Published:Updated:

``குட்டக் குட்ட குனியுற கூட்டம் நாங்க இல்ல!" அ.தி.மு.க-வுக்கு எதிராக ஏன் கொதித்தார் பிரேமலதா?

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த் ( File Photo: S.Kumaresan / Vikatan )

கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வுக்கு எதிராக ஏன் கொந்தளித்தார் பிரேமலதா? ஓர் அரசியல் பார்வை

ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தே.மு.தி.க-வினரை கௌரவிக்கும் விதமாக, நேற்று தே.மு.தி.க தலைமையகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதுதவிர, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிக்கு நேற்று 30வது ஆண்டு திருமணநாள் என்பதால், வாழ்த்துச் சொல்ல கட்சி தலைமையகத்தில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமான பேர் கூடியிருந்தனர்.

தனது சாலிகிராமம் வீட்டில் காலையிலேயே கேக் வெட்டி திருமணநாளைக் கொண்டாடிய விஜயகாந்த், தன் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவுடன் காலை 10:30 மணிக்கு கோயம்பேடு அலுவலகத்துக்கு வந்தார். தொண்டர்கள் முன்னிலையில் பலத்த கரகோஷத்துடன் தம்பதி மாலை மாற்றிக் கொண்டனர். விஜயகாந்தின் காலில் விழுந்து பிரேமலதா ஆசி வாங்கினார்.

இருவரையும் வாழ்த்திப் பேசிய விஜயகாந்தின் மைத்துனரும் கழகத் துணைச் செயலாளருமான எல்.கே.சுதீஷ், ``அ.தி.மு.க கூட்டணியில் நமக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித இடமே உள்ளாட்சித் தேர்தலில் ஒதுக்கப்பட்டது. இப்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் 80 சதவிகித இடங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். கடலூர் மாவட்டத் துணை சேர்மன், 15 ஒன்றிய துணை சேர்மன் பதவிகள் தே.மு.தி.க-வுக்கு கிடைத்துள்ளன. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தே.மு.தி.க-வுக்கு இந்த வெற்றி விகிதாசாரம் குறைவுதான். மீதமுள்ள மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது மாவட்டச் சேர்மன் பதவியையும் நாம் எட்டிப் பிடிப்போம்" என்று சூளுரைத்தார்.

`10 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த அறை அது!' -பொன்னாருக்கு அதிர்ச்சி கொடுத்ததா கமலாலயம்?

இந்த விழாவின் `ஹைலைட்'டே பிரேமலதாவின் பேச்சுதான். ``கூட்டணி தர்மத்துக்குக் கட்டுப்பட்டுதான் நாங்க அ.தி.மு.க கூட இருக்கிறோம். குட்டக் குட்ட குனியுற கூட்டம் நாங்க இல்ல" என்று எடுத்த எடுப்பிலேயே அ.தி.மு.க-வை போட்டுத் தாக்கிய பிரேமலதா, ``எங்க பலம் என்னங்கறது எங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டிலேயே முதன்மையான கட்சியா தே.மு.தி.க உருவெடுக்கும் காலம் ரொம்ப தொலைவில் இல்ல. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கு. இப்ப இருந்தே அதற்காக உழைக்க ஆரம்பிக்கணும். எந்தக் கூட்டணி, எவ்வளவு சீட் என்பதையெல்லாம் கேப்டன் பார்த்துக்குவார்" என்று சீறிவிட்டு அமர்ந்தார்.

பிரேமலதா
பிரேமலதா

இறுதியாக மைக் பிடித்த விஜயகாந்த், ``நான் மீண்டும் வருவேன். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்" என்று தடுமாற்றக் குரலில் சொன்னதைக் கூட நம்பிக்கை வார்த்தைகளாக தே.மு.தி.க-வினர் கொண்டாடினார்கள். அ.தி.மு.க கூட்டணியில் 80 சதவிகிதம் இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக எல்.கே.சுதீஷ் கூறினாலும், அதற்கு நேர் எதிர் கருத்தைத்தான் பிரேமலதா கூறியிருக்கிறார். `பிரேமலதா பேச்சின் பின்னணி என்ன?', கேள்வியுடன் தே.மு.தி.க மாநில நிர்வாகி ஒருவருடன் பேசினோம்.

``நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான பங்கீட்டை மாவட்டச் செயலாளர்களிடம் பேசி முடிவெடுத்துக்கொள்ளும்படி அ.தி.மு.க தலைமை கூறிவிட்டது. ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவு பங்கீடு கிடைக்கவில்லை. குறிப்பாக கடலூர், தர்மபுரி, சேலம் ஆகிய மூன்று மாவட்ட சேர்மன் பதவிகளை எதிர்பார்த்தோம். முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் சேலத்தை ஒதுக்க முடியாது என்றாலும் தர்மபுரி, கடலூர் மாவட்ட சேர்மன் பதவிகளை எங்களுக்கு ஒதுக்கியிருக்கலாம். ஆனால், கடலூர் துணைச் சேர்மன் பதவியை மட்டும் அ.தி.மு.க-வினர் ஒதுக்கினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி ஒன்றியங்கள், தர்மபுரி மாவட்டத்தில் அரூர், காரியமங்கலம் ஒன்றியங்கள், மதுரையில் தே.கல்லுப்பட்டி, திருமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் தலைவர் பொறுப்பை எதிர்பார்த்தோம். ஆனால், 15 ஒன்றியங்களில் துணைத் தலைவர் பொறுப்பை அளித்து அமைதி காக்க சொல்லிவிட்டனர். ஊராட்சி ஒன்றியங்களைப் பொறுத்தவரை, தலைவராக இருப்பவருக்குத்தான் அதிகாரம் அதிகம். இதன்மூலமாகத்தான் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு நிறைவேற்றிட முடியும். எங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற அ.தி.மு.க பதவி கிடைத்தவுடன் எங்களை ஓரங்கட்டிவிட்டது. இந்தக் கோபத்தில்தான், `குட்டக் குட்ட குனியுற கூட்டம் நாங்க இல்ல' என்று பிரேமலதா கொதித்தார்" என்றார்.

ரஜினியின் அரசியல் வருகை, பலம் பெற்றிருக்கும் தி.மு.க என பல்முனை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அ.தி.மு.க-விடம் இருந்து, தனக்கு வேண்டிய இடங்களைப் பெற்றுக்கொள்ள பிரேமலதா ஆடும் அரசியல் சதுரங்கம்தான் இது
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி
`தர்ணா செய்யுமளவுக்கு அப்படியென்ன நடந்துவிட்டது?' - கனிமொழியைச் சாடிய அமைச்சர் கடம்பூர் ராஜு

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். ``அ.தி.மு.க கூட்டணியில் நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்தித்த தே.மு.தி.க எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தக் கூட்டணியில் இருப்பதால் எந்த லாபமும் இல்லை என்பதுதான் பிரேமலதா பேச்சின் வெளிப்பாடு. அதற்காக இவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. ரஜினியின் அரசியல் வருகை, பலம் பெற்றிருக்கும் தி.மு.க என பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அ.தி.மு.க-விடம் இருந்து, தனக்கு வேண்டிய இடங்களைப் பெற்றுக்கொள்ள பிரேமலதா ஆடும் அரசியல் சதுரங்கம்தான் இது" என்றார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலை விரைவில் நடத்திட அ.தி.மு.க முடிவு செய்துள்ள நிலையில், அத்தேர்தலில் குறிப்பிடத்தக்க பதவிகளைப் பிடித்தே ஆகவேண்டுமென்று தே.மு.தி.க முடிவு செய்துள்ளதாம். இப்போதிருந்தே அ.தி.மு.க-வை நெருக்கினால்தான், பங்கீட்டை நமக்கு லாபகரமாக முடிக்க முடியுமென்று காய்நகர்த்துகிறார்களாம். கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலை அ.தி.மு.க எப்படி சமாளிக்கப் போகிறது என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு