Published:Updated:

டெல்லி கொடுத்த க்ரீன் சிக்னல்.. எதிர்கட்சித்தலைவர் ஆகிறாரா பன்னீர்செல்வம்?

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி தரப்பிலோ, 'மேற்கிலும் வடக்கிலும் தான் கட்சி அதிக தொகுதிகளை ஜெயித்துள்ளது. அப்படி இருக்க எப்படி ஓ.பி.எஸ்-ஸை எதிர்க்கட்சித் தலைவராக்க முடியும்?' என்றார்கள்.

நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன் வென்று இன்றைய தினம் ஸ்டாலின் முதல்வராகவும் பதவியேற்ற கொண்டுவிட்டார். இந்த சூழலில் சட்டமன்ற எதிர்கட்சிக் தலைவராக இன்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ. பன்னீர் செல்வம்
ஓ. பன்னீர் செல்வம்

இது பற்றி அ.தி.மு.க சீனியர் ஒருவரிடம் பேசினோம், "பல்வேறு நிர்பந்தங்களுக்கு மத்தியில்தான் கடந்தாண்டு, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார் பன்னீர். பல தடவை ஏமாந்தவர் இம்முறை ஏமாறத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. 'நான்காண்டுகள் முதல்வராக இருந்துவிட்டீர்கள், ஆட்சி தொடர்ந்து இருந்தால் மீண்டும் முதல்வர் நீங்கள்தான். ஆனால், எதிர்க்கட்சியாக அமரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும் நீங்களே அனுவிப்பீர்கள் என்றால் நான் எதற்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கணும்? இந்த 5 ஆண்டு நான்தான் எதிர்க்கட்சித் தலைவர்' என்று பன்னீர் ஓப்பனாக எடப்பாடியிடம் சொல்லிவிட்டாராம்.

எடப்பாடி தரப்பிலோ, 'மேற்கிலும் வடக்கிலும் தான் கட்சி அதிக தொகுதிகளை ஜெயித்துள்ளது. தெற்கில் சோபிக்கவே இல்லை. அப்படி இருக்க எப்படி ஓ.பி.எஸ்-ஸை எதிர்க்கட்சித் தலைவராக்க முடியும்? முதல்வராக இருந்த, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்தான் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க வேண்டும்' என்றிருக்கிறார்கள்.

துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இரு தினங்களுக்கு முன்பு பன்னீரை சந்தித்து இது குறித்து பேசினார். அப்போது கூட ஓ.பி.எஸ் கட் அண்டு ரைட்டாக சொல்லிவிட்டாராம். இருவரும் விட்டுக்கொடுக்காத நிலையில் இப்பிரச்னை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாம்.

“கட்சிக்காக விட்டுக் கொடுங்கண்ணே!”
- சமரசம் பேசிய முனுசாமி; உடன்படாத பன்னீர்
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

``கருணாநிதி முதல்வராக இருந்த போதே சட்டமன்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வழி நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவை முன்னவராகவும் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவர். மூன்று முறை முதல்வராகப் பணியாற்றியவர். இதற்கெல்லாம் மேலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பதால் ஓ.பி.எஸ்-தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும். தற்போது வலிமையான எதிர்க்கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவதே சரியாக இருக்கும்” என டெல்லியும் சொல்லிவிட்டதாம்.

ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் அமைச்சர் தங்கமணி மூலமாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், அதனை எடப்பாடியும் ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். அதனால், இன்று மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வம் முறைப்படித் தேர்வு செய்யப்படலாம்" என்றனர். முடிவு இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்..!

அடுத்த கட்டுரைக்கு