Published:Updated:

``கமல்ஹாசன் கேட்ட கேள்விகள்!” - வேலூர் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் விலகியது ஏன்?

பிரேம் குமார் எஸ்.கே.

வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் நாம் பேசும்போது, விரைவில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்றே கருத்து தெரிவித்தனர். நடுவில் இந்தத் திடீர் மாற்றத்துக்கான காரணம் தெரிந்துகொள்ள முயன்றோம்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

வேலூர் மக்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவுக்குவந்தது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மீண்டும் அதே வேட்பாளர்களைக் களத்தில் இறக்குகின்றனர். நாம் தமிழர் கட்சியும் களத்தில் குதிக்க, அ.ம.மு.க விலகிக்கொண்டது.

சண்முகம் - கதிர் ஆனந்த்
சண்முகம் - கதிர் ஆனந்த்

விரைவில் வேட்பாளர் அறிவிப்பு வரும் என்று சொல்லிவந்த மக்கள் நீதி மய்யம், இறுதி நேரத்தில் தேர்தல் போட்டியில் இருந்து விலகிவிட்டது. இதனால், வேலூரில் அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடாதது குறித்து ம.நீ.ம கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தல்களின்போது, வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பணப்பட்டுவாடா, சட்டவிரோதமாகவும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாகப் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.

பின்னர், இந்திய ஜனாதிபதி அவர்கள் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலே குறிப்பிடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்னரே, மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல்களின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட அறிக்கை
மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட அறிக்கை

இச்சூழலில், மக்களின் நம்பிக்கையைக் காப்பது என்பது மிக முக்கியம். எனவே, அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறது. எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும், மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சியின் செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகளிடம் நாம் பேசும்போது, விரைவில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்றே கருத்து தெரிவித்தனர். நடுவில் இந்தத் திடீர் மாற்றத்துக்கான காரணம் தெரிந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளரான முரளி அப்பாஸை தொடர்புகொண்டோம்.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

"எங்கள் கட்சியின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போன்று, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் அதே வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். வெற்றிக்காக மீண்டும் பணம் பெரிய அளவில் விளையாடும்.

`இனி எங்கள் வாக்குகளை தி.மு.க பிரிக்க முடியாது!' - வேலூர் தேர்தலில் ம.நீ.ம திட்டம் என்ன?

இந்த விளையாட்டை விளையாடுவதற்காக மக்கள் நீதி மய்யம் இங்கு வரவில்லை. மக்களின் நம்பிக்கையைக் காப்பது என்பது மிக முக்கியம். தேர்தல் ஆணையத்தின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இந்தத் தேர்தலை நாங்கள் புறக்கணித்துள்ளோம்” என்றார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

முன்னதாக, வேட்பாளர் தேர்வுப் பணிகள் முழு வீச்சுல், கவனமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வந்ததே என்ற கேள்விக்கு, "உண்மைதான். வேலூர் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கான பணிகளில் நிர்வாகிகள் ஈடுபடத் தொடங்கினர். ஏற்கெனவே போட்டியிட்ட சுரேஷ், மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

வேலூர் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், தலைவரும் கலந்துகொண்டார். அப்போது அவர், `இந்தத் தேர்தலில் நாம் எதற்காகப் போட்டியிட வேண்டும்? தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? அது நிறைவேறியதா? ஜனநாயகத் தேர்தல்களில் தவறாமல் போட்டியிட வேண்டும் என்று சொல்பவன் நான். ஆனால், இந்தத் தேர்தல் அதற்கான தேர்தலாக இல்லை’ என அவரது கருத்தை முன்வைத்தார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதன் பின்னரும் நாங்கள் பலமுறை கூடி விவாதித்தோம். இறுதியில், குறைந்தபட்சம் நமது கண்டனத்தைப் பதிவு செய்யவாவது நாம் போட்டியிடக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது. நாங்கள் தேர்தலுக்குப் பயந்து ஒதுங்கவில்லை. மக்களவைத் தேர்தலிலே போட்டியிட்டுவிட்டோம். இது பெரிய விஷயம் இல்லை. ஆனால், மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதற்கான சூழலும் காரணமும் சொல்லப்படவில்லை” என்றார்.

கட்சியின் இந்த முடிவு தொடர்பாகக் கடந்த தேர்தலில் இந்தக் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷிடம் கேட்டோம், "கட்சியின் முடிவில் சரியான காரணம் இருக்கிறது. பணம் கைப்பற்றப்படுகிறது. தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது... மீண்டும் அதே வேட்பாளர்கள். கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக என்ன விசாரணை நடந்தது?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதனால், தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்க கட்சி எடுத்த இந்த முடிவை நானும் ஏற்கிறேன். மேலும், இந்தத் தேர்தல் முடிவுகள், மத்தியிலும் மாநிலத்திலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அதனால், எங்கள் முழுக் கவனமும் சட்டசபை தேர்தல்மீதுதான் இருக்கிறது” என்றார்.