Published:Updated:

ஸ்டாலினுக்கு முக்கியத்துவம்; மோடியின் ஆடுபுலி ஆட்டம்!

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தாலும் சரி, அமைக்காவிட்டாலும் சரி, தனக்கெதிராக ஒரு வலுவான தலைமை உருவாகிவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார் மோடி. பிராந்தியக் கட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்து, ஈகோவை மறந்து கரம் கோத்தால் மோடியின் பாடு திண்டாட்டம்தான்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதன்முறையாக டெல்லி சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலினைக் குதூகலத்துடன் வரவேற்றிருக்கிறார் பிரதமர் மோடி. தனக்கெதிராக ‘Go Back Modi' என உலக அளவில் ட்விட்டரில் டிரெண்ட் செய்த ஒரு கட்சியின் தலைவரிடம், மீத்தேனில் ஆரம்பித்து நீட் வரை தன்னுடைய திட்டங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டைபோடும் ஒரு முதல்வரிடம், ‘மீண்டும் சந்திப்போம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னுடன் நேரடியாகப் பேசுங்கள்’ என வாயாற நட்பு பாராட்டியிருக்கிறார் மோடி. ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளித்து, மோடி வைத்திருக்கும் ‘டைம் பாம்’ யாருக்கானது என்பதுதான் அரசியல் அரங்கில் இப்போது அனலைக் கிளப்பியிருக்கும் கேள்வி.

மோடியுடன் ஸ்டாலின்
மோடியுடன் ஸ்டாலின்

தொடர்ச்சியாக இரண்டு பொதுத்தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்றவுடனேயே, தி.மு.க மீதான அணுகுமுறையில் டெல்லி தன் பார்வையை மாற்றிக்கொண்டதாகக் கூறுகிறார்கள் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள். நம்மிடம் பேசிய பா.ஜ.க தேசிய அணியின் பிரமுகர் ஒருவர், “2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க பெற்ற வெற்றி, டெல்லி பா.ஜ.க தலைமையிடம் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், மோடிக்கு அவ்வளவு இனிப்பானதாக இருக்காது. ஒருபக்கம் நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத் மூலமாக பா.ஜ.க-வுக்குள்ளேயே அவருக்கு எதிராக கலக முகங்கள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. கட்சிக்குள்ளேயே மோடியைப் பிடிக்காத ஒரு கூட்டணி உருவாகியிருக்கிறது. மற்றொருபுறம், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே என பிராந்தியத் தலைவர்கள் மோடிக்கு எதிராகக் கச்சைகட்டுகிறார்கள். இந்த எதிர்ப்பு மனநிலை நீடித்தால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய வெற்றி பாதிப்பு வெகுவாக பாதிக்குமென மோடி கருதுகிறார். அதற்காகத்தான், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கும் தி.மு.க-வுடன் நட்பாகிக்கொள்ள நினைக்கிறார்.

``பிரதமர் மோடி கோழையைப்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" - பிரியங்கா காந்தி சாடல்!

காங்கிரஸ் கட்சியைத் தன் கூட்டணியிலிருந்து தி.மு.க கழற்றிவிட்டாலே, பா.ஜ.க-வுக்கு பெரிய லாபம்தான். பா.ஜ.க-வுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்துக்கொண்டால் இரட்டிப்பு லாபம். அதற்காகத்தான் ஸ்டாலினுக்கு டெல்லியில் முக்கியத்துவம் தரப்பட்டது. தன்னுடைய திட்டங்களையெல்லாம் விமர்சித்து, அவற்றை நீக்க வேண்டும், வாபஸ் பெற வேண்டும் என 25 நிமிடங்கள் ஸ்டாலின் தன்னிடம் பேசியபோது, பிரதமர் மோடி அமைதியாகக் கேட்டுக்கொண்டதற்குப் பின்னணியில் இந்தக் கூட்டணிக் கணக்கு இருக்கிறது. தன்னைத் தீவிரமாக விமர்சிக்கும் தி.மு.க-வைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டால், அதைவைத்தே தேசிய அளவில் தன் இமேஜை உயர்த்திக்கொள்ளலாம் என்பது மோடியின் எண்ணம். ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் மூலமாகப் பந்தை வீசியிருக்கிறார் மோடி. விக்கெட் விழுகிறதா என்பதெல்லாம் பொறுத்திருந்தால்தான் தெரியும்” என்றார்.

சோனியா, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின்
சோனியா, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின்

மோடியின் இந்தப் பந்து தன்னைச் சாய்ப்பதற்காக பறந்து வருவதை அறிந்துதான் தனது பயணத் திட்டத்தையே மாற்றியமைத்தாராம் ஸ்டாலின். மோடியைச் சந்தித்துவிட்டு ஜூன் 17-ம் தேதியே சென்னை கிளம்புவதாக தீர்மானித்திருந்த ஸ்டாலின், கூடுதலாக ஒருநாள் தங்கியிருந்து சோனியா காந்தியைச் சந்தித்தது இதன் பின்னணியில்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எதிர்க்கட்சி கம்யூனிஸ்ட் தலைவர்களான டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் சந்தித்து, ‘நான் மதச்சார்பற்ற கூட்டணியில்தான் தொடர்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

‘மம்தா பாணி’ வேண்டாம்... உருமாறிய ஸ்டாலின்

நம்மிடம் பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் பேசிய அரசியல் வியூக வகுப்பாளர் ஒருவர், “2024 நாடாளுமன்றத் தேர்தலில், தனக்குப் போட்டியாக எவரும் உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் மோடி தீர்மானமாக இருக்கிறார். ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமாக, அவருடைய இமேஜை தேசிய அளவில் உயர்த்தப்பார்க்கிறார் மோடி. இதன் மூலமாக, ஸ்டாலினின் ஈகோவைக் கிளறிவிடுகிறார். மறைந்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு நிகராக தேசிய அளவில் முக்கியத்துவம் தரப்படுவதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினுடைய கருத்துக்கு எதிர்கட்சிகளிடம் மதிப்பு கூடுதலாக இருக்கும். தன்னுடைய இமேஜ் உயர்ந்திருப்பதாக எண்ணி, காங்கிரஸ் கட்சி ஒதுக்கும் இடங்களை ஸ்டாலின் குறைப்பார் என மோடி எதிர்பார்க்கிறார். தவிர, மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால், அவரை ஏற்றுக்கொள்வதற்கு ஸ்டாலினின் ஈகோ இடமளிக்காது என்பது மோடியின் திட்டம். ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்படுவதெல்லாம் இதைக் கணக்கிட்டுத்தான்” என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தாலும் சரி, அமைக்காவிட்டாலும் சரி, தனக்கெதிராக ஒரு வலுவான தலைமை உருவாகிவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார் மோடி. பிராந்தியக் கட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்து, ஈகோவை மறந்து கரம் கோத்தால் மோடியின் பாடு திண்டாட்டம்தான். அதற்கு தடைபோடும்விதமாகத்தான், எதிர்கட்சித் தலைவர்கள் வரிசையிலுள்ள ஒரு தலைவரை முன்னிலைப்படுத்தியும், ஒரு தலைவரைச் சிறுமைப்படுத்தியும் தன் ஆட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறார் மோடி. இந்த ஆட்டம் ஸ்டாலினுக்கும் புரிந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிடுவதால், தனக்கு எந்த லாபமும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார் ஸ்டாலின். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையில் இந்த ஆடுபுலி ஆட்டம் தொடரத்தான் செய்யும்.

அடுத்த கட்டுரைக்கு