Published:Updated:

திசை மாறிய சிந்தியா... திரும்பிப் பார்த்த இந்தியா... பாட்டி பாணியில் கதறவிடும் பேரன்!

விஜயராஜே சிந்தியா, மாதவராவ், ஜோதிராதித்யா
விஜயராஜே சிந்தியா, மாதவராவ், ஜோதிராதித்யா

மாதவராவ் சிந்தியா போன்றவர்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் கட்சி தவறியது. தற்போது, அவரின் மகனையும் பயன்படுத்த தவறியுள்ளதோடு இளம் தலைவரையும் இழந்துள்ளது.

`காங்கிரஸ் கட்சி ஏன் கரைகிறது?’, `பாரதிய ஜனதா கட்சி எப்படி பலமானது?’ - இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் சொல்ல வேண்டுமென்றால், `அதிகாரக் குவிப்பு’ என்று அடித்துச் சொல்லலாம். காங்கிரஸ் கட்சியில் ஒருவர் எத்தனை பதவி வேண்டுமானாலும் வகிக்கலாம். ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது பா.ஜ.க. அதிகாரம் ஓரிடத்தில் குவிவதால்தான் தவறுகள் அதிகமாகின்றன. அதன் காரணமாகத்தான் மத்தியப் பிரதேசத்தில் ஓர் இளம் தலைவனை இழந்திருக்கிறது காங்கிரஸ்.

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...

1967-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, குவாலியர் ராஜவம்சத்தைச் சேர்ந்த விஜயராஜே சிந்தியா மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தார். விஜயராஜேவுக்கு ஆதரவாக 36 எம்.எல்.ஏ-க்களும் கட்சியிலிருந்து வெளியேறிவிட மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த டி.பி.மிஸ்ராவின் அரசு கவிழ்ந்தது. அப்போது ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த விஜயராஜே சிந்தியா வேறு யாருமல்ல. இப்போது மத்தியப் பிரதேச ஆட்சியைக் கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருக்கும் ஜோதிராதித்யாவின் பாட்டிதான். மத்தியப் பிரதேசத்தில் தனது பாட்டி நிகழ்த்திய வரலாற்றை இப்போது பேரன் திரும்பக் கொண்டுவந்துள்ளார். கடும் சவாலுக்கு இடையில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை ஆட்சிப்பீடத்தில் அமர்த்திய ஜோதிராதித்யா 22 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியை உடைத்ததோடு ஆட்சிக்கும் ஆப்பு வைத்துள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி அதை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வசுந்தராஜேவுடன் ஜோதிராதித்யா
வசுந்தராஜேவுடன் ஜோதிராதித்யா

மத்தியப் பிரதேசத்தில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், குவாலியர் அரச பரம்பரைக்கென்று தனி லாபி உண்டு. குவாலியர் அரசர் ஜிவோஜிராவ் சிந்தியா பாரதிய ஜனதா கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். இந்த ஜிவோஜிராவ் சிந்தியாவின் மனைவிதான் விஜயராஜே சிந்தியா. குவாலியர் அரச பரம்பரையின் ராஜ மாதா என்று இவரை சொல்வார்கள். இந்தத் தம்பதிக்கு மாதவராவ் சிந்தியா என்ற மகனும் உஷாராஜே, வசுந்தராஜே, யாசுதோராஜே ஆகிய மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மாதவராவ் சிந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆளுமையாக அறியப்பட்டவர். ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமானவர். மாதவராவ் சிந்தியாவின் சகோதரிகளும் ஜோதிராதித்யாவின் அத்தைகளுமான வசுந்தராஜேவும் யசோதாராஜேவும் பா.ஜ.க-வின் முக்கிய முகங்கள். ராஜஸ்தான் முதல்வராக வசுந்தராஜேவும், யசோதாராஜே மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனர். ஆனால், ஜோதிராதித்யா தன் தந்தை வழியையே பின்பற்றினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல ஆண்டுக்காலமாகக் கட்சிக்காக உழைத்தார்.

தன் தந்தையை உதாசீனப்படுத்தியதைப்போல தன்னையும் காங்கிரஸ் கட்சி உதாசீனப்படுத்துகிறது என்பதை உணர்ந்து பா.ஜ.க-வில் ஐக்கியமாகியுள்ளார். சரி... ஜோதிராதித்யா காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற என்ன காரணம்? `தன் தந்தையைக் காங்கிரஸ் கட்சி நடத்திய விதத்துக்கு முதலில் ஜோதிராதித்யா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கவே கூடாது’ என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

கொரோனா டெஸ்ட், விழப்போன லைட்... ரஜினி பிரஸ்மீட் சுவாரஸ்யங்கள்! #Video

1980-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மாதவராவ் சிந்தியா விரைவிலேயே ராஜிவ் காந்தியின் நம்பிக்கையைப் பெற்றதோடு, ரயில்வே, மனிதவளத்துறை போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். `மாதவராவ் சிந்தியாவிடம் ஆலோசனை பெறாமல் ராஜீவ்காந்தி எந்த விஷயத்தையும் செய்வதில்லை’ என்கிற அளவுக்குக் கட்சிக்குள் இருவரின் நட்பும் பிரசித்தம்.

ராகுல், கமல்நாத் , ஜோதிராதித்யா
ராகுல், கமல்நாத் , ஜோதிராதித்யா

ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு, மாதவராவ் சிந்தியாவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியானது. நரசிம்மராவ் பிரதமரானதும் மாதவராவ் டம்மி ஆக்கப்பட்டார். பின்னர், 2001-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் மாதவராவ் சிந்தியா இறந்து போனார். தந்தை இறந்த பிறகு, அரசியலுக்குள் நுழைந்த ஜோதிராதித்யாவும் பதவிகளில் இல்லாமல் டம்மியாகவே வைக்கப்பட்டிருந்தார்.

2018-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. வெற்றி பெற்றதும் ராகுல் காந்தி ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். புகைப்படத்தில் ராகுல் காந்தியின் வலதுபுறத்தில் ஜோதிராதித்யாவும் இடதுபுறத்தில் கமல்நாத்துடன் இருந்தனர். `இரண்டு வாரியர்கள் தங்கள் நேரத்துக்காகப் பொறுமையுடன் காத்திருந்தனர்’ என்று படத்துக்கு விளக்கமும் சொல்லியிருந்தார் ராகுல். இருவரில் தனக்கு வயது குறைவு என்பதால், முதல்வர் பதவி கட்டாயம் கிடைக்கும் என்றும் ஜோதிராதித்யா கருதினார்.

ராகுல் காந்தியுடன் ஜோதிராதித்யா
ராகுல் காந்தியுடன் ஜோதிராதித்யா

ஆனால், கமல்நாத் முதல்வராக்கப்பட ஜோதிராதித்யாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகிப்போனது. மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியும் கமல்நாத் வசமே இருந்தது. அதையாவது தனக்கு தருமாறு ஜோதிராதித்யா கேட்டார். காங்கிரஸ் கட்சியோ, கமல்நாத்திடம் இருந்து மாநிலத் தலைவர் பதவியையும் பறிக்கத் தயங்கியது. இதுதான் ஜோதிராதித்யாவின் விலகல் முடிவுக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சிந்தியாவின் முடிவை இந்தியாவே திரும்பிப்பார்க்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பலரும் காங்கிரஸை வசைபாடுகிறார்கள். தலைமையேற்க தலைவர்கள் இல்லாத கட்சி, இளம் தலைவர்களை இழப்பது நல்லதா?

அடுத்த கட்டுரைக்கு