Election bannerElection banner
Published:Updated:

இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவது ஏன்? - மக்கள் நீதி மய்யம் பத்மப்ரியாவின் பேச்சும், சமூக யதார்த்தமும்

பத்மப்ரியா
பத்மப்ரியா

இரண்டு முக்கியமான விஷயங்களைக் கையாளுகிறார் பத்மப்ரியா. ஒன்று, பெண் விடுதலை; மற்றொன்று சாதி. பத்மப்ரியாவைப் பொறுத்தவரை தற்போது பெண்கள் யாரும் அடிமையாக இல்லை. எல்லோரும் ‘ஆணுக்கு பெண்ணிங்கு சரி நிகர் காண்’ என்ற இடத்தை அடைந்துவிட்டார்கள்.

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)

- தாமஸ் ஷெல்பி

பத்மப்ரியா என்கிற மக்கள் நீதி மய்ய மதுரவாயல் தொகுதி வேட்பாளர், இட ஒதுக்கீடு மற்றும் சாதியைப் பற்றிக் கொடுத்திருக்கும் பேட்டி கடும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

அப்படி என்ன பேசினார் பத்மப்ரியா?

ஓர் இணையதளத்துக்கு கேள்வி-பதில் வடிவ பேட்டியைக் கொடுத்திருக்கிறார் பத்மப்ரியா. அதில் ஒரு முக்கியமான கேள்வி வருகிறது. `சமீபத்திய நிகழ்வு ஒன்றில், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மனுக்களில் சாதிக்கான பிரிவு இல்லை என்று கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்கிறார். சாதி வேறுபாட்டை சமூகத்தில் ஒழிப்பதற்கு இது சரியான வழி என நினைக்கிறீர்களா’ என்பது கேள்வி. அதற்கு பத்மப்ரியாவின் பதில்:

‘முன்பு, ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் போலிருந்தனர். தற்போது அது மாறிவிட்டது. எல்லா இடங்களிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராகப் பணிபுரிகிறார்கள். பழைய பாணியைத் திரும்பக் கொண்டு வந்தால், பெண்கள் மீண்டும் ஆண்களுக்கு அடிமை ஆகிவிடுவார்களா? கிடையாது. ஏனெனில், அவர்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்கிவிட்டார்கள்.

`அதேபோல, சில சாதிக்குழுக்களுக்கு சமமான வாய்ப்பு எல்லாவற்றிலும் வழங்கப்படாததால் இட ஒதுக்கீடு முறை வந்தது. இப்போது நம் சமூகத்தில் எல்லோரும் சமமாக இருப்பதைப் பார்க்கிறோம். நன்றாகப் படித்திருக்கிறார்கள். நல்ல வாழ்க்கைக வாழ்கிறார்கள். இனியும் சாதிமுறை வேண்டுமென நினைக்கிறீர்களா? திறமை இருப்பவர்கள் படித்து மேலே வந்துவிடலாம். பல உயர்சாதி மக்களால் திறமை இருந்தும் வேலைக்கு வர முடியவில்லை. பலர் திறமையே இல்லாமல் இட ஒதுக்கீட்டால் மட்டுமே மேலே வந்திருக்கிறார்கள். மக்களிடம் சென்று சாதிவாரி இட ஒதுக்கீடு வேண்டுமா எனக் கேட்டால் பலரும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். இடஒதுக்கீடு ரொம்ப காலத்துக்கு முன் கொண்டுவரப்பட்டது. அது ஏன் இன்னும் மாற்றப்படவில்லை?

‘எங்களின் ஒரே லட்சியம் எல்லோரையும் சமத்துவமாக நடத்துவதுதான்.’

பதிலைப் பார்த்ததும் ‘வாவ்.. இஸ் இன்ட் இட் ட்ரூ...’ எனக் கேட்டால், உடனே சென்று மக்கள் நீதி மய்யத்துக்கான வேட்பாளராகி சமத்துவம் படைத்துவிடுங்கள். கொஞ்சம் யோசிப்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

இரண்டு முக்கியமான விஷயங்களைக் கையாளுகிறார் பத்மப்ரியா. ஒன்று, பெண் விடுதலை. மற்றொன்று சாதி. பத்மப்ரியாவைப் பொறுத்தவரை தற்போது பெண்கள் யாரும் அடிமையாக இல்லை. எல்லோரும் `ஆணுக்கு பெண்ணிங்கு சரி நிகர் காண்’ என்ற இடத்தை அடைந்துவிட்டார்கள். நடுநடுவே நிர்பயா, நந்தினி போன்றோர் உங்களுக்கு ஞாபகம் வந்தாலோ 33% பிரதிநிதித்துவம் நினைவுக்கு வந்தாலோ அதற்குக் காரணம் உங்களின் அறியாமைதான். ஆகவே, பெண் விடுதலை கிடைத்துவிட்ட (!) அதே பாணியில் சாதியும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை. எல்லோரும் சமமாக ஆகிவிட்டதாகச் சொல்கிறார். ரோகித் வெமுலா, அனிதா போன்றோரும் பத்மப்ரியாவை பொறுத்தவரை சமமாகத்தான் ஆகிவிட்டார்கள்போல.

பத்மப்ரியா
பத்மப்ரியா

கேள்வி கேட்டவர்களுக்கு பத்மப்ரியாவின் `புரிதல்’ பற்றி தெரிந்ததும், சாதி தொடர்பாகவே அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்கின்றனர். ‘கமல் போட்டியிடும் பகுதியிலேயே ‘இருகுவளை முறை’ பின்பற்றப்படுவதாகத் தரவுகள் இருக்கும்போது சாதி இல்லை என எப்படிச் சொல்வீர்கள்?’

பத்மப்ரியாவின் அடுத்த பதில்,

‘சாதி இல்லையென நான் சொல்லவில்லை. மக்களுக்குள் சாதி இன்னும் இருக்கிறதென்றே சொல்கிறேன். அதை மாற்ற வேண்டுமென்றால், நீங்கள் சாதியைப் பற்றிய வரிசையைப் படிவங்களிலிருந்து நீக்க வேண்டும். மக்களுக்குச் சாதியைப் பற்றி நினைவூட்டுவதே, சாதியை அவர்கள் மனதில் பதியவைக்கிறது. ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடைக்காது. ஆனால் 5-10 வருடங்களில் சாதி என ஒன்றே இல்லாமல் போய்விடும். எல்லோரும் சமமாக வாழலாம்.’

சாதி என்கிற தலைப்பு கல்வி நிலைய படிவங்களில் இடம்பெற்றதால்தான் நந்தனார் எரிக்கப்பட்டிருக்கிறார். அனிதா தற்கொலை செய்திருக்கிறார். காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். சாணிப்பால் குடிக்கவைத்திருக்கிறார்கள். அந்த வரிசையை மட்டும் எடுத்துவிட்டால், குடிசைகளை இனி கொளுத்த மாட்டார்கள். இளவரசன்களின் காதல்களுக்குப் பிரச்னை வராது. ஊர் குளத்தில் ‘லா லா லா...’ என அனைவரும் சேர்ந்து நீர் குடிக்கலாம்.

அடுத்ததாக ‘5-10 வருடங்களில் சாதிய முறையை ஒழித்துவிட முடியுமா... ஒடுக்கப்பட்டோரை அடையாளம் காணாமல் தமிழகத்தில் எப்படி அது சாத்தியம்?’ என ஒரு கேள்வி.

பத்மப்ரியா மீண்டும் பேசுகிறார்,

`சரியான தலைமை இருந்தால் சாத்தியம்தான். தொகுதிகள் வழங்கும்போது நாங்கள் வேட்பாளரின் சாதியைப் பார்க்கவில்லை. ஆகவே திறமை இருக்கும் மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 90 மார்க் எடுக்கும் ஒரு மாணவன் உயர்சாதி என்பதாலேயே நீங்கள் இடம் கொடுக்கவில்லை எனில், அது ஏற்றத்தாழ்வு இல்லையா?’

இன்னும் முடியவில்லை. அடுத்த கேள்வியாக, `ஆனால் அந்த மாணவன் மூன்று வேளை உணவுகூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட சாதி மாணவனுடன் போட்டி போடும்போது என்ன செய்வது?’ என கேட்கப்படுகிறது.

`அதற்குத்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தொங்கிக்கொண்டிருக்கும் மக்களைத் தூக்கி விடவென ஒரு திட்டத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்ததும் இடஒதுக்கீடு வழங்குவதாகச் சொல்கிறார்கள். எங்களுடைய நோக்கம் அந்த மாணவனை மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்தையும் தூக்கிவிடுவதுதான்’ என பதிலுரைக்கிறார்.

இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது. அதை இறுதியில் சொல்கிறேன்.

பத்மப்ரியா மட்டுமென இல்லாமல் இன்றைய தலைமுறையின் பலருக்கு இட ஒதுக்கீடு பற்றி இதுதான் கருத்தாக இருக்கிறது. அதாவது `திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். திறமையற்றவர்களே இட ஒதுக்கீட்டில் வருகிறார்கள்’ என்பதாக. பல முறை விளக்கி ‘போர’டித்துவிட்ட பதில் என்றாலும் இன்னொரு முறை.

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். உயர்வகுப்பைச் சேர்ந்தவன். அவனுடைய அப்பா கே.கே.நகரில் ஓர் உணவகம் நடத்திக்கொண்டிருந்தார். அவன் நல்ல மதிப்பெண் எடுத்தான். விரும்பிய கல்வி கிடைக்கவில்லை. புலம்பியிருக்கிறான். விளக்கியிருக்கிறேன். அவனவன் வயிற்றுவலி. எனவே, புரிந்துகொள்ளவில்லை. வருடங்கள் ஓடிவிட்டன. இப்போது அவன் வெளிநாட்டில் படித்து நல்ல வேலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். நான் இன்னும் கே.கே.நகரைத் தாண்டவில்லை. இது எப்படி நேர்கிறது?

