Election bannerElection banner
Published:Updated:

சேப்பாக்கம், திருவல்லிக்கேணியை உதயநிதி ஸ்டாலின் டிக் செய்ததன் பின்னணி என்ன?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

பல்வேறு தொகுதிகளின் பெயர்கள் போட்டியிடுவதற்கான பரிந்துரையில் இருந்தபோதும் ஏன் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்று தெரிந்துகொள்ள உதயநிதி ஸ்டாலினின் நெருங்கியவட்டாரத்தில் விசாரித்தோம்.

ஒருவழியாக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத் தேர்தல் களம் இன்னும் விறுவிறுப்பாகப் பற்றி எரியத் தொடங்கும். அதன் ஒரு பகுதியாக கூட்டணி மாற்றம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் நடக்கும் பல நாடகங்களுக்கும் தமிழக மக்கள் சாட்சியாக இருக்கிறார்கள். தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளுடனான கூட்டணிப் பங்கீடுகள் குறித்துப் பேசிவரும் அதேவேளையில் தேர்தலில் போட்டியிடும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு வாங்கும் பணியிலும் தீவிரமாக இருக்கிறது. தி.மு.க இளைஞரணிச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவாரா, இல்லையா என்ற கேள்வி இதுவரை நிலவிவந்தது. அதுமட்டுமல்ல... துறைமுகம், சைதாப்பேட்டை, அண்ணா நகர், திருவாரூர் எனப் பல தொகுதிகள் உதயநிதி போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளவையாகப் பேசப்பட்டன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், எதிர்பார்க்காத நேரத்தில் சென்னை மாவட்டம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கன விருப்ப மனுவை நேற்று கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்ற ஊகங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

உதயநிதி பேசும்போது....
உதயநிதி பேசும்போது....
நா.ராஜமுருகன்

``சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகள் விரும்பினர். ஆட்சி மாற்றத்துக்குத் தயாராக இருப்பதால் தமிழகம் முழுவதும் தற்போது மக்களிடையே நல்ல எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. எனவே, கண்டிப்பாக தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான ஆட்சிதான் அமையும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்ட தொகுதி. அங்கே மக்கள் கலைஞரை ஏற்றுக்கொண்டதால் என்னையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. எனவே, அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம். கலைஞர் என்பவர் ஒருவர்தான். தற்போதுதான் அரசியலில் படிப்படியாக நான் வளர்ந்துவருகிறேன். அரசியலில் மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது ஒரு வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அதை, தலைவர், பொதுச்செயலாளர் பார்த்து முடிவு செய்வார்கள்” என விருப்ப மனு அளித்து வெளியில் வந்த உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Twitter

பல்வேறு தொகுதிகளின் பெயர்கள் உதயநிதி போட்டியிடுவதற்கான பரிந்துரையில் இருந்தபோதும் ஏன் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்று தெரிந்துகொள்ள உதயநிதி ஸ்டாலினின் நெருங்கியவட்டாரத்தில் விசாரித்தோம்.

``தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க தலைவரை முதல்வராக நிச்சயம் பேரவைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று ஒவ்வொரு தொண்டனும் நினைப்பதைப் போலத்தான் உதயநிதி ஸ்டாலினும் நினைக்கிறார். தி.மு.க இளைஞரணிச் செயலாளராக இந்த விஷயத்தில் தனக்குக் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு இருப்பதாகவும் அவர் நினைக்கிறார். எனவே, தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். அதனால்தான் நிச்சயம் தி.மு.க-வுக்கு வெற்றி என்று தெரிந்த ஒரு தொகுதியை உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தமிழக சட்டமன்றத் தொகுதிகளிலேயே மிகவும் சின்னத் தொகுதியாக இருப்பதால், அனைத்து தரப்பட்ட மக்களையும் சந்தித்து தனக்காக வாக்கு சேகரிப்பது மிகவும் எளிது. அதற்கு மிகக் குறைந்த நாள்கள்தான் தேவைப்படும். அப்போதுதான் போட்டியிடும் தொகுதியில் பரப்புரையை விரைவாக முடித்துக்கொண்டு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வாக்கு சேகரிக்கச் செல்ல முடியும் என்பதாலும்தான் இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

மேலும், இந்தத் தொகுதியில் இதுவரை போட்டியிட்ட ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். எனவே, இங்கு போட்டியிடுவதால் பிறருக்கான வாய்ப்பை, தான் பறிப்பதுபோல ஆகிவிடாது என்ற எண்ணமும் இதில் அடங்கியிருக்கிறது” என்றனர்.

மேலும் பேசியவர்கள், ``2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பரப்புரையும் ஒரு காரணம். இதைப் பல மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளே தலைமையிடம் கூறியிருக்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரைக்குக் கிடைத்த வரவேற்பை நேரடியாக கவனித்துவந்தார். எனவே, சட்டமன்றத் தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டால் தி.மு.க கூட்டணி வெற்றிக்கு உதவும் எனத் தலைமை நம்புகிறது. எனவேதான் அவர் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அறிவுறுத்தியது. இந்த முடிவு திடீரென எடுத்த முடிவும் இல்லை. மற்றவர்கள் சொல்வதுபோல வேறு எந்தத் தொகுதியும் உதயநிதி போட்டியிடுவதற்கான பரிந்துரையில் இல்லை. மேலும், கட்சித் தலைவரின் மகன் என்பதால் இந்தச் சலுகை கிடைத்ததாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கக்கூடும். ஆனால், உதயநிதியின் கடந்த இரண்டு ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த பலன் என்பதுதான் உண்மை” என்றும் கூறுகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியை அரசியல்வாதிகள் வார்த்தைகளில் சொல்வதானால் அது தி.மு.க கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். சேப்பாக்கம் தொகுதி தனியாக இருந்தபோது 1977 முதல் நடந்த தேர்தல்களில் 1991 தவிர மற்ற அனைத்து சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க-தான் வெற்றிபெற்றிருக்கிறது. கருணாநிதியும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றிபெற்றிருக்கிறார். அதேபோல திருவல்லிக்கேணி தொகுதி தனியாக இருந்தபோது 1980, 84, 2006-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களைத் தவிர மற்ற எல்லா தேர்தலிலும் தி.மு.க-தான் வெற்றிபெற்றிருக்கிறது. நிர்வாகக் காரணங்களுக்காக 2007-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த இரண்டு தொகுதிகளையும் ஒரே தொகுதிகளாக இணைக்கப்பட்டன. அதன் பிறகு 2011, 2016-ல் நடந்த தேர்தல்களிலும் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெ.அன்பழகன்தான் வெற்றிபெற்றார்.

நிச்சயம் தி.மு.க-வுக்கு வெற்றி உறுதி என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படும் தொகுதிகளில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியும் ஒன்று.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு