Published:Updated:

வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்? தரவுகள் சொல்லும் உண்மை!

Youth
Youth ( Image by Joseph Redfield Nino from Pixabay )

உள்ளாட்சியில் பங்கேற்பதன் மூலம், ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது ஆகிறது.

தமிழ்நாட்டின் மாநில இளைஞர் கொள்கை - 2018, 15 - 35 வயது உள்ளவர்களை இளைஞர்கள் என்று குறிப்பிடுகிறது. இதை தமிழ்நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் இளைஞர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய சரிபாதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இளைஞர்களின் பங்கு, தற்போதுள்ள தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையில் (MLAs) எவ்வளவு உள்ளது என்று பார்த்தால், அவர்களில் ஒருவர்கூட இளைஞர் இல்லை. அதாவது, இளைஞர் என்ற வரையறைக்குள்ளான வயதுக்குள் இல்லை என்று தெரிய வருகிறது.

அதே போல் இந்திய இளைஞர் மேம்பாடு குறியீடு 2017 (India Youth Development Index 2017), இளைஞர்களின் அரசியல் பங்கேற்பில் தமிழ்நாடு 14வது இடத்தைப் பிடித்திருக்கிறது என்கிறது. இந்தத் தரவுகள் தமிழ்நாட்டு இளைஞர்களின் பங்கு அரசியலில் மிகக்குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அரசியலில் இளைஞர்களின் பங்கு மிகக் குறைவாக உள்ளதற்கு முக்கியக் காரணமாக, இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் அரசியல் கற்க ஒரு சரியான தளம் இல்லாததைச் சொல்லலாம்.

பயிற்சி வகுப்புகள்
பயிற்சி வகுப்புகள்

இந்தச் சூழ்நிலையில், இளைஞர்கள் அரசியலில் நுழைவதற்குப் பிரத்யேக பயிற்சி வகுப்புகள் நடத்துவதை மிக முக்கியத் தேவையாகக் காண முடிகிறது. இதில் குறிப்பாக, உள்ளாட்சிகள்தான் இளைஞர்களுக்கு அரசியலில் நுழைவதற்கு ஒரு நல்ல அடித்தளமாக இருக்கிறது. உள்ளாட்சிகளில் இளைஞர்களை பங்கேற்க ஊக்குவிப்பதை, நமது மாநில இளைஞர் கொள்கையும் முக்கிய அம்சமாக குறிப்பிடுகிறது. ஆனால் உள்ளாட்சிகளையும், அதில் இளைஞர்களின் பங்களிப்பையும் யாரும் பெரிதாக முன்னெடுக்கவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு, 2019-ல் தமிழ்நாட்டில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களின் பங்கு (தமிழக இளைஞர் கொள்கை வயது வரம்பின்படி) எவ்வளவு உள்ளது என்பதை, ஓர் ஆராய்ச்சி அறிக்கையாக Institute of Grassroots Governance (IGG) வெளியிட்டது. அதில் தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் 19 சதவிகிதம் இளைஞர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ளதை அறிய முடிகிறது. அதன் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இளம் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஒரு சில பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தது.

இந்த சூழ்நிலையில் ஜூன் 22, 2021-ல் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் நடத்த வேண்டி ஆணையிட்டது.

இதைச் சரியான சமயமாகக் கருதி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சியில் இளைஞர்களின் பங்கு எவ்வளவு என்பதை எடுத்துக்காட்டி...

  • அதிகபட்சமாக 25% - தர்மபுரி

  • 23 % - அரியலூர், திருவள்ளூர் & நீலகிரி

  • 22 % - கிருஷ்ணகிரி, பெரம்பலூர்

  • 21% - திருவண்ணாமலை

மீதமுள்ள 9 மாவட்டங்களில் நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த சதவிகிதத்தைக் காட்டிலும் அதிகப்படியான இளைஞர்கள் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர்களுக்கான சிறப்பு பயிற்சியை IGG அமைப்பு ஆரம்பித்தது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதற்காக இளைஞர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு,

1. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள்

2. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள்

என இரண்டு குழுக்களாகப் பிரித்து முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சியின் பயிற்றுநர்களாக IGG-யின் தரப்பில் இன்பரசன், கவிகண்ணன் குருசாமி பயிற்சி அளித்தார்கள்.

பயிற்சியில் கலந்துகொண்ட பு.வேலு, திருப்பத்தூர் மாவட்ட மோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியிட உள்ளார். பயிற்சியில் அவர் கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றிச் சொல்லும்போது, ``ஓர் ஊராட்சி மன்றத் தலைவருக்குப் போட்டியிடுபவரின் தகுதி என்ன, எப்படி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிந்தது. அதுவும் சரியான நேரத்தில் இந்தப் பயிற்சி நடந்ததால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது'' என்று தெரிவித்தார்.

பறிச்சியில் கலந்துகொண்ட மற்றோரு நபர் க.பெருமாள், விழுப்புரம் நகராட்சி வார்டு கவுன்சிலராகப் போட்டியிட தயார் நிலையில் உள்ளார். ``என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதைப் பற்றி பயிற்சியின் மூலம் அறிந்துகொண்டேன். மற்றும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன்'' என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இளம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் விவரம்

அடுத்தகட்ட பயிற்சியாகத் தேர்தல் அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது, தனிப்பட்ட SWOT (Strengths, Weaknesses, Opportunities, and Threats) பகுப்பாய்வு செய்வது எப்படி என்பதை IGG அமைப்பு கொடுக்க இருக்கிறது.

உள்ளாட்சியில் பங்கேற்பதன் மூலம், ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது ஆகிறது. அதிகப்படியான இளைஞர்கள் உள்ளாட்சியில் பங்கேற்றால், அதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் இளைஞர்களின் பங்கு கூடும்.

- குரு சரவணன்,

தலைவர், Institute of Grassroots Governance (IGG)

அடுத்த கட்டுரைக்கு