நல்ல மதிப்பெண் எடுத்து இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைக்காத உயர்சாதியினரைக் கைப்பிடித்துத் தூக்கிவிடவென அவர்களின் முந்தைய தலைமுறையோ சொந்தக்காரர்களோ ஏற்கெனவே சமூகத்தின் உயரமான இடத்தில் பல தலைமுறைகளாக இருந்திருப்பார்கள். அதைத்தான் சமூக மூலதனம் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால், நமக்கோ ஒரு தலைமுறைக்கு முன்னால் யோசித்தால்கூட சாணிப்பால் ஊற்றப்பட்ட முன்னோர்கள்தான் இருந்திருப்பார்கள்.

இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பத்மப்ரியா சொன்னது சரியென்று தோன்றுவோர், ஒரு தலைமுறை அல்லது அதிகபட்சமாக இரு தலைமுறைகளுக்கு முன் உங்கள் குடும்பம், பரம்பரை என்னவாக இருந்தது என யோசித்துப் பாருங்கள் அல்லது வீட்டில் தாத்தா, பாட்டி என ஒதுக்கிவைத்திருந்தால் போய் விசாரித்துவிட்டுக்கூட வாருங்கள்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னும் சொந்த வீடு, பெரிய நிலம், வாகனமெல்லாம் வைத்திருந்தால் நீங்கள் உயர் சாதிக்காரராக இருக்க வேண்டும். அப்படியெதுவும் உங்கள் பரம்பரையில் இல்லாமலிருந்தால் நீங்கள் இடைச்சாதி அல்லது பட்டியல் சாதியாக இருக்க வேண்டும்.

பத்மப்ரியா
பத்மப்ரியா

உயர்சாதி கொண்டிருக்கும் இத்தகைய வாய்ப்புகளுக்குப் பெயர்தான் சமூக மூலதனம். இடைச்சாதி மற்றும் பட்டியல் சாதியாக இருந்தால், நீங்கள் இப்போது ஒரு கணினியில் இக்கட்டுரையைப் படிக்குமளவுக்கு முந்தைய தலைமுறைகளைத் தாண்டி வளர்ந்திருக்க இட ஒதுக்கீடு மட்டுமே காரணம்.

சரி... இப்போது கணினியும் வந்துவிட்டது. வசதியும் வந்துவிட்டது. பிறகு ஏன் இட ஒதுக்கீடு?

சுலபம். உங்கள் தாத்தா பாட்டிக்குக் கல்வி மறுக்கப்பட்டது வசதி இல்லாததால் அல்ல. அவர்களின் சாதியினால். உங்களுக்கு இப்போது வசதி வந்திருக்கலாம். ஆனால் சாதி அப்படியேதான் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் உங்களின் சாதியைக் காரணமாக்கி உங்களின் கல்வி மறுக்கப்படலாம்!.

சாதியால் ஒடுக்கப்பட்ட உங்களை முன்னுக்குக் கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடு என உங்களின் சாதியைப் படிவங்களில் கேட்கிறார்கள். பல தலைமுறைகள் படித்துவந்து மாணவனோடு இரண்டாம் தலைமுறையாகப் படித்துவந்திருக்கும் நீங்கள் போட்டி போடுவதற்கு சில சலுகைகளை அரசு அளிக்கிறது. ஏனெனில், பல தலைமுறைகள் படித்துவந்தவர் நுழைவுத் தேர்வு எழுதவில்லை என்றாலும் வெளிநாட்டுக்குச் சென்று படிக்கவும் வாழவும் உதவும் தொடர்புகள் இருக்கின்றன. நீங்கள் நுழைவுத் தேர்வு எழுத முடியவில்லையெனில் வேறெங்கும் கல்வி கற்க முடியாது. வசதியும் கிடையாது.

இட ஒதுக்கீடுக்கான விளக்கம் சுற்றிச் சுற்றி எழுதப்பட்டிருப்பதைப்போல் குழப்பமாகத் தெரிந்தாலும் அடிப்படையாக அது விக்ஸ்தான். விக்ஸ் என்பது நோய்க்கு நிவாரணம் அளிக்கும். நம் சமூகம் கொண்டிருக்கும் சாதி என்ற சமூக நோய்க்கான நிவாரணம் இட ஒதுக்கீடு. இறுதியில் இட ஒதுக்கீட்டுக்குக் கேட்கப்படும் சாதியால்தான் சாதி இருத்தி வைக்கப்படுகிறது எனப் பேசுபவர்ள் ஆபத்தானவர்கள்.

கமிங் பேக் டு பத்மப்ரியா’ஸ் லாஸ்ட் ஆன்சர்,

`பிரதமரைப் பற்றிய உங்களின் கருத்து மாறியிருக்கிறதா’ என்பது கேள்வி. அதற்கு பத்மப்ரியா ‘கமல் சாரை எனக்குப் பிடிக்கும். அவர் தவறு செய்தாலும் எனக்குப் பிடிக்காமல் போகாது. ஆனால் தவற்றை நான் தட்டிக்கேட்பேன். அதேபோல்தான், மோடி ஜியை எனக்குப் பிடிக்கும். அவரும் தவறு செய்தால் தட்டிக்கேட்பேன்’!!!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு