Published:Updated:

நாம் தமிழர் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையத்தால் ரத்துசெய்ய முடியாது... ஏன்?

மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் 62, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7, பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் 2,301 என மூன்று வகைகளிலும் சேர்த்து, மொத்தம் 2,370 கட்சிகள் உள்ளன.

சீமான்
சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சீமான் பேசிய விஷயம் காங்கிரஸ் கட்சியினரை உச்சக்கட்ட கோபத்தில் தள்ளியிருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, 'நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்' என அறிக்கைவிட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி, அங்கீகாரம் பெற்ற கட்சியே அல்ல; பதிவுசெய்யப்பட்ட கட்சி மட்டுமே. ஆக, அடிப்படையில் கோரிக்கையே தவறு. நாம் தமிழர் கட்சியின் பதிவை ரத்துசெய்ய வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். சரி, அப்படி கோரிக்கை வைத்திருந்தாலும், தேர்தல் ஆணையத்தால் நாம் தமிழர் கட்சியின் பதிவை ரத்துசெய்ய முடியுமா என்றால், முடியாது. ஏன்..? விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2qWz0Zw

இந்தியக் கட்சிகள் 2,370. முதலில், அரசியல் கட்சிகள் எப்படிப் பதிவுசெய்யப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

இந்திய அரசியல் சாசனப் பிரிவு 324-ன்படி, தேர்தல் ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை (1951) அடிப்படையாகக்கொண்டு தேர்தலை நடத்துகிறது; அரசியல் கட்சிகளைப் பதிவு செய்கிறது. அந்தச் சட்டத்தின் 29(A) பிரிவின்கீழ் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய விரிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 100 உறுப்பினர்களின் வாக்காளர் பட்டியல் விவரங்கள், கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், உட்கட்சித் தேர்தல் விதிமுறைகள் மற்றும் நிர்வாகிகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். யாராவது, இந்தக் கட்சிப் பதிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார்களா என்று, தேசிய, மாநில நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

சீமான்
சீமான்

இவை தவிர, ஆணையம் கேட்கும் நுணுக்கமான கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கமளித்து கட்சியைப் பதிவுசெய்வதற்குள் பல மாதங்கள் கடந்துவிடும். இந்தக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின்போதும் பெறும் வாக்குகள், வெற்றிபெறும் இடங்கள் போன்றவற்றின் அடிப்படையில் மாநிலக் கட்சியாகவோ தேசியக் கட்சியாகவோ அங்கீகரிக்கப்படும். தேர்தலில் போட்டியிடாத அல்லது போதுமான வாக்குகள், இடங்கள் பெறாத கட்சிகளை மாநிலக் கட்சிகளாகவோ, தேசியக் கட்சிகளாகவோ தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காது. அவை பதிவுசெய்யப்பட்ட கட்சிகளாக மட்டுமே வரையறுக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே தங்கள் கட்சிக்கென நிலையான சின்னத்தைப் பெற முடியும். அங்கீகாரம் இல்லாத, பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் பொதுவான சின்னத்தைப் பெற ஒவ்வொரு தேர்தலின்போதும் போராட வேண்டியிருக்கும். மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் 62, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7, பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் 2,301 என மூன்று வகைகளிலும் சேர்த்து, மொத்தம் 2,370 கட்சிகள் உள்ளன.

நாம் தமிழர் கட்சியின் பதிவை ரத்துசெய்ய முடியாது எனச் சொல்வது ஏன்?

அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, அங்கீகரிக்கப்படாத அதாவது, பதிவு மட்டுமே செய்யப்பட்டிருக்கும் கட்சிகளின் பதிவை ரத்துசெய்யும் அதிகாரம் இல்லை. இந்த அதிகாரம் தனக்குத் தரப்பட வேண்டும் என்றுதான் கடந்த 20 வருடங்களுக்கும்மேலாக தேர்தல் ஆணையம் கேட்டுவருகிறது. இந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே ஆணையத்தின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இப்படிப்பட்ட அதிகாரம் இல்லாததால் தான், பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் 2,301 கட்சிகள் இருக்கின்றன. இல்லையெனில், அவை கணிசமாகக் குறைந்திருக்கும்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இருந்தபோது (2004), மத்திய அரசுக்கு பரிந்துரைப் பட்டியல் ஒன்றைக் கொடுத்தார். அதில் 22 தேர்தல் சீர்திருத்தங்களைச் சுட்டிக்காட்டி, சட்டத்திருத்தங்கள் கேட்டார். அதில் முக்கியமான பரிந்துரை, 'கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்குத் தர வேண்டும்' என்பதே. இந்தப் பரிந்துரைக்கு 15 வயது ஆகிவிட்டது. அதேபோல், 'சிறைத்தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டவர்கள், கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒரு தகவலைத் தெரிவித்தது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

சீமான்
சீமான்

'தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், ஒருமுறைகூட தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு, வருமானவரி விலக்கு உண்டு. இந்தச் சலுகையை தேர்தலில் போட்டியிடாத இந்தக் கட்சிகள் முறைகேடாகப் பயன்படுத்தி பல கோடிகளை நன்கொடையாகப் பெறுகின்றன. குறுக்குவழியில் நன்கொடைகள் பெறுவதற்காக அரசியல் கட்சியாகப் பதிவு செய்துகொள்ளும் போக்கு ஆபத்தானது. இதைத் தடுக்கும்பொருட்டு, பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத இந்தக் கட்சிகளின் பதிவை ரத்துசெய்ய விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு அந்த அதிகாரம் தரப்படவில்லை' என்று உச்ச நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையம் முறையிட்டது.

இதுகுறித்து மத்திய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆக, கட்சிப் பதிவைக் கண்ணுக்குத் தெரிந்தே தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ள விவகாரத்தில்கூட தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைதான் உள்ளது. சரி... அரசியல் கட்சிகளின் பதிவைத்தான் தேர்தல் ஆணையத்தால் ரத்துசெய்ய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மீதாவது தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா? இந்தக் கேள்விக்கு, சற்றே ஆறுதலான பதில் கிடைக்கிறது. - இதுகுறித்து ஜூனியர் விகடன் கட்டுரையில் முழுமையாக விவரிக்கிறார், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் > இந்தியத் தேர்தல் ஆணையம்... கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்! https://www.vikatan.com/news/politics/controversies-surrounding-the-tamil-nadu-by-elections

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |