Published:Updated:

`உள்ளாட்சி இல்லாவிட்டால் எம்.எல்.ஏ-வுக்குப் போட்டியிடுவேன்!'- பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி

``மக்கள் சேவை செய்ய உள்ளாட்சி அல்லது எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது'' என்று பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி தெரிவித்தார்.

பொன்னாருடன் நடிகை ஜெயலட்சுமி
பொன்னாருடன் நடிகை ஜெயலட்சுமி

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகை ஜெயலட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து பா.ஜ.க-வில் இன்று சேர்ந்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

திடீரென பா.ஜ.க-வில் சேர்ந்துள்ளீர்கள். என்ன காரணம்?

நடிகை ஜெயலட்சுமி
நடிகை ஜெயலட்சுமி

நான் திடீரென பா.ஜ.க-வில் சேரவில்லை. ஏற்கெனவே மிஸ்டு கால் மூலம் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டேன். சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்த நான், தேசிய கட்சி ஒன்றில் சேர்ந்து மக்கள் சேவை செய்ய விரும்பினேன். அதற்காக சில நாள்களாக ஆலோசித்தேன். இதனால்தான் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து பா.ஜ.க-வில் உறுப்பினராக சேர்ந்துவிட்டேன்.

முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உங்களிடம் என்ன பேசினார்?

நடிகை ஜெயலட்சுமி
நடிகை ஜெயலட்சுமி

தொடர்ந்து செயல்படுங்கள். தேவை என்றால் என் செல்போன் நம்பரைத் தொடர்புகொள்ளுங்கள் என்று கூறினார். மேலும், என்னுடைய சமூக சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மக்கள் சேவை செய்ய பா.ஜ.க-வை தேர்வு செய்தது ஏன்?

நடிகை ஜெயலட்சுமி
நடிகை ஜெயலட்சுமி

இன்றைய காலகட்டத்தில் பா.ஜ.க மட்டும்தான் மக்கள் பணியை சரியாகச் செய்துவருகிறது. ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜ.க நடத்திவருகிறது. மற்ற கட்சிகள் ஆட்சி நடத்தியபோது ஊழல் தலைவிரித்தாடியது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட சீனப் பிரதமரை மாமல்லபுரத்தில்தான் பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார். தமிழகத்தின் வளர்ச்சியிலும் பா.ஜ.க அக்கறை செலுத்திவருகிறது. இதனால்தான் பா.ஜ.க-வை தேர்வு செய்தேன்.

`பிரதமர் மோடி மீதான ஈர்ப்பே  காரணம்!'- பா.ஜ.க-வில் இணைந்த நடிகை ஜெயலட்சுமி

பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டீர்கள். உங்களின் அடுத்த பிளான் என்ன?

நடிகை ஜெயலட்சுமி
நடிகை ஜெயலட்சுமி

பா.ஜ.க-வின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். அதோடு மக்கள் சேவையில் ஈடுபட, வரும் உள்ளாட்சி அல்லது சட்டசபை தேர்தலில் தமிழக பா.ஜ.க சார்பில் போட்டியிட திட்டம் உள்ளது. பா.ஜ.க தலைமை என்னைத் தேர்வு செய்தால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன். தாமரைச் சின்னத்தில் வெற்றியும் பெறுவேன்.