Published:Updated:

எங்கே சறுக்கியது அமித் ஷாவின் கணக்கு... ஜார்க்கண்டில் பா.ஜ.க தோல்வியடைந்தது ஏன்?

பா.ஜ.க தலைவர்கள் மோடி, ரகுபர் தாஸ், அமித் ஷா
பா.ஜ.க தலைவர்கள் மோடி, ரகுபர் தாஸ், அமித் ஷா

'மோடி வந்து கையசைத்தாலே வாக்குகள் கொட்டிவிடும்’ எனக் கருதியிருந்த பா.ஜ.க-வினருக்கு ஜார்க்கண்ட் மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 80 சதவிகித இடங்களை வென்ற பா.ஜ.க, அடுத்த ஆறே மாதத்தில் வந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. மக்களின் மனநிலை ஏன் மாறியது? பா.ஜ.க மீதுள்ள அதிருப்திக்குக் காரணம் என்ன? ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்ததன் பின்னணியை 6 காரணங்களில் கூறிவிடலாம்.

பழங்குடியினர் கோபம்

பழங்குடியினரின் நீண்டகால போராட்டத்துக்குப் பின்னர் பீகார் மாநிலத்திலிருந்து நவம்பர் 15, 2000-ல் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சிபு சோரன் தனி மாநில போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். இவரின் மகன் ஹேமந்த் சோரன்தான் தற்போது புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார். ஜார்க்கண்ட் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியே இருந்தாலும் பழங்குடியினரின் போராட்டத் தாக்கம் மற்ற சமூகங்களின் எண்ணத்திலும் பிரதிபலிக்கும் என்பது கடந்தகால வரலாறு.

எங்கே சறுக்கியது அமித் ஷாவின் கணக்கு... ஜார்க்கண்டில் பா.ஜ.க  தோல்வியடைந்தது ஏன்?

பழங்குடியினரின் நிலங்களை வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தும் வகையில் ரகுபர் தாஸ் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இதைப் பழங்குடியினர் கடுமையாக எதிர்த்தனர். பதல்காடி போராட்டம் என்கிற பெயரில் ஜார்க்கண்ட் முழுமையும் ஸ்தம்பிக்க வைத்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக இந்தச் சட்டத்திருத்தங்களை ரகுபர் தாஸ் திரும்பப் பெற்றார். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவந்ததால் 2014-ல் பா.ஜ.க அரசுக்கு வாக்களித்த கிறிஸ்துவ பழங்குடியினர், இம்முறை ஆதரவளிக்கவில்லை.

மாநில அரசு மீதான அதிருப்தியால் பழங்குடியின சமூகத்தினரின் வாக்குகள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும், 27 சதவிகித இடஒதுக்கீடு தருவதாக வாக்குறுதி அளித்ததால் காங்கிரஸ் பக்கம் பின்தங்கிய சமூகங்கள் சாய்ந்ததாலும், பா.ஜ.க அரசு தன் வாக்கு வங்கியை இழந்தது. 2014 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 28 பழங்குடியின தொகுதிகளில் 13-ல் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. நேற்று வெளியான 2019 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 22 பழங்குடியின தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இதிலிருந்தே பழங்குடியினர் பா.ஜ.க-வை புறந்தள்ளிவிட்டதை உணர முடிகிறது.

ஹேமந்த சோரன்
ஹேமந்த சோரன்
சுதேஷ் மகாதோவின் கட்சி தனித்துப் போட்டியிட்டால், அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறும், நாம் வெற்றிபெறலாம் எனப் பா.ஜ.க-வினர் திட்டமிட்டனர். ஆனால், ஆட்சிமாற்றம் நிகழப்போவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

ரகுபர் தாஸின் எதேச்சதிகாரம்

2014 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றபோது பழங்குடியினர் அல்லாத ரகுபர் தாஸ் முதல்வராகப் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் அமைச்சரான இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கிருக்கும் பழங்குடியினர் அல்லாத மற்ற சமூகங்களின் வாக்குகளை குறிவைத்து அரியணையில் ஏற்றப்பட்டார். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் அவர் ஆடிய ஆட்டம் பா.ஜ.க-வின் மொத்த கோட்டையையும் சரித்து சுக்கு நூறாக்கிவிட்டது.

தன்னைச் சந்திக்க வந்திருக்கும் பொதுமக்களின் மீது எரிந்து விழுவது, அதிகாரிகளை ஒருமையில் திட்டுவது எனக் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரகுபர் தாஸின் அதிகாரத் திமிர் மக்களை கோபமடையச் செய்தது. ஜார்க்கண்டின் பிரதான வருமானமே சுரங்கம், குவாரி தொழிலில்தான். பொருளாதார தேக்கநிலை காரணமாக புதிதாக எந்த நிறுவனமும் முதலீடு செய்ய முன்வரவில்லை. நிதிப் பற்றாக்குறையால் கடந்த வருடம் மட்டுமே 44 வளர்ச்சித் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. இவற்றையெல்லாம் களைய ரகுபர் தாஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடியை தனது வேட்பாளராகப் பார்த்த ஜார்க்கண்ட் மக்கள், பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக ரகுபர் தாஸை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் புறக்கணிப்பை பா.ஜ.க இப்போது உணர்ந்திருக்கிறது.

ரகுபர் தாஸ்
ரகுபர் தாஸ்

ஊழல் அமைச்சர்கள்

ஊழலை ஒழிப்போம் என்கிற கோஷத்துடன் ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க, கடந்த வருடங்களில் ஊழலின் ஊற்றாக மாறிவிட்டது. ஜார்க்கண்ட் கூட்டுறவு பால்பண்ணையில் தொடங்கி, சுரங்கத் தொழில் வரையில் எல்லா மட்டத்திலும் ஊழல் புகுந்து விளையாடியது. ஊழல் குற்றச்சாட்டுள்ள துல்லு மகாதோவுக்கு பக்மாரா தொகுதியில் சீட் வழங்கியது, பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் தொடர்புடைய ஷஷி பூசன் மேத்தா, 130 கோடி மருந்து ஊழலில் தொடர்புடைய பானு பிரதாப் சாஹி ஆகியோருக்கு சீட் வழங்கியது எனப் பா.ஜ.க-வின் நடவடிக்கைகள் விமர்சனத்தை சந்தித்தன. ‘ரகுபர் தாஸின் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்’ என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைவர் ஹேமந்த் சோரன் முன்னெடுத்த போராடங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

கூட்டணி இல்லாதது

மஹாராஷ்டிரா தேர்தலில் சிவசேனாவால் சூடுபட்டுக்கொண்ட பா.ஜ.க, ஜார்க்கண்ட் தேர்தலை தனித்தே சந்திக்க முடிவெடுத்தது. அதன் நீண்டகால கூட்டணிக் கட்சியான `அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன்’ கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டது. இக்கட்சியின் தலைவர் சுதேஷ் மகாதோ 18 தொகுதிகளுக்காக பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க பல முயற்சிகள் எடுத்தும் பலிக்கவில்லை. சுதேஷ் மகாதோவின் கட்சி தனித்துப் போட்டியிட்டால், அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறும், நாம் வெற்றி பெறலாம் என பா.ஜ.க-வினர் திட்டமிட்டனர். ஆனால், ஆட்சிமாற்றம் நிகழப்போவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்றால் மோடியின் அலை என்பதும் தோற்றால் மாநில கட்சித் தலைமை மீது பழிபோடுவதும் பா.ஜ.க-வில் தொடர்கதையாகிவிட்டது. ஜார்க்கண்ட் தோல்வியை ரகுபர் தாஸ் மீது மட்டும் ஏற்றிவிட்டு டெல்லி தலைவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி 32.6 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க 33.37 சதவிகித வாக்குகளைப் பெற்றும் ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. 8.10 சதவிகித வாக்குகளைப் பெற்ற அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் கட்சி, பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்பை பல தொகுதிகளில் பறித்ததுதான் இதற்குக் காரணம்.

சுதேஷ் மகாதோ, சர்யு ராய்
சுதேஷ் மகாதோ, சர்யு ராய்

உட்கட்சிப் பூசல்

பா.ஜ.க-வுக்குள் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் கை ஓங்கிவிடக் கூடாது என்று ரகுபர் தாஸ் காய் நகர்த்தினார். இந்த ஆடுபுலி ஆட்டத்தில் வெட்டப்பட்ட காய்களில் முன்னாள் அமைச்சர் சர்யு ராய் முக்கியானவர். ரகுபர் தாஸின் பேச்சைக் கேட்டு சர்யு ராய்க்கு சீட் வழங்க பா.ஜ.க மேலிடம் மறுத்தது. கொதிப்படைந்த அவர், ஜம்செட்பூர் கிழக்குத் தொகுதியில் ரகுபர் தாஸை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். ஜே.எம்.எம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் சர்யு ராய்க்கு ஆதரவளித்ததால், தன் சொந்த தொகுதியிலேயே ரகுபர்தாஸ் தோல்வியைத் தழுவ வேண்டியதாகிவிட்டது.

பன்றி வியாபாரப் போட்டி... அடுத்தடுத்த கொலைகள்... நடுங்கும் மலைக்கோயில் மாநகரம்! #க்ரைம்ஸ்டோரி

பலிக்காத அமித் ஷா - மோடி வியூகம்

தேர்தலில் வெற்றி பெற்றால் மோடியின் அலை என்பதும் தோற்றால் மாநில கட்சித் தலைமை மீது பழிபோடுவதும் பா.ஜ.க-வில் தொடர்கதையாகிவிட்டது. ஜார்க்கண்ட் தோல்வியை ரகுபர் தாஸ் மீது மட்டும் ஏற்றிவிட்டு டெல்லி தலைவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கைகளை ரகுபர் தாஸ் அரசு எடுத்தபோதே அரசுக்கு எதிரான மனோநிலை உருவாகிவிட்டது. இதை டெல்லி தலைவர்கள் உணரவே இல்லை.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

சந்தால் பழங்குடியைச் சேர்ந்த கிரிஷ் சந்திர முர்முவுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை பா.ஜ.க அளித்து கௌரவித்தாலும், பா.ஜ.க அரசு மீதான கோபம் மறையவில்லை. ரகுபர் தாஸை முதல்வர் வேட்பாளராக்கியது, பழங்குடியினர் கோபத்தை சம்பாதித்தது, வலுவான கூட்டணி இல்லாதது, தொழில் வளர்ச்சி இல்லாததால் ஏற்பட்ட மக்களின் கோபம் என எதையுமே கருத்தில் கொள்ளாமல் அமித் ஷா - மோடி வகுத்த வியூகம் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

ஜார்க்கண்ட்டில் மோடி பிரசாரம் செய்த ஒன்பது தொகுதிகளில் எட்டில் பா.ஜ.க தோல்வியடைந்துள்ளது. `நம்மை யாராலும் அசைக்க முடியாது. மோடி வந்து கையசைத்தாலே வாக்குகள் கொட்டிவிடும்’ எனக் கருதியிருந்த பா.ஜ.க-வினருக்கு, வளர்ச்சியில்லை என்றால் மோடிக்கும் இதுதான் கதி என ஜார்க்கண்ட் மக்கள் உணரவைத்துள்ளனர். பா.ஜ.க இதை உணர்ந்துகொண்டால் சரி.

`தமிழக பா.ஜ.க-வுக்குக் காமாலைக் கண்கள்!' - பெரியார் குறித்த பதிவால் கொதித்த ராமதாஸ்
அடுத்த கட்டுரைக்கு