Published:Updated:

``விஜய்யின் கருத்துக்கு அ.தி.மு.க-வில் இருந்துமட்டும் ஏன் எதிர்ப்பு?”- எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி

``நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் அமைச்சர்கள், அ.தி.மு.க-வினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனத் தெரியவில்லை” என விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

vijay and director chandra sekar
vijay and director chandra sekar

அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள `பிகில்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், ``பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்துல யார் மேல பழி போடுறதுனு தெரியாம லாரி டிரைவர் மேலயும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுறாங்க. யாரை எங்கு வைக்க வேண்டுமோ.. அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்” என விஜய் பேசினார்.

director chandra sekar
director chandra sekar

இது பெரும் சர்ச்சையானது. விஜய்யின் இந்தப் பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசனும் ஆதரவாகப் பேசினார். `யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு சரியாகத்தான் மக்கள் வைத்துள்ளார்கள். விஜய்யைக் கேட்டுத்தான் யாரை எங்கு வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை' என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது, விஜய் பேசியது குறித்தும், அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ``சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பேனர் விழுந்து விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைப் பற்றி எல்லோருமே பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

director chandra sekar
director chandra sekar

இப்படி, அனைவரும் பேசிவரும் ஒரு விஷயத்தைப் பற்றிதான் விஜய்யும் பேசினார். நீதிமன்றமே சுபஸ்ரீயின் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனக் கேள்வி கேட்டிருந்தது. இந்த நிலையில், விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் அமைச்சர்களும், அ.தி.மு.க-வினரும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனத் தெரியவில்லை” என்றவரிடம், ``விஜய்யின் மேடைப்பேச்சு அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியா?” என கேட்டதற்கு ``அப்படி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆளை விடுங்கள், அவசரமாகப் போகணும்” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.