Published:Updated:

கடைசி நேர ட்விஸ்ட்... முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக விட்டுக்கொடுத்தது ஏன்?!

பட்னாவிஸுடன் ஷிண்டே சந்திப்பு

பாஜக திடீரென மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

கடைசி நேர ட்விஸ்ட்... முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக விட்டுக்கொடுத்தது ஏன்?!

பாஜக திடீரென மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

Published:Updated:
பட்னாவிஸுடன் ஷிண்டே சந்திப்பு

மகாராஷ்டிராவில் திடீரென கடந்த 20-ம் தேதி சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சிவசேனாவில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத்துக்குச் சென்று அங்கிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்ததால் மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டும்படி உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும் முன்பாக உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு பேட்டியளித்த பட்னாவிஸ், `முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்’ என்று அறிவித்தார். பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஏக்நாத் ஷிண்டேயை பாஜக ஏன் முதல்வராக்கியது என்பது அனைவரது மனதிலும் ஆயிரம் கேள்விகளாக ஓடுகிறது.

ஷிண்டே, பட்நவிஸ்
ஷிண்டே, பட்நவிஸ்

அதோடு தேவேந்திர பட்னாவிஸ், தான் அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன் என்றும் சொன்னார். ஆனால் கட்சித் தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஏன் ஷிண்டேவுக்கு பாஜக பதவியை விட்டுக்கொடுத்தது என்பதற்கான காரணங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை பாஜக-வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து சந்தித்தன. இதில் பாஜக-வைவிட சிவசேனா குறைவான இடங்களில் வெற்றிபெற்றபோதும் தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று சிவசேனா கோரியது. இதனால் அவசர அவசரமாக 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருடன் சேர்ந்துகொண்டு அதிகாலையில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைத்தார். ஆனால், இந்த அரசு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. இதனால் பாஜக அதிகாரத்துக்கு அலைவதாக மக்கள் மத்தியில் ஒருவித நெகட்டிவ் கருத்து நிலவியது. எனவே இப்போது முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேயிடம் கொடுத்திருப்பதால் பாஜக அதிகாரத்துக்கு ஆசைப்படவில்லை என்ற ஒரு பெயர் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்ததாக, முதல்வர் பதவியை இழந்திருக்கும் உத்தவ் தாக்கரே பாஜக தங்களது முதுகில் குத்திவிட்டதாகவும், பால்தாக்கரே மகனை கவிழ்த்துவிட்டதாகவும் தனது ராஜினாமா உரையில் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்திருந்தார். உத்தவ் தாக்கரேயின் உரையால் மக்கள் மத்தியில் தாக்கரே மீது அனுதாபம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அது போன்ற ஓர் அனுதாபம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஷிண்டேயை முதல்வராக்கி சிவசேனா தொண்டரை முதல்வராக்கியிருக்கிறோம் என்று பாஜக சொல்லாமல் சொல்லியிருக்கிறது. அதோடு மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீதும், அவரின் தொண்டர்கள் மீதும் பாஜக இன்னும் நல்ல மரியாதை வைத்திருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ளவும் பாஜக இந்த முடிவை எடுத்திருக்கிறது. அதைத்தான் தேவேந்திர பட்னாவிஸ் தனது உரையில், ``ஏக்நாத் ஷிண்டே முதல்வர் இருக்கையில் அமர்ந்திருப்பதன் மூலம் பால்தாக்கரேயின் கனவு நனவாகியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

பட்னாவிஸுடன் ஷிண்டே சந்திப்பு
பட்னாவிஸுடன் ஷிண்டே சந்திப்பு

அதோடு தற்போது சிவசேனாவில் எழுந்திருக்கும் பிளவால் யார் உண்மையான சிவசேனா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வெறுமனே ஆட்சி அதிகாரத்துக்காக ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனாவிலிருந்து பிரித்து, கொண்டு வந்து ஏக்நாத் ஷிண்டேவுக்கு அமைச்சர் பதவியோ அல்லது துணை முதல்வர் பதவியோ கொடுத்தால் சிவசேனா மீண்டும் புத்துயிர் பெற்றுவிடும். இப்போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதால் அவரால் எளிதாக பால்தாக்கரேயின் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதோடு உண்மையான சிவசேனா தாங்கள்தான் என்று நிரூபிக்கவும் வசதியாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.

இதன் மூலம் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக-வுக்கு வசதியாக இருக்கும். அதோடு 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருந்தார். இதனால் உத்தவ் தாக்கரேயிடமிருந்து சிவசேனாவை அடியோடு பிடுங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் தேவேந்திர பட்னாவிஸ் அமைதியாக இருந்து இந்தக் காரியத்தை முடித்துவிட்டு, தான் பதவிக்கு ஆசைப்படுபவன் இல்லை என்பதைக் காட்டிக்கொள்ள முதல்வர் பதவிகூட வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஏக்நாத் ஷிண்டேவுக்கு அதிகப்படியான ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சிவசேனா பக்கம் செல்லக்கூடும். அதேசமயம் தங்களது தலைவரே முதல்வராக இருக்கும் பட்சத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சிவசேனா பக்கம் செல்ல மாட்டார்கள். இதை கணக்கு போட்டுத்தான் பாஜக முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை, ஆட்சி நம் வசம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம்.