Published:Updated:

நழுவும் காயத்ரி ரகுராம்; கொதிக்கும் வன்னியரசு! - மெரினா சவாலை எதிர்கொள்வார்களா?

நாளை மெரினா பீச்சுக்கு காயத்ரி ரகுராம் வருவாரா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை எதிர்கொள்வாரா என்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

இந்துக் கோயில்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த நடிகையும் பி.ஜே.பி பிரமுகருமான காயத்ரி ரகுராம், திருமாவளவனை பார்த்த இடத்தில் அடிக்க வேண்டுமெனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் வீட்டை வி.சி.க-யினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை முற்றியது.

திருமாவளவன், காயத்ரி ரகுராம்
திருமாவளவன், காயத்ரி ரகுராம்

வி.சி.க-யினர் போராட்டத்தைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு வரும் மிரட்டல்களை நேரலையாக காயத்ரி ரகுராம் ஒளிபரப்பினார். மேலும், `வரும் நவ.27-ம் தேதி காலை நான் மெரினா பீச்சுக்கு வருகிறேன். முடிந்தால் திருமாவளவன் என்னை நேருக்குநேர் அங்கு சந்தித்து விவாதிக்கட்டும். எதற்கும் நான் தயார்' என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதைப் பதிவிட்ட சில மணிநேரத்திலேயே காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. விதிமுறையை மீறியதால், காயத்ரியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்தது.

காயத்ரி ரகுராமின் சவால் குறித்து டெல்லியிலிருந்து ஃபேஸ்புக் மூலம் நேரலையாகப் பேசிய திருமாவளவன், ``இந்துக் கடவுள்களையோ மதத்தையோ தாக்கும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. பி.ஜே.பி-யின் எதேச்சதிகார போக்கைக் கண்டித்துப் பேசுவதால், என்னை இந்துமத விரோதியாகச் சித்திரிக்க சிலர் முயல்கின்றனர். அவர்களின் எண்ணம் பலிக்காது” என விளக்கமளித்தார்.

காலைத் தடுக்கிவிட்டு விளையாடும் சிறுவர்களைப் போல, காயத்ரி ரகுராம் விளையாடுவதற்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது.
வன்னியரசு, வி.சி.க

` நவ.27-ம் தேதி, திட்டமிட்டபடி மெரினா பீச்சுக்கு வருவீர்களா?' என காயத்ரி ரகுராமிடம் கேட்டோம். `` நான் முக்கியமான சில வேலைகளில் இருக்கிறேன். பிறகு உங்களிடம் பேசுகிறேன்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

இதுதொடர்பாக, வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் பேசினோம். ``பி.ஜே.பி-யின் கொள்கைகள், அவர்களின் அரசியல் குறித்தெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இச்சூழலில், காலை தடுக்கிவிட்டு விளையாடும் சிறுவர்களைப் போல, காயத்ரி ரகுராம் விளையாடுவதற்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. எங்களது நோக்கத்தை மடைமாற்றும் எந்தச் செயலும் வெற்றிபெறாது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம்” என்று முடித்துக்கொண்டார்.

திட்டமிட்டபடி காயத்ரி ரகுராம் நாளை மெரினா பீச்சுக்கு வருவாரா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை எதிர்கொள்வாரா என சமூக வலைதளத்தில் விவாதம் கிளம்பியிருக்கிறது. நாளை, மெரினா பீச்சில் அனுமதியின்றி கூட்டம் கூடுவதைத் தடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவு சென்றுள்ளது.