மாணிக்கம், யாதவர் பிரதிநிதியாக கோபாலகிருஷ்ணன் என ஐந்து பேர் பன்னீரின் சிபாரிசில் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

`மூன்று குழுக்கள் அமைப்பு...  முதல்வர் அறிவிப்பு!' - நள்ளிரவில் பன்னீர் எடுத்த அஸ்திரம்!

முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டதில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருக்கிறது. அதேபோல, வழிகாட்டுதல் குழுவில் மெஜாரிட்டியாக தன் ஆதரவாளர்கள் ஆறு பேரை இடம்பெற செய்திருப்பதும், கட்சிக்குள் அவர் கை வலுப்பெற்றிருப்பதைக் காட்டுகிறது. அதேவேளையில், பன்னீரின் பக்கமும் லாபம் இல்லாமல் இல்லை. முரண்டு பிடித்தவர்களைச் சரிகட்டி, வழிகாட்டுதல் குழுவை அமைக்க வைத்தது மட்டுமல்லாமல், குழுவில் பல்வேறு சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறார். கவுண்டர் சமூதாயத்தைச் சேர்ந்த இருவர் மட்டும் குழுவில் இடம்பெறுமாறு அவர் பார்த்துக் கொண்டது, கட்சிக்குள் அதிருப்தியிலிருந்த மற்ற சமூகத்தினரிடம் பன்னீரை ஹீரோவாக கொண்டுச் சென்றுவிட்டது. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேர்தலில் சரிவைச் சந்தித்தால், ‘இதுக்குத்தான் அப்பவே முதல்வர் வேட்பாளர் வேண்டாம்னு சொன்னேன்’ என்று பழியை எடப்பாடி மீது தூக்கி எறிந்துவிட்டு, கட்சியை கண்ட்ரோல் எடுக்கும் ஐடியாவும் பன்னீருக்கு இருக்கிறதாம்.

அ.தி.மு.க கூட்டம்
அ.தி.மு.க கூட்டம்

இந்த வழிகாட்டுதல் குழுவின் பணிகள் குறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தியிடம் பேசினோம். “குழுவின் பணிகள் குறித்து இனிமேல்தான் தெரியவரும். இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் என்ன முடிவெடுக்கிறார்களோ, அதன்படி குழு செயல்படும். இன்று அறிவிக்கப்பட்டுள்ள நல்ல முடிவின் மூலமாக, இந்தக் கட்சி பிளவுறும், இருவரும் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று காத்திருந்த சில வல்லூறுகளுக்கு நல்ல சவுக்கடி கிடைத்துள்ளது. இரட்டைத் தலைமை என்றில்லாமல் கூட்டுத்தலைமையாக பன்னீரும், எடப்பாடியும் கட்சியை வழிநடத்துவார்கள்” என்றார்.

‘எம்.ஜி.ஆரிடம் சொன்னேன், துரைமுருகனுக்கு சட்டை வாங்கிக் கொடுத்தார்!’- மதுசூதனன் சொல்லும் ஃப்ளாஷ்பேக்

பன்னீரின் ஆதரவாளரும் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றிருப்பவருமான ஜே.சி.டி பிரபாகரிடம் பேசினோம். “இது நல்ல முடிவு. கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தவர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது இந்த அறிவிப்பு. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க தான் ஆட்சியைப் பிடிக்கும்” என்றார்.

அ.தி.மு.க கூட்டம்
அ.தி.மு.க கூட்டம்

இந்த ஆடுபுலி ஆட்டத்தில் எடப்பாடிக்குத் தற்காலிக லாபம் கிடைத்திருக்கிறது என்றாலும், பன்னீர் நீண்டகால முதலீடு செய்திருக்கிறார். அதற்கான பலன் தேர்தல் சமயத்தில் கிடைக்கும் என நம்புகிறார். தேர்தலில் ஜெயித்துவிட்டால், கட்சியும் ஆட்சியும் தனக்குத்தான் என்று எடப்பாடி கணக்குப் போடுகிறார். யார் நம்பிக்கை பலன் தரப்போகிறது என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு