Published:Updated:

தங்கத்தின் கையில் இருந்த தேனி அ.தி.மு.க அலுவலகம்! - கைப்பற்றுவாரா ஓ.பி.எஸ்?

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

கட்சி அலுவலகத்தை இதுவரை நிர்வகித்துவந்த தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க பக்கம் சென்றுவிட்ட சூழலைப் பயன்படுத்தி, அலுவலகத்தைக் கைப்பற்ற ஓ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

தேனி மாவட்டம் பி.சி பட்டியில் அமைந்துள்ளது அ.தி.மு.க அலுவலகம். மாவட்டத்தின் கட்சித் தலைமை அலுவலகமாக இருக்கும் இதை, தங்க தமிழ்ச்செல்வன் நிர்வகித்து வந்தார். தற்போது அவர் தி.மு.க பக்கம் இருப்பதால், அ.தி.மு.க அலுவலகத்தை நிர்வகிக்க யாரும் இல்லாமல் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்கு வந்துவிட்டது.

தேனி மாவட்ட அ.தி.மு.க அலுவலகம்
தேனி மாவட்ட அ.தி.மு.க அலுவலகம்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரு முதல்வர்களை உருவாக்கிய தேனி மாவட்டத்தில், பல ஆண்டுகளாக, அ.தி.மு.க-வுக்கு என சொந்தமாக ஒரு கட்சி அலுவலகம் கூட இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, தேனி நகர் அருகே பி.சி பட்டி என்ற இடத்தில் மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகம் கட்டப்பட்டது. இதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

அலுவலக கட்டடம் இருக்கும் இடம், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பெயரில் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கலவரத்தில், தேனி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தை கைப்பற்ற ஓ.பி.எஸ் பெரிதும் முயற்சி எடுத்தார். ஆனால், டி.டி.வி தினகரன் அணியில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. காரணம், பூங்குன்றன் டி.டி.வி அணியில் இருந்தார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

கட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் அணியினருக்கும், ஓ.பி.எஸ் அணியினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால், எப்போதும் கட்சி அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

தேனி மாவட்ட அ.தி.மு.க அலுவலகம்
தேனி மாவட்ட அ.தி.மு.க அலுவலகம்

இந்நிலையில், கட்சி அலுவலகத்தை இதுவரை நிர்வகித்துவந்த தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க பக்கம் சென்றுவிட்ட சூழலைப் பயன்படுத்தி, அலுவலகத்தைக் கைப்பற்ற ஓ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசியபோது, ``கட்சி அலுவலகம் கட்ட இடம் தேர்தெடுத்தது முதல், கட்டட வேலைகளை தினமும் சென்று பார்ப்பதுவரை அனைத்து வேலைகளையும் செய்தவர் ஓ.பி.எஸ் தான். அப்போது தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டச் செயலாளராக இருந்தார். அவர் கொடுத்த நெருக்கடிகளையும் கடந்து, ஜெயலலிதா சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக பொறுமையாக கட்டட வேலைகளை முடித்து, தேனிக்கு ஜெயலலிதாவை வரவழைத்து கட்டடத்தை திறக்கவைத்தார்.

இந்த அலுவலகத்தை வைத்து பல பிரச்னைகள் நடந்திருக்கிறது. அதனால், மீண்டும் அந்த அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் செல்வார் என உறுதியாக சொல்ல முடியாது.
ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

தற்போது ரவீந்திரநாத் குமாருக்கு என தேனியில் ஓர் அலுவலகம் தயார் செய்ய இருக்கிறார் ஓ.பி.எஸ். அந்த அலுவலகம் கூட இனி கட்சி அலுவலகமாக செயல்படலாம்” என்றனர். இவர்களின் பஞ்சாயத்தில் கட்டட வளாகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை கேட்பார் இன்றி இருக்கிறது.