Published:Updated:

``உங்க அப்பா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்" இளகிய ராமதாஸ்; நெக்குருகிய ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராமதாஸ் இல்ல விழாவில் ஸ்டாலின்
ராமதாஸ் இல்ல விழாவில் ஸ்டாலின்

கொரோனா வைரஸ் பரவலால் பொதுவெளிக்கு வராத ராமதாஸ், தன் பேத்தியின் திருமண நிகழ்வில்தான் முதன்முறையாக பொதுமக்களைச் சந்தித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சித் தலைவர்களைப் பார்த்தவுடன் குஷி மூடுக்கு வந்துவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தின் பல அரசியல் கணக்குகளே திருமண வைபவங்களில் புரட்டிப் போடப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியின் இளைய மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, அதேபோன்றதொரு எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் உருவாக்கியிருக்கிறது.

அன்புமணியின் மகள் சங்கமித்ராவுக்கும், சோழிங்கநல்லூரைச் சேர்ந்த தனசேகரனின் மகன் ஷங்கர் பாலாஜிக்கும் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது. சென்னையிலுள்ள ஐ.டி.சி சோழா ஹோட்டலில் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டது பலரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. தன் பேத்தியை வாழ்த்த வந்த முதல்வர் ஸ்டாலினிடம் மனம்விட்டு சில விஷயங்கள் பேசியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

ஸ்டாலினை வரவேற்கும் அன்புமணி
ஸ்டாலினை வரவேற்கும் அன்புமணி

சங்கமித்ரா - ஷங்கர் பாலாஜியின் திருமண வரவேற்பில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து, பா.ம.க தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ``கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து பொதுவெளிக்கு வருவதை ராமதாஸ் தவிர்த்தேவந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குக்கூட காரில் இருந்தபடியேதான் பிரசாரத்தில் ஈடுபட்டார். பேத்தியின் திருமண நிகழ்வில்தான் முதன்முறையாக பொதுமக்களைச் சந்தித்தார் ராமதாஸ். அதுவும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சித் தலைவர்களைப் பார்த்தவுடன் குஷி மூடுக்கு வந்துவிட்டார். வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தன் அமைச்சர் பட்டாளத்துடன் மகன் சகிதமாக ஸ்டாலின் வந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. வாசல் வரை வந்து அன்புமணி ராமதாஸும், பா.ம.க தலைவர் கோ.க.மணியும் முதல்வரை வரவேற்றனர்.

அண்ணாமலை ஆட்டம், ராமதாஸ் ரூட்; பதறும் எடப்பாடி !

மேடையில் ராமதாஸைப் பார்த்தவுடன் நெக்குருகிவிட்டார் ஸ்டாலின். `ரொம்ப வருஷமாச்சு நாம நேர்ல பார்த்து... எப்படி இருக்கீங்க?' என்று முதல்வர் நலம் விசாரிக்கவும், நெகிழ்ந்துபோன ராமதாஸ், 'உங்க அப்பா இப்போ இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்' என்று மனம் இளகிவிட்டார். உதயநிதியை முதல்வருடன் பார்த்த ராமதாஸ், வாஞ்சையுடன் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நிகழ்வதால், விழா மேடையே உணர்ச்சிவசமானது.

நிகழ்வில் அமைச்சர்களுடன் ஸ்டாலின்
நிகழ்வில் அமைச்சர்களுடன் ஸ்டாலின்

அப்போது இடத்தைக் கலகலப்பாக்கியது துரைமுருகன்தான். அன்புமணியைப் பார்த்து, 'இரண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணிட்டீங்க. ஆனாலும் உங்களுக்கு வயசான மாதிரி தெரியலையே' என்று கலகலப்பூட்டவும், மேடையில் சிரிப்பொலிச் சத்தம் கேட்டது. தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒரு பெரிய 'கிஃப்ட் பார்ச'லோடு வந்து மணமக்களை வாழ்த்தினார். 'இந்த ஃபார்மாலிட்டிலாம் எதற்கு?' என்று அன்புமணி கேட்டபோது, 'எங்க வீட்டு பிள்ளைகளுக்கு நான் கொடுக்குறேன்' என்று உரிமையுடன் பதிலளித்தார் தமிழிசை.

அன்புமணி ராமதாஸ் வாழ்க்கை வரலாறு - பசுமைத்தாயகம் முதல் 10.5% இட ஒதுக்கீடு வரை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தன் பரிவாரங்களுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், அவர் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணனும் வந்தபோது பலரது புருவமும் உயர்ந்தது. வந்தவர்களை, "வாங்க சண்முகம், நல்லா இருக்கீங்களா?" என்று பாசத்தோடு அழைத்தார் ராமதாஸ். பழைய கசப்புகளை மறந்து அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றதை பா.ம.க-வினரே எதிர்பார்க்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, கே.எஸ்.அழகிரி, தி.மு.க எம்.பி கனிமொழி, நடிகர்கள் சந்தானம், வடிவேலு ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர். அரசியல் பிரமுகர்களின் திருமண நிகழ்வில்தான் பல அரசியல் திருப்பங்கள் அரங்கேறும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தன் அமைச்சர் பட்டாளத்தோடு பா.ம.க தலைவரின் வீட்டு விசேஷத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது" என்றனர்.

நிகழ்வில் சி.வி.சண்முகம், சி.வி.ராதாகிருஷ்ணன்
நிகழ்வில் சி.வி.சண்முகம், சி.வி.ராதாகிருஷ்ணன்

பா.ம.க-வினரிடையே தி.மு.க மீதான கரிசனப் பார்வை விழுந்திருந்தாலும், இந்தத் திருமண வரவேற்பு நிகழ்வை அரசியல் சார்பற்ற நிகழ்வாகவே பார்க்க விரும்புகிறாராம் ராமதாஸ். விழாவில் முதல்வருக்கு என்ன முக்கியத்துவத்தை அவர் அளித்தாரோ, அதே முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிசாமிக்கும் அவர் அளித்திருக்கிறார். எடப்பாடியிடம், 'சாப்பிட்டுவிட்டுப் போங்க' என்று ராமதாஸே வாயார கூறியதாகச் சொல்கிறார்கள். எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கும் இந்த திருமண வரவேற்பு, அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்குமா என்பதைப் பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு