Published:Updated:

``என் குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வரமாட்டோம்''- பால் தாக்கரே சொன்ன இடத்திலேயே பதவியேற்கும் உத்தவ்!

மனோகர் ஜோஷியின் பதவியேற்பு விழாவை ராஜ் பவனில் நடத்தாமல், சிவசேனா தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிவாஜி மைதானத்தில்தான் பால்தாக்கரே நடத்தினார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே  எரியூட்டப்பட்டபோது...
சிவசேனா தலைவர் பால் தாக்கரே எரியூட்டப்பட்டபோது...

'பொறுமை கடலினும் பெரிது' என்பார்கள். மகாராஷ்டிர அரசியலில் பொறுமை இல்லாத காரணத்தால், பாரதிய ஜனதா பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள். பல ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்தவை. தாங்கள் இல்லையென்றால் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது என்பது உறுதியான பின்னரே, சிவசேனா முரண்டு பிடித்தது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பக்கம் சாய்ந்த பிறகு, அந்தக் கூட்டணியை ஆட்சியமைக்க விட்டு பாரதிய ஜனதா பொறுமை காத்திருக்கலாம்.

உத்தவுடன் தேவேந்திர பட்னாவிஸ்
உத்தவுடன் தேவேந்திர பட்னாவிஸ்

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக, அஜித் பவாரை நம்பி மூக்கை உடைத்துக்கொண்டுள்ளது பாரதிய ஜனதா. அஜித்பவார் ஏற்படுத்திய குழப்பத்தால், முன்பு இருந்ததைவிட காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வலுவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைப்பது ஒன்றும் புதிதல்ல. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கூட்டணி அமைத்துள்ளது. பாரதிய ஜனதா தற்போது எதிரியானதால், சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் உறவை வலுப்படுத்தவே விரும்பும். இல்லையென்றால் 5 ஆண்டுகள் காலத்தை ஓட்ட முடியாதே!

மகாராஷ்டிராவில் இப்போது பாரதிய ஜனதா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக தாக்கரே குடும்பத்திலிருந்து ஒருவர் முதல்வராகிறார். ஆனால், சிவசேனா கட்சியைத் தொடங்கும்போது, மகாராஷ்டிர மக்களுக்கு பால் தாக்கரே கொடுத்த வாக்குறுதி, 'நானோ என் குடும்பத்தினரோ ஒருபோதும் ஆட்சி அதிகாரத்தில் அமர மாட்டோம்' என்பதுதான். தற்போது, உத்தவ் தாக்கரேயின் பதவியேற்பு விழா நடக்கும் இதே தாதர் சத்ரபதி சிவாஜி மைதானத்தில்தான் 1966-ம் ஆண்டு பால்தாக்கரே சிவசேனாவைத் தொடங்கினார். 'மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே' என்று பால்தாக்கரே முதன்முதலாக முழங்கியதும் இங்கேதான். இந்த முழக்கத்தால் மகாராஷ்டிராவில் வாழ்ந்த மற்ற மாநில மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.

சிவாஜி மைதானம் அருகேயுள்ள சிவசேனா தலைமையகம்
சிவாஜி மைதானம் அருகேயுள்ள சிவசேனா தலைமையகம்

1925-ம் ஆண்டு மும்பையின் மையப்பகுதியில் 28 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டது. விடுமுறை தினங்களில், மைதானத்தில் எள் விடக்கூட இடமில்லாத அளவுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சச்சின், வினோத் காம்ப்ளி போன்ற ஸ்டார் கிரிக்கெட்டர்கள் இந்த மைதானத்திலிருந்து வெளிப்பட்டவர்கள்தாம்.

மும்பையின் மையப்பகுதியில் இருப்பதால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இங்கேதான் தங்கள் கூட்டங்களை நடத்தும். சிவசேனாவின் தலைமை அலுவலகமும் இந்த மைதானத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. 1995-ம் ஆண்டு முதன்முறையாக சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மனோகர் ஜோஷியை பால்தாக்கரே 'டிக்' செய்தார். மனோகர் ஜோஷியின் பதவியேற்பு விழாவை ராஜ் பவனில் நடத்தாமல், சிவசேனா தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிவாஜி மைதானத்தில்தான் பால்தாக்கரே நடத்தினார். பதவியேற்பு விழாவில் லட்சத்துக்கும் அதிகமான சிவசேனா தொண்டர்கள் பங்கேற்றனர்.

``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி!

இதே மைதானத்தில்தான் சிவசேனாவின் இளைஞரணித் தலைவராக ஆதித்யாவை பால்தாக்கரே அறிவித்தார். 2012-ம் ஆண்டு பால்தாக்கரே மறைந்தார். இங்கேதான் பால்தாக்கரேயின் உடல் எரியூட்டப்பட்டது. நாட்டின் முதல் பணக்காரர் அனில் அம்பானி முதல் சாதாரண குடிமகன் வரை பால்தாக்கரேவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பால் தாக்கரே நினைவு இல்லமும் இங்கேதான் அமைந்துள்ளது.

சிவாஜி மைதானம்
சிவாஜி மைதானம்

சமூக ஆர்வலர் பிரபோதன்கர் என்பவரின் மகன்தான் பால்தாக்கரே. பிரபோதன்கர் சிவாஜி மைதானத்தின் அருகில்தான் வசித்தார். பால்தாக்கரே அவரின் சகோதரர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் சிறுவயதில் இதே மைதானத்தில் ஓடியாடி விளையாடிவயர்களே. கார்ட்டூனிஸ்ட்டாக இருந்த தாக்கரே பணியிலிருந்து விலகிய பிறகு, முதன்முதலாக 'மாம்ரிக்' என்ற இதழைத் தொடங்கியதும் இங்கேதான். சிவசேனா ஒவ்வோர் ஆண்டும் தசரா திருவிழாவை வெகு விமரிசையாக சிவாஜி மைதானத்தில் கொண்டாடும். இப்படிப் பல வகையில் சிவசேனாவுடன் நெருங்கிய பந்தம் கொண்ட மைதானத்தில்தான் இன்று உத்தவ் பதவியேற்கிறார். சிவாஜி மைதானத்தில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்சிகளையும் சேர்ந்த 80,000 தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.