Published:Updated:

பாஜக வேட்பாளரைத் திரும்ப பெற கோரிக்கை... மும்பை இடைத்தேர்தலில் உத்தவ் தரப்பு போட்டியின்றி தேர்வா?!

ருதுஜா

மும்பை இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என்று ராஜ் தாக்கரே, சரத் பவார் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக வேட்பாளரைத் திரும்ப பெற கோரிக்கை... மும்பை இடைத்தேர்தலில் உத்தவ் தரப்பு போட்டியின்றி தேர்வா?!

மும்பை இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என்று ராஜ் தாக்கரே, சரத் பவார் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Updated:
ருதுஜா

மும்பை அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு, வரும் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக மறைந்த எம்.எல்.ஏ ரமேஷின் மனைவி ருதுஜா லட்கா போட்டியிடுகிறார். பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் முர்ஜி பட்டேல் போட்டியிடுகிறார். ஆரம்பத்தில் ருதுஜாவை தங்கள் அணி சார்பாகப் போட்டியிடவைக்க பாஜக-வும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் முயற்சி மேற்கொண்டதாகச் சொல்லப்பட்டது. இதற்காக ருதுஜாவின் மாநகராட்சி ஊழியர் வேலைக்கான ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே ருதுஜாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. தற்போது ருதுஜாவுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடித்ததில், ``ருதுஜா போட்டியிடும் அந்தேரி கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடக் கூடாது. அதுவே மறைந்த மக்கள் பிரதிநிதிக்கு அஞ்சலி செலுத்துவதாக இருக்கும். அதோடு வேட்பாளரை நிறுத்தாமல் இருப்பதுதான் நமது மகாராஷ்டிரா கலாசாரத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும். ரமேஷ் லட்கே ஒரு சிறந்த தொண்டர். ரமேஷ் (மறைந்த எம்.எல்.ஏ) தனது அரசியல் பயணத்தைம் கட்சிக் கிளைத் தலைவர் பதவியிலிருந்து ஆரம்பித்தார். அவரது அரசியல் பயணத்தை நான் நேரில் பார்த்தவன்.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

அவரின் மனைவி எம்.எல்.ஏ-வாக மாறினால் ரமேஷின் ஆத்மா சாந்தியடையும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக இந்தக் கோரிக்கை தொடர்பாக ராஜ் தாக்கரே முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். ராஜ் தாக்கரே இந்தக் கோரிக்கையை விடுத்த சில மணி நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், ருதுஜா இந்தத் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக சரத் பவார் விடுத்திருக்கும் கோரிக்கையில், ``மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், மும்பை மாநகராட்சி மற்றும் சட்டமன்றத்தில் ஆற்றிய சேவையை கவனத்தில்கொள்ள வேண்டும். அதோடு எம்.எல்.ஏ பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது. எனவே, ருதுஜாவை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும். பாஜக தலைவர் கோபிநாத் முண்டே இறந்தபோது அவரின் தொகுதியில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை” என்பதையும் சரத் பவார் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சரத் பவார்
சரத் பவார்

அந்தேரி கிழக்கு தொகுதியில் 3-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று கடைசி நாள். இது குறித்து பாஜக வேட்பாளர் முர்ஜி பட்டேல் கூறுகையில், `கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் போட்டியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக’ தெரிவித்திருக்கிறார். ராஜ் தாக்கரேயிடமிருந்து கடிதம் வந்திருப்பதை தேவேந்திர பட்னாவிஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார். ``இந்தக் கோரிக்கை குறித்து கட்சித் தலைவர்களுடனும், முதல்வர் ஷிண்டேயுடனும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். ராஜ் தாக்கரேயின் கோரிக்கை நல்லெண்ணத்தில்தான் இருக்கிறது. ஆனால் இதில் நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது” என்று குறிப்பிட்டார். உத்தவ் தாக்கரேயும் இதற்காக சரத் பவாரைப் பாராட்டியிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே புதிய சின்னம் மூலம் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அது மக்கள் மனதில் பதிந்துவிடும். அதைத் தடுக்க வேண்டுமானால் ருதுஜா தேர்தலில் போட்டியிடாமல் வெற்றிபெற வேண்டும். அதைக் கருத்தில்கொண்டே ராஜ் தாக்கரே மூலம் கோரிக்கை விடுக்க வைத்து, வேட்பாளரைத் திரும்பப் பெற பாஜக திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு நடந்த எந்த ஓர் இடைத்தேர்தலுக்கும் ராஜ்தாக்கரே இது போன்ற கோரிக்கையை முன்வைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.