Published:Updated:

பன்னீருக்கு அழைப்பு... வித்யாசாகர் ரீவைண்ட்... ஆளுநர் விருந்தை எடப்பாடி புறக்கணித்த பின்னணி!

எடப்பாடி பழனிசாமி

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி. உடல் சுகவீனம் ஒரு காரணமாக எடப்பாடி தரப்பில் முன்வைக்கப்பட்டாலும், 'உண்மை அதுவல்ல' என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

பன்னீருக்கு அழைப்பு... வித்யாசாகர் ரீவைண்ட்... ஆளுநர் விருந்தை எடப்பாடி புறக்கணித்த பின்னணி!

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி. உடல் சுகவீனம் ஒரு காரணமாக எடப்பாடி தரப்பில் முன்வைக்கப்பட்டாலும், 'உண்மை அதுவல்ல' என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொரு வருடமும், சுதந்திர தினத்தன்று ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள், ஆளுநரின் விருந்தினர்கள் சுமார் 400 பேர் இந்த விருந்தில் கலந்துகொள்வார்கள். இந்த வருடம், ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்துக்கு முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன், அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி விருந்துக்குச் செல்லவில்லை. 'உடல்நிலை சரியில்லாததால் அவர் பங்கேற்கவில்லை. விருந்தில் கலந்துகொள்ள வேண்டுமென்பது கட்டாயமல்ல' என்று விளக்கமளிக்கிறது எடப்பாடி தரப்பு. ஆனால், 'பன்னீருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும், சில அரசியல் கணக்குகளுமே விருந்தை எடப்பாடி புறக்கணித்ததற்கு முக்கியக் காரணம்' என்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர் தலைவர்கள்.

பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம், வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி

இது குறித்து முன்னாள் அமைச்சர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், "அ.தி.மு.க-வின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த பன்னீர்செல்வத்தை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அந்தப் பொறுப்புக்கு பரிந்துரைத்திருக்கிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. இதற்கான கடிதமும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அதன்மீது சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு, 'எதிர்க்கட்சித் துணைத் தலைவர்' அடையாளத்துடன் பன்னீருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆளுநர் மாளிகையிலிருந்துதான் இந்த அழைப்பிதழ் சென்றது. இதை எடப்பாடி சற்றும் ரசிக்கவில்லை. தன்னுடைய முடிவை ஆளும் தரப்பும், ஆளுநர் மாளிகையும் உதாசீனப்படுத்தும்போது, தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதுதான் சரி என அவர் முடிவெடுத்துவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தவிர, முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் செய்த ஒரு காரியத்தைப் போல, ரவியும் செய்துவிட்டால் தன்னுடைய இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆகிவிடும் என்கிற அச்சமும் எடப்பாடியை உலுக்கிவிட்டது. ஆகஸ்ட் 2017-ல், பிரிந்திருந்த இரண்டு அ.தி.மு.க அணிகளும் ஒன்றிணைந்தன. பன்னீருக்கு துணை முதல்வர் பதவியும், மாஃபா பாண்டியராஜனுக்கு தொல்லியல், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பொறுப்பும் ஒதுக்கப்பட்டன. ராஜ்பவனில் பதவியேற்பு வைபவங்கள் முடிந்த பிறகு, பன்னீர் - எடப்பாடி இருவரின் கரங்களையும் பிடித்து இணைத்துவைத்தார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். திடீரென ஆளுநர் இப்படி நடந்துகொண்டதை எடப்பாடியும் எதிர்பார்க்கவில்லை. அது போன்ற ஒரு சூழல், ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தில் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் எடப்பாடி. தன் இருக்கைக்கு இருபுறமும் பன்னீரையும் எடப்பாடியையும் அமரவைத்து, ஆளுநர் ரவி போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலே, இதுவரை எடப்பாடி முன்னெடுத்த 'ஒற்றைத் தலைமை' விஷயம் முடிந்துபோய்விடும். இரு அ.தி.மு.க தலைவர்களுக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுவிட்டதாக மீடியாக்கள் பேச ஆரம்பித்துவிடும். அது போன்ற ஒரு சூழலைத் தவிர்ப்பதற்காகவும்தான், தேநீர் விருந்துக்கு எடப்பாடி வரவில்லை" என்றனர் விரிவாக.

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஓ.பன்னீர்செல்வம்
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஓ.பன்னீர்செல்வம்

தேநீர் விருந்துக்கு முன்னதாக ஆளுநரைத் தனியே சந்தித்த பன்னீர்செல்வம், சுதந்திர தின வாழ்த்துகளைப் பரிமாறியிருக்கிறார். அப்போது பன்னீரின் உடல்நிலைக் குறித்தும் ஆளுநர் விசாரித்திருக்கிறார். விருந்து தொடங்கும் முன்பாக, முதல்வர் ஸ்டாலினும் பன்னீரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். தனக்கு அருகில் அமர்ந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடம், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து மனம்விட்டுச் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார் பன்னீர். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரான வாசன், டெல்லியின் பல்ஸ் அறிந்தவர் என்பதால், இருவருக்கும் இடையேயான உரையாடல் டெல்லியின் கூட்டல் கழித்தல் கணக்குகள் பற்றியே இருந்திருக்கிறது.

தேநீர் விருந்தைப் புறக்கணித்து எதிர்ப்பை வெளிப்படையாகவே காட்டிவிட்டார் எடப்பாடி. ஆனால், ஆளுநர் மாளிகையில் இந்தப் புறக்கணிப்பை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்.