Published:Updated:

`நவம்பரில்’ பன்னீர்... எடப்பாடியை எச்சரித்த உளவுத்துறை?! - பசும்பொன் செல்லாமல் தவிர்த்தது ஏன்?

கடந்த ஆண்டு குருபூஜையின்போது, அ.தி.மு.க-வினர் வைத்திருந்த பேனரில், பன்னீர் - எடப்பாடியின் படங்கள் கிழிக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களெல்லாம் நிழலாடியதால், பசும்பொன்னுக்குச் செல்வதைப் பற்றி எடப்பாடியும் யோசித்திருக்கிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது பிறந்தநாள் மற்றும் 59-வது குருபூஜை விழா, கடந்த அக்டோபர் 28-ம் தேதியிலிருந்து அக்டோபர் 30-ம் தேதி வரை விமர்சையாக அனுசரிக்கப்படுகிறது. விழாவின் இறுதிநாளான இன்று, விழாவில் பங்கேற்பதற்காக தென்மாவட்டங்களுக்குப் பயணமான முதல்வர் ஸ்டாலின், மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், பசும்பொன்னிலுள்ள தேவரின் கோயிலில் மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். நேற்று, அக்டோபர் 29-ம் தேதி பசும்பொன்னுக்கு சசிகலா சென்றபோது, சிலம்பாட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தேவரின் கோயிலில் மூன்று நிமிடங்களுக்கு அமர்ந்து தியானமும் மேற்கொண்டார் சசிகலா. இந்தச் சூழலில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வரவில்லை. நந்தனத்தில் எடப்பாடியும், பெரிகுளத்தில் பன்னீரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். `சசிகலா தரப்பினரால் பிரச்னை வரலாம் என்று கருதியே இருவரும் பசும்பொன்னுக்கு வருவதைத் தவிர்த்துவிட்டனர்' என்று அ.தி.மு.க வட்டாரத்தில் அனல் பறக்கிறது.

நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி
நந்தனம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி

இந்தச் சர்ச்சை குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் தென்மாவட்டச் செயலாளர்கள் சிலர், "தேவர் குருபூஜையின்போது, அ.தி.மு.க-வின் சார்பில் மூத்த தலைவர்கள் பசும்பொன்னில் நேரில் அஞ்சலி செலுத்துவது மரபு. அக்டோபர் 2016-ல், ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அப்போதைய மூத்த அமைச்சர்கள் பலரும் பசும்பொன்னில் மரியாதை செலுத்தினர். ஆனால், இந்த வருட குருபூஜையில் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் யாரும் நேரில் பங்கேற்காதது அ.தி.மு.க தொண்டர்களைச் சுணங்க வைத்திருக்கிறது. சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்ததால், பன்னீர் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறார். தவிர, தன்னை மறைமுகமாக விமர்சித்து ஜெயக்குமார் அளித்த பேட்டியும் பன்னீரின் கோபத்தை அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில்தான், 'குருபூஜை விழாவில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் கலந்துகொள்ள வேண்டும்' என்று நிர்வாகிகள் பலரும் கேட்டோம்.

``சசிகலா இணைப்பு குறித்த ஓ.பி.எஸ் கருத்தில் என்ன தவறு இருக்கிறது?!" - செல்லூர் ராஜூ

'என் மனைவி இறந்து 60 நாள்கூட முடியலை. அதற்குள்ளாக தேவர் கோயிலுக்கு வருவது சடங்கு சம்பிரதாயப்படி சரியல்ல. நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு, நான் பசும்பொன்னுக்கு வந்து மரியாதை செலுத்துகிறேன்' என்று எங்கள் கோரிக்கையை நாசுக்காகத் தவிர்த்துவிட்டார் பன்னீர். இதே கோரிக்கையை எடப்பாடியிடமும் கொண்டு சென்றோம். எந்த பதிலும் சொல்லாமல் தவிர்த்தார் அவர். இந்தச் சூழலில்தான், உளவுத்துறையைச் சேர்ந்த சில மூத்த அதிகாரிகள் எடப்பாடியிடம் பேசியிருக்கிறார்கள். `உங்களுக்கு எதிரான மனநிலை பசும்பொன்னில் தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில், நீங்கள் அங்கு சென்றால், தேவையற்ற பிரச்னை ஏற்படும். யோசித்து முடிவெடுங்கள்' என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படிதான், அவர்கள் எடப்பாடியிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 2008-ல், குருபூஜைக்குச் சென்ற ஜெயலலிதாவின் கார் கண்ணாடி கல்வீச்சில் உடைக்கப்பட்டது. கடந்த ஆண்டு குருபூஜையின்போது, அ.தி.மு.க-வினர் வைத்திருந்த பேனரில், பன்னீர் - எடப்பாடியின் படங்கள் கிழிக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களெல்லாம் நிழலாடியதால், பசும்பொன்னுக்குச் செல்வதைப் பற்றி எடப்பாடியும் யோசித்திருக்கிறார்.

பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பன்னீர்செல்வம்
பெரியகுளத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பன்னீர்செல்வம்

இந்த நிலையில்தான், அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. குடலிறக்க அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டதால், தையல் போட்டிருந்த இடத்தில் கடுகடுப்பும் அவருக்கு இருந்திருக்கிறது. உடனடியாக, அக்டோபர் 29-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆன எடப்பாடிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், அக்டோபர் 30-ம் தேதி, நந்தனத்திலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆக மொத்தம், குருபூஜை தினத்தில் கழகத்தின் இரு தலைவர்களுமே பசும்பொன் செல்லாததால், சசிகலா தரப்பின் கை ஓங்கியிருக்கிறது" என்றனர்.

பசும்பொன்னில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்
பசும்பொன்னில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

பசும்பொன்னில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடிக்கு எதிராக அங்கு கோஷமிட்டதால், சிறு சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சுதாரிப்பாக அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகளும் போலீஸாரும் நிலைமையைச் சமாளித்ததால், அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. பசும்பொன்னில் அஞ்சலி செலுத்த அ.தி.மு.க தலைவர்கள் நேரில் செல்லாதது, ஒருவித அதிருப்தியை தென்மாவட்ட அ.தி.மு.க-வில் உருவாக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு