Published:Updated:

ஆர்.என்.ரவி: சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்! -நாகாலாந்து ஆளுநர் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டதன் பின்னணி

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

`நாகாலாந்தில் ஆர்.என்.ரவி இருந்தால் பேச்சுவார்த்தையைத் தொடர முடியாது’ என்று நாகாலாந்து அரசியல் அமைப்புகள் கூறிவிட்டன.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்திருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், `தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. புதுச்சேரியில் கிரண் பேடியை ஆளுநராக நியமித்து, அம்மாநில அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்தது. அதுபோல, தமிழகத்தில் ஸ்டாலின் அரசுக்கு இடையூறு செய்ய இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் புதிய ஆளுநருக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் பரிமாறப்பட்டுவருகின்றன.

ஆர்.என்.ரவியின் தொடக்கமே இவ்வளவு சர்ச்சையாகியிருக்கும் நிலையில், ``அவரின் நியமனத்தில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா... நாகாலாந்து ஆளுநர் பொறுப்பிலிருந்து அவர் ஏன் மாற்றப்பட்டார்?” என பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்.

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி

நம்மிடம் பேசிய பாஜக டெல்லித் தலைவர்கள் சிலர், ``பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திர நாராயண் ரவி, 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சில காலம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்தவர். 1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.என்.ரவிக்கு கேரள மாநில கேடர் ஒதுக்கப்பட்டது. அம்மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் அவர் பணியாற்றியிருந்தாலும், சி.பி.ஐ-யில் அவர் பணியாற்றியபோதுதான் அவர் பெயர் டெல்லி வட்டாரங்களில் பிரபலமானது. மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் வடகிழக்கு மாநிலங்களை கவனிக்கும் பொறுப்பிலும் அவர் இருந்தார். உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக இருந்து 2012-ல் ஓய்வுபெற்ற ஆர்.என்.ரவி, தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு மிக நெருக்கமானவர். இந்த நெருக்கம்தான், 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், ஆர்.என்.ரவியை கூட்டு உளவுக்குழுவுக்கு தலைவராக்கியது.

ஆர்.என்.ரவி: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம்!

நாகாலாந்து மாநிலத்தைப் பிரித்து, அதனுடன் அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை ஒன்றிணைத்து, `நாகாலிம்’ என்கிற தனி நாடு கோரி ஆயுதமேந்திய போராட்டம் நடைபெற்றது. இந்திய அரசுடன் 1997-ல் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, ஆயுதப் போராட்டத்துக்கு `நேஷனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து (ஐசக் - முய்வா) போன்ற அமைப்புகள் முற்றுப்புள்ளி வைத்தன. அன்றிலிருந்து இன்றுவரை, இந்தச் சமாதான ஒப்பந்தத்தை இறுதிவடிவம் செய்யத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

2014-ல் மோடி அரசு பொறுப்பேற்றவுடன், இந்திய அரசின் சார்பில் நாகாலாந்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் லால் என்பவரை பணியமர்த்த முடிவெடுக்கப்படது. அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த முடிவை எடுத்தார். ஆனால், அஜித் தோவலின் அழுத்தம் காரணமாக, இந்திய அரசின் பேச்சுவார்த்தைக்குழுத் தலைவர் பொறுப்பு ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட்டது. ஆனால், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ரவி சரியாகச் செய்யவில்லை. `நேஷனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து (ஐசக் - முய்வா)’ அமைப்புக்கு மட்டும் அவர் முக்கியத்துவம் அளிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு, `அது மிகப்பெரிய இயக்கம். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தவறில்லை’ என்று ரவி பதிலளித்தார். இந்த பதில் மற்ற இயக்கங்களையும், அரசியல் அமைப்புகளையும் கோபமடையச் செய்தன. இதற்கிடையே 2019-ல் நாகலாந்து மாநில ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டார்.

`கொடநாடு சம்பவத்தின்போது நீங்கள்தான் முதல்வர்!’ - ஸ்டாலின் - பழனிசாமி காரசார விவாதம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் ஆளுநரானதிலிருந்து நிலைமை மேலும் மோசமடைந்தது. நாகாலாந்தில் பாஜக கூட்டணியிலுள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நெபியூ ரியோ-தான் ஆட்சி நடத்துகிறார். அவர் ஆட்சிக்கு எதிரான கருத்துகளையே ரவி பேசியது கூட்டணிக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. நாகாலாந்து மக்கள், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றதாக சமீபத்தில் ஒரு கருத்தை ரவி பேசினார். இதை `நாகாலாந்து மாணவர்கள் கூட்டமைப்பு’ கடுமையாக கண்டித்ததோடு, `நாங்கள் எப்போதுமே தனி அங்கமாகத்தான் செயல்பட்டிருக்கிறோம். இந்திய விடுதலைப் போரில் நாகா மக்களையும் இணைத்து இந்திய ஒன்றியத்துக்குள் எங்களை ஐக்கியப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டாம்’ என்று கண்டித்தனர். பிரதமர் அலுவலகத்துக்கும் புகார்கள் சென்றன.

பன்வாரிலால் புரோஹித் - ஆர்.என்.ரவி
பன்வாரிலால் புரோஹித் - ஆர்.என்.ரவி

நிலைமை மோசமாவதை உணர்ந்த பிரதமர், சமாதானப் பேச்சுவார்த்தையைச் சரிசெய்யும் பொறுப்பை மத்திய உளவுத்துறை இயக்குநர் அரவிந்த் குமாரிடம் ஒப்படைத்தார். `தேசிய நாகா அரசியல் குழு’-வுடன் மத்திய உளவுத்துறை பேசியபோது, `நாகாலாந்திலிருந்து ரவியை வெளியேற்றாமல், இனி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது’ என்றுவிட்டனர். இதைத் தொடர்ந்துதான், வேறு வழியில்லாமல் நாகாலாந்து ஆளுநர் பொறுப்பிலிருந்து ரவி மாற்றப்பட்டு, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது ஒருவகையில் `மீசையில் மண் ஒட்டவில்லை’ கதைதான். ரவியை கெளரவமாக வெளியேற்றியதால், இனி நாகாலாந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று மத்திய அரசு நினைக்கிறது. பஞ்சாப்பில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், தங்களுக்குத் தோதான பன்வாரிலால் புரோஹித்தை அம்மாநில ஆளுநர் பொறுப்பில் நியமித்திருக்கிறார்கள். மற்றபடி, ரவி தமிழகத்துக்கு ஆளுநர் ஆனதில் வேறெந்த பின்புலமும் இல்லை” என்றனர்.

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி, தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு